புளூ ஓஷன் எண்ட்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், மாதவ் மீடியா எண்ட்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘ஜீரோ.’
பாலாஜி காபா தயாரித்துள்ள இப்படத்தில், அஸ்வின்(‘மங்காத்தா’, ‘மேகா’, ‘வேதாளம்’ போன்ற படங்களில் நடித்தவர்), ஷிவ்தா(‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்தவர்) ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். ஜே.டி.சக்கரவர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு பாபு குமார். படத்தொகுப்பு ஆர். சுதர்ஷன். இசை – நிவாஸ் கே.பிரசன்னா(‘தெகடி’ பட புகழ்), இயக்கம் ஷிவ் மோஹா.
புளூ ஓஷன் எண்ட்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இந்த ‘ஜீரோ’ திரைப்படம் மூலம், திரைப்பட விநியோகத் துறையிலும் காலடி வைக்கிறது. ‘ஜீரோ’ திரைப்படம், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய திரைக்கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான், இத்திரைப்படத்தை வாங்கும் எண்ணத்தை புளூ ஓஷன் குழுவிற்கு உருவாக்கியிருக்கிறது.
வரும் பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று வெளியிடப்படவிருக்கும் இப்படம், உண்மையான காதல், தடைகளையெல்லாம் தாண்டி, பல ஜென்மங்களிலும் வெற்றி பெறும் என்ற கருத்துடன் ஒரு திரில்லராகவும், சூப்பர் நேச்சுரல் அங்கங்களையும் கொண்டுள்ளது.
இப்படத்தை வெளியிடுவது பற்றி புளூ ஓஷன் எண்ட்டர்டெய்ன்மெண்ட் நிறுவனர் கோ. தனஞ்செயன் பேசும்போது, “ஜீரோ’ திரைப்படத்தின் கதையும், உருவாக்கமும், எங்கள் குழுவிற்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. எங்களின் புதிய முயற்சிக்கு ஒரு சரியான தொடக்கமாக இப்படம் இருக்கும் என்ற நம்பிக்கையில், இப்படத்தின் அனைத்து விநியோக உரிமைகளையும் பெற்று வெளியிடுகிறோம்.
உலகெங்கும் உள்ள உண்மையான காதலர்களுக்கு, இந்தப் படம் ஒரு சிறந்த அர்ப்பணிப்பு. இப்படத்தில் இருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் படம் வெளியான பின் அனைவராலும் பேசப்படும் என்பது உறுதி.
ஒரு திரில்லராகவும், சூப்பர் நேச்சுரல் படமாகவும், காதலை மையமாக கொண்ட இப்படம், எங்களை மிகவும் கவர்ந்தது போல, பார்வையாளர்களை கவரும் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்தப் படம் போல, புதிய முயற்சிகளை தொடர்ந்து ஊக்குவிக்கும்வகையில் புளூ ஓஷன் பயணிக்கும்…” என்றார்.
மாதவ் மீடியா எண்ட்டர்டெய்ன்மெண்ட் நிறுவனரான பாலாஜி காபா படம் பற்றி பேசும்போது, “ஜீரோ’ எங்களின் முதல் முயற்சி. இப்படத்தை மிகுந்த கவனத்துடனும், ஆர்வத்துடனும் தயாரித்துள்ளோம். எந்த சமரசங்களும் செய்யாமல் எடுக்கப்பட்ட இந்த சிறந்த படத்தை, அதே போல நல்ல சினிமாவை தர துடிக்கும் நிறுவனத்தின் மூலம் விநியோகிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அந்த எண்ணம் சினிமாவில் பல வருடங்கள் அனுபவமுள்ள கோ.தனஞ்செயன் தலைமையில் உள்ள புளூ ஓஷன் நிறுவனம் மூலம் நிறைவேறுகிறது. புளூ ஓஷன் குழு இப்படத்தை சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தணிக்கை செய்யப்பட்ட ‘ஜீரோ’ திரைப்படம், காதலர்களை மையப்படுத்தியுள்ளதால், உண்மையான காதலர்களுக்கு அர்ப்பணிப்பாக, காதலர் தினமன்று வெளிக்கொண்டு வர புளூ ஓஷன் குழு முயற்சி செய்து வருகிறது. இத்திரைப்படத்தின் இசை ஜனவரி இறுதியில் வெளியிடப்பட உள்ளது..” என்றார்.