full screen background image

“ஆந்திராவுக்கே போகப் போறேன்..” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் திடீர் முடிவு..!

“ஆந்திராவுக்கே போகப் போறேன்..” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் திடீர் முடிவு..!

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகரான அல்லு அர்ஜுன் முதன்முதலில் தமிழில் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘என் பெயர் சூர்யா; என் வீடு இந்தியா’. இத்திரைப்படத்தை ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் நாகபாபு தயாரித்துள்ளார். 

‘துப்பறிவாளன்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த அனு இமானுவேல், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

படத்தில் அர்ஜுன், நதியா, சாருஹாசன், ஹரிஷ் உத்தமன் என்று தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமான நடிகர்களும் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சரத்குமார் ‘புலன் விசாரணை’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

வரும் மே 4-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளர் ஆகிய மூன்று மொழிகளிலும் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

டப்பிங் படங்களுக்கே உரித்தான வகையில் ஹீரோவும், ஹீரோயினும் எஸ்கேப். படத்தின் இயக்குநர்கூட வரவில்லை. படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி, படத்தை தமிழில் வெளியிடும் ‘சக்தி பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான சக்திவேலும், கூடுதலாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும், படத்திற்கு வசனம் எழுதியிருக்கும் இயக்குநர் விஜய் பாலாஜியும் மேடையேறினார்கள்.

En-Peyar-Surya-En-Veedu-India-Press-Meet-1

படத்தின் தலைப்பே தேசப் பற்றை மையப்படுத்திய படம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியது. முன்னதாகத் திரையிடப்பட்ட படத்தின் டிரெய்லரும் இதைத்தான் உறுதிப்படுத்தியது.

விழாவில் தயாரிப்பாளர் ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி பேசும்போது, “ஆந்திராவில் ஞானவேல்ராஜா ஒரு பிராண்ட். அவர் வெளியிட்ட அனைத்து படங்களுமே வெற்றிப் படங்கள்தான். அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படத்தை ஞானவேல்ராஜாதான் தயாரிக்கிறார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் நடித்த ‘லட்சியம்’ படத்துக்கு பிறகு இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும்  எடுக்க ஆசைப்பட்டோம். சில காரணங்களால் டப் செய்து மட்டுமே வெளியிட முடிந்தது. போஸ்ட் புரோடக்‌ஷன்ஸ் பணிகளை விஜய் பாலாஜி சிறப்பாக செய்து கொடுத்தார்.

IMG_0103

அல்லு அர்ஜூன் கேரியரில் இது ஒரு சிறந்த படம். இந்த படத்தை பார்த்தவுடன் ‘என் பெயர் ஸ்ரீதர்; என் வீடு இந்தியா’ என்றுதான் சொல்ல தோன்றியது. ‘பாகுபலி’, ‘பாகமதி’ உட்பட தெலுங்கு படங்களை தமிழ்நாட்டில் முழுமனதோடு வரவேற்ற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. இந்த படத்துக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்…” என்றார். 

வசனகர்த்தா விஜய் பாலாஜி பேசும்போது, “பாகுபலி’க்கு பிறகு இந்திய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்த படத்தில் நான் வேலை செய்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கதாபாத்திரம்தான் நாயகன் அல்லு அர்ஜூன் கதாபாத்திரம்.

‘தளபதி’ ரஜினி சார், நடிகர் சூர்யா என சூர்யாவுக்கும், தமிழ் சினிமாக்கும் மிகப் பெரிய தொடர்பு உள்ளது. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஒரு வந்தே மாதரம் மாதிரி விஷால் சேகருக்கு இந்த ஆல்பம் இருக்கும். படத்துக்கு தேவையான அனைத்தையும் தயாரிப்பாளர்கள் வழங்கி இருக்கிறார்கள். படத்தை பார்க்கும்போது அந்த பிரம்மாண்டத்தை  ரசிகர்கள் உணர்வார்கள்…” என்றார். 

IMG_0130

விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “50 நாட்கள் கழித்து இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. 

இந்த இடைப்பட்ட 50 நாட்கள்  என்னைப் போன்ற சிலருக்கு சுயமாக சிந்திப்பதற்கு உதவிகரமாக இருந்திருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும்.. எப்படி செய்ய வேண்டும் என்பதை யோசிக்கவும் வைத்திருக்கிறது.

இந்த வேலை நிறுத்தத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் தலைமையில் நிறைய தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.

இப்போது புதிய முயற்சியாக ‘நடிகர்களுக்கு இவ்வளவுதான் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக ஒரு குழுவை நியமிக்கலாம்’ என்று நடிகர் சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் நடிகர் கார்த்தி முன் மொழிந்திருக்கிறார். இதனை நான் வரவேற்கிறேன்.

ஆந்திராவை பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அங்கு தயாரிப்பாளர்கள், நடிகர்களிடையே ஒற்றுமை இருக்கிறது. அதனால் தெலுங்கு திரைத்துறையே சுபிக்‌ஷமாக இருக்கிறது. மும்பையில்கூட தெலுங்கு சினிமா பற்றிதான் பேச்சு இருக்கிறது.

ஏனென்றால் தெலுங்கில் இப்போதும் ஒரு பெரிய பட்ஜெட் படம்.. 100 கோடி செலவில் தயாராகிறது என்றால் அதில் ஹீரோவின் சம்பளம் 15 கோடிதான். அதிலும் வெறும் 50 லட்சத்தை முன் பணமாகப் பெற்றுக் கொண்டு நடிக்க வருகிறார்கள். படம் முடிந்து, வியாபாரம் ஆன பின்புதான் முழுத் தொகையையும் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால்தான் தெலுங்கு சினிமாவுலகம் இப்போதும் ஆரோக்கியமாக உள்ளது.

