வாசன் விஷூவல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 2017-ம் ஆண்டு துவக்கப்பட்ட திரைப்படம் ‘யங் மங் சங்’. பீரியட் டைப் படமான இந்தப் படம், செல்போனெல்லாம் வருவதற்கு முந்தைய 1970-80-களில் நடைபெறும் கதையைக் கொண்ட திரைப்படம்.
தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரபுதேவா, லட்சுமி மேனன், தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, பிரபாகரன், உமா பத்மநாபன், சித்ரா லட்சுமணன், அஸ்வின் ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ், இசை – அம்ரேஷ், படத் தொகுப்பு – எஸ்.என்.பாசில், என்.நிரஞ்சன் அந்தோணி, எழுத்து, இயக்கம் – எம்.எஸ்.அர்ஜூன்.
“இந்தப் படம் நடிகர் பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும்..” என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான கே.எஸ்.சீனிவாசன்.
இந்தப் படம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட கே.எஸ்.சீனிவாசன், “பிரபுதேவா ஸார்தான் இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு இயக்குநர் அர்ஜூனை என்னிடத்தில் அனுப்பி வைத்தார்.

நானும், தம்பி சிவராமனும் கதையைக் கேட்டோம். எங்களுக்கும் பிடித்திருந்தது. பிரபுதேவா ஸாரின் மார்க்கெட்டுக்குத் தகுந்தாற்போல் ஆர்ட்டிஸ்ட்டுகளையும், டெக்னீசியன்களையும் புக் செய்து படத்தைத் துவக்கினோம்.
காலச் சிக்கலால் சில, பல சிரமங்களையும் தாண்டி இப்போது படத்தை முழுமையாக முடித்துவிட்டோம். படத்தையும் நாங்கள் பார்த்துவிட்டோம். சில விநியோகஸ்தர்களுக்கும் படத்தைப் போட்டுக் காட்டினோம். படம் பார்த்த அனைவருமே ‘பிரபு தேவாவுக்கு இது மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக இருக்கப் போகிறது’ என்று வாழ்த்தினார்கள்.
இந்தப் படத்தை அநேகமாக அடுத்த மாதம் 2021 பிப்ரவரியில் வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளோம்..” என்றார் கே.எஸ்.சீனிவாசன்.