‘பாபநாசம்-2’ படத்தில் கமல்-கவுதமி இணைந்து நடிப்பார்களா..?

‘பாபநாசம்-2’ படத்தில் கமல்-கவுதமி இணைந்து நடிப்பார்களா..?

தென்னிந்தியத் திரையுலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘திருஷ்யம்-2’ படம் நேற்றைக்கு அமேஸான் பிரைம் வீடியோ என்னும் ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது.

புதுமை இயக்குநர் ஜீத்து ஜோஸப்பின் சிறப்பான இயக்கத்தில் முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகமும் வெளியாகியுள்ளது மிகச் சிறப்பான கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகியிருப்பதால் படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் ‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு வெற்றி பெற்ற திரைப்படமாக இது கணிக்கப்படுகிறது.

தியேட்டர்களில் இத்திரைப்படம் வெளியாகியிருந்தால் நிச்சயமாக ‘திருஷ்யம்-1’ படத்தின் ரிக்கார்டுகளை இது முறியடித்திருக்கும் என்பது உறுதி என்கிறார்கள் மோகன்லாலின் ரசிகர்கள்.

இத்திரைப்படம் இப்போது தமிழில் ரீமேக் செய்யப்படுமா என்பது அடுத்தக் கேள்வியாக நேற்றைக்கே அனைத்து சினிமா ரசிகர்களின் மனதிலும் எழுந்துவிட்டது.

காரணம், இதன் ஓடிடி வெற்றியால் இதனை கண்டிப்பாக ரீமேக் செய்தால் அதுவும் வெற்றியாகும் என்றே கருதப்படுகிறது. தமிழில் ‘திருஷ்யம்’ படத்தை ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். கமல், கவுதமி இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.

இப்போது இந்த ‘திருஷ்யம்-2’ படத்தை ரீமேக் செய்தால் கமலும், கவுதமியும் இணைந்து நடித்தாக வேண்டும். கவுதமி இப்போதைய சூழலில் கமல்ஹாசனிடமிருந்து பிரிந்து வெகு தொலைவில் இருப்பதால், அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால், கவுதமிக்குப் பதிலாக வேறு நடிகை நடித்தால் அதனை தொடர்ச்சி போல் பாவிக்க முடியாது என்று சினிமா ரசிகர்கள் கருதுகிறார்கள். தங்களுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளை ஓரம்கட்டி வைத்துவிட்டு திரையுலகத்திற்காக இருவரும் இணைந்து ‘பாபநாசம்-2’ படத்தில் நடிக்க வேண்டும் என்றே தீவிர சினிமா ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

கமல்ஹாசன் தற்போது தேர்தல் வேலைகளில் தீவிரமாக இருப்பதால் மே மாதம் தேர்தல் முடிந்து முதலில் அவர் ‘இந்தியன்-2’, பிறகு ‘விக்ரம்-2’ ஆகிய படங்களை முடிக்க வேண்டும். அதன் பிறகுதான் அடுத்தப் படத்திற்குச் செல்ல முடியும். இந்த 2 படங்களை முடிப்பதற்கே இந்த வருடக் கடைசியாகிவிடும்.

ஆக, இந்த ‘பாபநாசம்-2’ படத்தை அடுத்தாண்டு துவக்கத்தில் நாம் எதிர்பார்க்கலாம்.

ஆனால், கமல்-கவுதமி கூட்டணி இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Our Score