ஆனால் தமிழில் அப்படியா இருக்கிறது.? இங்கே 100 கோடி பட்ஜெட் என்றால் அதில் பாதியான 50 கோடியை ஹீரோ தன் சம்பளமாக கேட்கிறார். அவருக்கே பாதித் தொகையை சம்பளமாக கொடுத்துவிட்டால் மீதியை வைத்து என்ன செய்வது..? படம் தோல்வியடைந்தால் ஏற்படும் நஷ்டத்தை தயாரிப்பாளர் மட்டுமே சுமக்க வேண்டும்.

இன்னொரு பக்கம் காமடி நடிகர்களும் தங்கள் பங்குக்கு சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்கள். 2 படங்கள் வெற்றி பெற்றால் போதும் அவ்வளவுதான்.. அந்த காமெடி நடிகர் தினத்துக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்கிறார். கூடவே ஜி.எஸ்.டி. வரியையும் தயாரிப்பாளர்களே செலுத்த வேண்டுமாம்.

இந்தக் கொடுமைகளுக்கு யார் முடிவு கட்டுவது..? இதனால்தான் சொல்கிறோம்.. நடிகர்களின் சம்பளத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஒழுங்குபடுத்த வேண்டும். படங்களுக்கேற்றாற்போல சம்பளம் என்பதுபோல வரைமுறைப்படுத்த வேண்டும்.

நடிகர் சங்கத் தலைவர் நாசரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலும் இணைந்து இதனை செய்து முடிக்க வேண்டும். அப்போதுதான் என்னை மாதிரியான தயாரிப்பாளர்கள் நிம்மதியாக, நஷ்டமில்லாமல் படங்களை தயாரிக்க முடியும்.

இந்த நிலைமை தமிழ்ச் சினிமாவில் வந்து ஒரு வருடத்தில் நிலைமை சீரடையாவிட்டால் நான் ஆந்திராவுக்கே போய்விடுவதாக எண்ணியுள்ளேன். அங்கே அலுவலகம்கூட வாங்கிவிட்டேன். எனெனில் அங்கு தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது. அது இங்கு இல்லை..

கூடுதலாக தெலுங்கு சினிமாவில் கதாசிரியர்களுக்கு நல்ல மரியாதை இருக்கு. அங்கே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சினிமா எழுத்தாளர்கள் இருக்காங்க.  ஆனால், தமிழ்ச் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு இடமேயில்லை. கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நம்மிடையே குறைவா இருக்கு.

ஒரு ஹீரோவோட டேட் கிடைச்சிருச்சுன்னா அவருக்கு தோதான இயக்குநர்கிட்ட போய் இந்த ஹீரோவுக்காக ஒரு படம் பண்ணிக் கொடுங்கன்னு கேக்குற நிலைமைதான் இப்போ இருக்கு. இந்த நிலைமையும் மாறணும். திறமையான எழுத்தாளர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடமிருந்து சிறந்த கதைகளை வாங்கி அதனை படமாக்க வேண்டும்.. இதனைச் செய்தால் அனைத்து படங்களுமே நன்றாக ஓடும். தமிழ்ச் சினிமாவுலகம் இனிமேல் இந்த விஷயத்துலயும் கவனம் செலுத்தணும்.

அல்லு அர்ஜூன் தனது 18-வது படத்திலேயே மிகவும் அனுபவம் மிக்க  ஹீரோவாக இருக்கிறார். மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியிருக்கிறது.

ஆந்திராவில் எழுத்தாளர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. அப்படி எழுத்தாளராக இருந்த பல பேரும் இன்று முன்னணி இயக்குனர்கள். அப்படி எழுத்தாளராக இருந்த வம்சிதான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அனைத்து மொழிகளிலும் படம் நிச்சயம் வெற்றி பெறும்…” என்றார் ஞானவேல் ராஜா.

sakthivelan

படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது, “பருத்தி வீரன்’ படத்திலிருந்து என் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் ஞானவேல் ராஜாவின் பங்களிப்பு இருந்து வந்திருக்கிறது. ‘பாகுபலி’க்கு பிறகு பல மொழிகளில் எடுக்க நினைத்த படம் இது.

தமிழ்நாட்டில் ஸ்ட்ரைக் நடந்த காரணத்தால் டப்பிங் படமாக வெளியிட வேண்டியதாகிவிட்டது. பல டப்பிங் படங்கள் நேரடி தமிழ் படங்களாக வெளி வரும். ஆனால் இந்த படமோ நேரடி படமாக வந்து இருக்க வேண்டியது. ஸ்டிரைக் மூலம் ஏற்பட்ட சிறிய வேலை தொய்வினால் டப்பிங் படமாகவே வெளி வருகிறது.

‘புலன் விசாரணை’ படத்துக்கு பிறகு சரத்குமார் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இது ஒரு ஆக்‌ஷன் படம் எனபதையும் தாண்டி குடும்ப உறவுகளையும் பிரதிபலிக்கும் படம். முதல் முறையாக இந்த படத்தை பெரிய அளவுக்கு விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன். படத்தின் மீது அந்த அளவு நம்பிக்கை இருக்கிறது…” என்றார்.

Our Score