இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது மகனான இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு 3-வது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் ஒரு முஸ்லீம் பெண்ணுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தகவல்..
இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டாவது மகன் யுவன்சங்கர் ராஜா. இவர், தமிழில் ‘அரவிந்தன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.
யுவன்சங்கர் ராஜாவுக்கு ஏற்கனவே லண்டனைச் சேர்ந்த சுஜாயா என்ற பெண்ணுடன் 2005–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார்கள். பின்பு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2008-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தார்கள்.
அதன் பிறகு, ஷில்பா என்பவருக்கும், யுவன்சங்கர் ராஜாவுக்கும் காதல் மலர்ந்தது. 2011–ல் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்கள். சில மாதங்களிலேயே இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.
பின்பு, யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை அப்துல்லா என மாற்றிக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், யுவன்சங்கர் ராஜா ஜபருன்னிஸார் என்பவரை மணக்க இருக்கிறாராம். ஜபருன்னிஸார் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்தவர். துபாயில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார்.
யுவன்சங்கர் ராஜா–ஜபருன்னிஸார் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நேற்று முன்தினம் ரகசியமாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் துபாயில் நடக்க உள்ளதாகத் தெரிகிறது.