full screen background image

உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ‘என்னை அறிந்தால்’ படம்..!

உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ‘என்னை அறிந்தால்’ படம்..!

தமிழ்த் திரைப்படத் துறையில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘தல’ அஜீத் நடித்திருக்கும் இந்தப் படம் வழக்கம்போல பெரும் எதிர்பார்ப்பை ஏற்றியிருக்கிறது.

உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 1000 தியேட்டர்களிலும், தமிழ்நாட்டில் 450 தியேட்டர்களிலும் இந்தப் படம் ரிலீஸாகவுள்ளது.

நேற்று இரவு துவங்கிய முன் பதிவு திட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அடுத்த 3 நாட்கள் ஹவுஸ்புல் என்று சொல்ல வைத்துவிட்டது. இணையம் மூலமாக அணுகியவர்களுக்கு சிஸ்டம் ஹேங் ஆனதுதான் மிச்சம். 

பொதுவாக அஜீத்தின் படங்களுக்கு நள்ளிரவு காட்சிகளும் உண்டு. விடியற்காலை 4 மணிக்கெல்லாம் காட்சிகளை ஓட்டுவார்கள். சென்னையில் காசி திரையரங்கில் மட்டுமே விடியற்காலை காட்சி நடைபெறும். புறநகரில் திருவள்ளூரில் நடைபெறும். ஆனால் இந்த முறை அந்தக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரசிகர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

அஜீத் படம் ரிலீஸாகும் தியேட்டர்களுக்கு குண்டு வைப்போம் என்று யாரோ சிலர் சில தினங்களுக்கு முன்பாக மிரட்டியதையடுத்து விடியற்காலை காட்சிகளை ரத்து செய்யும்படி காவல்துறை அறிவுறுத்தியதாம். அதனால்தான் ரத்து என்கிறார்கள். காலை காட்சி 7 மணிக்குத் துவங்கவிருக்கிறதாம்.

திரிஷா, அனுஷ்கா என்று இரண்டு முக்கிய நடிகைகள் நடிப்பதால் சில வருடங்களாக பிரிந்திருந்த கெளதம் மேனனும், ஹாரிஸ் ஜெயராஜும் இந்தப் படத்தின் மூலமாக சேர்ந்திருப்பதாலும் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்.

சில தினங்களுக்கு முன்பாக தனது மனைவி ஷாலினி மற்றும் குடு்ம்பத்தினருடன் படத்தைப் பார்த்த அஜீத் தனக்கு முழு திருப்தி என்று கூறியிருக்கிறார்.

படத்தில் சில வன்முறை காட்சிகள் இருப்பதால் யு/ஏ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது. இதனை மேல்முறையீடு செ்யய நினைத்து பின்பு நேரமில்லாததால் அதனை விட்டுவிட்டார்களாம்.. இதனால் வசூலாகின்ற தொகையில் 30 சதவிகிதத்தை தமிழக அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தயாரிப்பாளர்.

ஆனாலும் எப்படியும் அஜீத்தின் முந்தைய படங்களைவிடவும், ஏன் சமீபத்தில் ரிலீஸான ‘கத்தி’, ‘லிங்கா’, ‘ஐ’ படங்களின் வசூலைவிடவும் இந்தப் படம் அதிக வசூலைத் தொடும் என்று உறுதியாக நம்புகிறார்கள் படத்தினை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்கள்.

Our Score