கோவை பிலிம் பேக்டரி தயாரிப்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரித்தும், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், நடிகர் வைபவ் முருகேசன் மற்றும் பூர்ணிமா ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் டிராமா ‘யெல்லோ’.
இந்தப் படத்தில் வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி, நமீதா கிருஷ்ணமூர்த்தி, சாய் பிரசன்னா, டெல்லி கணேசன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், லீலா சாம்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து & இயக்கம்: ஹரி மகாதேவன், தயாரிப்பு: பிரசாந்த் ரங்கசாமி (Covai Film Factory), இசை: ஆனந்த் காசிநாத், கிளிஃபி கிரிஷ், ஒளிப்பதிவு: அபி ஆத்விக், எடிட்டிங்: ஶ்ரீ வாட்சன், கலை இயக்கம்: கார்த்திக் கிருஷ்ணன், மக்கள் தொடர்பு: பரணி அழகிரி, வெளியீடு: உத்ரா புரடக்ஷன்ஸ்.
இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் ஒளித்து வைத்திருக்கும் பல ஆச்சரியங்களை மையமாகக் கொண்ட இந்த “யெல்லோ” திரைப்படம், ஒரு மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள உணர்ச்சி நிறைந்த கமர்ஷியல் டிராமாவாகும்.
“நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளால் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் இந்த தவறுகளை அனுபவிக்கலாம்.. அதில் தப்பில்லை” என்ற ஒரு புதிய தத்துவத்தை உள்ளடக்கி இந்த படம் கதை திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
நாயகி பூர்ணிமா ரவி தன்னுடைய அம்மா, அப்பா, தங்கையுடன் சென்னையில் வசிக்கிறார். அவருடைய அப்பாவுக்கு திடீரென்று பக்கவாதம் வந்து வீட்டில் படுத்த படுக்கையாகிறார். அப்பாவை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பூர்ணிமா ரவிக்கு வருகிறது.
அதே சமயம் பூர்ணிமாவின் காதலன் அவரை பழையபடி எப்போதும்போல் சந்திப்புக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வரும்படி அழைக்கிறான். ஆனால், பூர்ணிமாவால் தன்னுடைய தந்தையின் உடல் நலத்தை முன்னிட்டு அதற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை வர, காதலன் பிரிந்து செல்கிறான்.
பூர்ணிமாவுக்கு வீடும், அலுவலகமும் ஜெயில் போல தெரிகிறது. செக்குமாடு மாதிரி ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்து வருவதால் வெறுப்பில் உழல்கிறார். அவரை விடவும் அவருடைய மனம் மிகவும் உடைந்து போய் இருக்கிறது.
தனக்கு எங்காவது எதிலாவது ஒரு ரிலீஃப் கிடைக்குமா என்று தேடுகிறார் பூர்ணிமா ரவி. அப்போது அவருடைய தந்தை சொல்லும் ஒரு வார்த்தை அவருக்கு வேறு ஒரு வாசலை திறந்து காட்டுகிறது.
தான் சிறுவயதில் கேரளாவில் இருந்த பொழுது தன்னுடன் இருந்த பாட்டி, தன்னுடன் பழகியவர்கள், உடன் படித்தவர்கள்… அவர்களுடைய ஞாபகம் வர அவர்களை தேடி கண்டுபிடிப்பதற்காக ஒரு டிராவலிங் போகலாம் என்று முடிவெடுத்து வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கேரளா நோக்கி ட்ரெயின் ஏற்கிறார் பூர்ணிமா. கேரளாவில் அவர் ஒவ்வொரு இடமாக பயணித்து தான் தேடி வந்த நபர்களை கண்டு பிடிக்கிறார்.
இந்த டிராவலிங் கடைசியாக எங்கே போய் முடிந்தது? பூர்ணிமாவுக்கு அவர் எதிர்பார்த்த ரிலீஃப் கிடைத்ததா? மனம் ஒருநிலை பட்டதா? திரும்பி வந்தாரா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
பிக் பாஸ் பிரபலம் என்பதை தாண்டி சினிமாவில் அதிகமாக நடிக்காத பொன்னிமா ரவி இப்போது இந்த படத்தில் ஹீரோயின் ஆகவே நடித்திருக்கிறார் அவருடைய சுமார் மூஞ்சி இந்த கதைக்கு போதுமான நடிப்பையும் போதுமான திறனையும் கொடுத்திருக்கிறது.
முதல் காட்சிகள் இருந்தே சோக பயப்பட்ட நிலையில் இருக்கும் பூர்ணிமா அந்த கேரக்டர்ஸ் கட்சிக்கு ஏற்றபடியாக முக அவருக்கு அமைந்திருப்பதால் இந்த படத்தின் கதைக்கு பொருத்தமான தேர்வாக அவரு இருக்கிறார் இதற்காக இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
தந்தையை பற்றி கவலைப்படாமல் தங்களுடைய காதல் வாழ்க்கையை பற்றிய பேசும் காதலனின் கன்னத்தில் அறைந்து கோபப்படும் அந்த இடத்தில் பூர்ணிமாவை நமக்கு மிகவும் பிடித்து போகிறது. இப்படித்தான் இருக்க வேண்டும். எப்போதும் இன்பத்தை பற்றியே பேசுபவர்கள். கஷ்ட காலம் வரும்போது நிச்சயமாக நம்முடன் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் பூர்ணிமா தன்னுடைய முதல் காதலனை முறித்துக் கொள்ளும் அந்தக் காட்சியில் அவருடைய நடிப்பு “சூப்பர்மா” என்று சொல்ல வைத்திருக்கிறது.
தன்னுடைய அப்பாவிடம் வாழ்க்கை பற்றி அவர் பேசுகின்ற இடத்திலும், அப்பா சொன்ன ஒரு தத்துவத்தில் அகமகிழ்ந்து அதை செய்வதற்காக அவர் வீட்டைவிட்டு வெளியேறும் அந்த இடத்திலும் பரவாயில்லை என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார்.
கேரளாவில் அவர் சந்திக்கும் நாயகனுடனான அவருடைய நட்பு காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து காதலுக்காக வருவதை அவரே எதிர்பார்த்துதான் நினைத்து வந்த ரிலீப் இதுதான் என்று அவர் கண்டறியும் அந்த இடத்திலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் பூர்ணிமாவின் நடிப்பு பாராட்டு கூறியது.
முதல் காதலனாக நடித்தவர் தன்னுடைய கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் கேரளாவில் வழி துணைக்கு வந்து கடைசியாக வழிகாட்டியாகவே ஆகிவிடும் இரண்டாவது ஹீரோ வைபவ் முருகேசனும் அந்த கேரக்டருக்கேற்ற நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
பூர்ணிமாவின் வேலை சம்பந்தமாக அவருடன் பேசுகின்ற காட்சிகளும் ஈஎம்ஐ கட்ட வேண்டிய நிலைமை பற்றி வைபவ் அவரிடம் சொல்லும் பொழுதும் ரொம்பவும் எதார்த்தமாக அந்தக் காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.
நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லீலா சாம்சன், அந்த கேரள ஹோட்டலில் வேலை செய்பவர்களாக நடித்தவர் என்று பூர்ணிமா பயணப்படும் இடங்களில் எல்லாம் அவ்வப்பொழுது வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பது கவனிக்கத்தக்கது. அதிலும் லீலா சாம்சனை வைத்து பீச்சோரம் அவர்கள் ஓய்வு எடுக்கின்ற அந்த காட்சிகளை எல்லாம் படமாக்கியவிதம் அருமை.
டிராவல் விலாக் என்று சொல்லப்படுவதால் ஒளிப்பதிவு அவ்வளவு தரமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அபி அத்விக் கேரளாவின் அழகையும் தமிழ்நாடு கேரளா எல்லையில் இருக்கின்ற அந்தப் பகுதிகளையும் ரயில் நிலையத்தின் கட்டுமானத்தில் இருக்கும் ஒரு கவன ஈர்ப்பையும் பல காட்சிகளில் அழகாக பதிவு செய்திருக்கிறார்.
ஆனால், என்ன காரணமோ.. சில இடங்களில் கேமிராவின் கோணமே தவறாக அமைந்திருக்கிறது. இதை எப்படி அவர்கள் மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை.
பூர்ணிமா ரவி ஒரு சில காட்சிகளில் அழகாக தெரிகிறார். ஒரு சில காட்சிகளில் முகமே தெரியாத அளவுக்கு அவர்கள் லைட்டிங் செய்திருக்கிறார்கள். இது எல்லாம் மிகப் பெரிய தவறு. இதை எப்படி படமாக்கினார்கள் என்பதும் நமக்கு புரியவில்லை.
இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத்தின் பாடல்களின் மாண்டேஜ் காட்சிகளை ரசனையுடன் பார்த்த பொழுதில் பாடல் வரிகள்தான் நம் காதில் விழவில்லை. அதேபோல் பின்னணி இசையும் இது ஒரு டிராவல் பிளாக் என்பதை தாண்டி காமெடி படத்திற்கான இசையை அமைத்து அதையும் கேட்க முடியாமல் செய்திருக்கிறார்கள்.
படத் தொகுப்பாளர் ஸ்ரீவாட்சன் தன்னால் முடிந்த அளவுக்கு இந்தப் படத்தினை தொடர்ந்து சலித்துக் கொள்ளாமல், களைப்பில்லாமல் பார்க்கும்படியாக அமைத்திருந்தாலும் இடைவேளைக்கு பின்பு படம் ரங்க இராட்டினம் சுற்றுகிறது.
படத்தின் மிகப் பெரிய பிரச்சனையே கடைசியாக இந்த படம் என்ன சொல்ல வருகிறது என்பது யாருக்குமே புரியவில்லை என்பதுதான். அதோடு படத்தின் மிகப் பெரிய லாஜிக் மிஸ்டேக்கே அப்பா பக்கவாதம் வந்து வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும்பொழுது குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய மூத்த மகள் சுற்றுலா செல்கிறேன் என்று ஊருக்கு கிளம்புவார்களா..? இந்த ஒரு கேள்வியே இந்தப் படத்துடன் நம்மை ஒன்றவிடாமலேயே செய்துவிட்டது.
டெல்லி கணேசுக்கு பக்கவாதம் என்றாலும் அதை படத்தில் எந்த விதத்திலும் காட்டாமல் சாதாரணமாகவே அவர் இருப்பதுபோல காட்டியது ஏன் என்று தெரியவில்லை.
பல அழுத்தங்களுடன் வீட்டிலும், அலுவலகத்திலும் வேலை செய்து வரும் பூர்ணிமாவுக்கு தன்னுடைய கஷ்டத்தை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு ஆள் தேவை. அது காதலனாகவும் இருக்கலாம் அல்லது நண்பியாகவும் இருக்கலாம். ஏன்.. அந்த நண்பியையோ, காதலனையோ சென்னையிலேயே பார்த்திருக்கக் கூடாதா.. அவர் வேலை செய்யும் இடத்திலேயே தேடி இருக்கக் கூடாதா… இதற்காக அவர் சுற்றுலா செல்வது தேவையா என்பதுதான் நமது கேள்வி.
டெல்லி கணேஷ் மட்டுமே தத்துவ பேசியிருந்தால்கூட நம்மால் ஏற்க முடிந்திருக்கும். ஆனால், படத்தின் கடைசி காட்சி வரையிலும் பார்க்கின்ற நபர்கள் பலருமே தத்துவ விசாரணை அள்ளி வீசிக்கொண்டே இருக்க, எந்த தத்துவத்தை நம் மனதில் வைத்து இந்தப் படத்தைப் பாராட்டி தள்ளுவது என்பது நமக்கு தெரியாமல் போய்விட்டது.
அந்த வகையில் இந்த சுற்றுலா செல்லும் திரைப்படம் இன்பச் சுற்றுலாவாக சென்றதா.. அல்லது துன்பச் சுற்றுலாவாக சென்றதா.. அல்லது தேடுதல் வேட்டையாக சென்றதா.. என்பதே நமக்குத் தெரியாமல் போனதால் இந்த மஞ்சள் கோட்டை நம்மால் கடக்க முடியவில்லை.
RATING : 2.5 / 5









