full screen background image

யாதும் ஊரே யாவரும் கேளீர்- விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளீர்- விமர்சனம்

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் சிஷ்யரான அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணன் ரோகந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஒரு கருத்தியல் சினிமாதான் இந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம்.

டைட்டிலில் இருக்கும் பொதுமை உணர்வை கதைக்குள் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டுள்ளார் இயக்குநர். விஜய் சேதுபதியின் குரலில் இருந்து துவங்குகிறது படம்.

கொடைக்கானலில் இருக்கும் ஒரு சர்ச்சிற்கு தனது இசைக் குழுவோடு வருகிறார் விஜய் சேதுபதி. அவரின் வருகையை அறிந்து அவரை கொலை செய்ய துடிக்கிறார் காவல் அதிகாரியான மகிழ் திருமேனி. இலங்கையின் இறுதிப் போரில் தப்பித்து வந்த  விஜய் சேதுபதியின் நிஜ அடையாளம் என்ன  என்ற கேள்வி எழுகிறது? அந்தக் கேள்விக்கான பதிலை மீதிப் படம் தருகிறது.

கதையின் நாயகனாக விஜய் சேதுபதி. ஒரு அகதிக்கே உரிய முகபாவனைகளை அவர் கொண்டு வந்தாலும் உடல் மொழியில் வழக்கமான விஜய் சேதுபதியே தெரிகிறார். குறிப்பாக இலங்கைத் தமிழில் அவர் பேசுவது ஜீரணிக்கவே முடியாத ரகம். நடிப்பில் இன்னும் முனைப்பு காட்டியிருக்கலாம் சேது.

மேகா ஆகாஷ் பொசுக்கென்று கோபப்பட்டு, பின் உடனே சமாதானம் ஆகும் கேரக்டரில் நடித்துள்ளார். அவர் கேரக்டருக்கான பின் கதையில் போதிய அழுத்தம் இல்லாததால் அவரது நடிப்பு பெரிதாக எடுபடவில்லை. மகிழ் திருமேனி நடிப்பில் குறையில்லை. வழக்கம் போல் அவரது யூனிக்கான குரல் அசத்துகிறது. ஆனாலும் அவரது கேரக்டருக்கான ரைட்டிங்கில் துளியும் டெப்த் இல்லை.

மறைந்த  சின்னக் கலைவாணர்  விவேக் பாதிரியாராக வருகிறார். தனக்கு வழங்கிய பாத்திரத்தை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறார். அவரை திரையில் காணும்போதே நம் மனதில் அவரின் இழப்பு நிழலாடுகிறது. படத்தில் ஆங்காங்கே வரும் துண்டு துண்டு கேரக்டர்களும் குறைவின்றி நடித்துள்ளனர்.

படத்தின் முதுகெழும்பாக இருப்பது நிவாஸ் கேபிரசன்னாவின் இசைதான். பாடல்கள் பின்னணி இசை இரண்டிலுமே செண்டம் அடித்துள்ளார். க்ளைமாக்ஸில் வரும் பாடலிலும், பின்னணி இசையிலும் நின்று பேசுகிறார் நிவாஸ்.கே.பிரசன்னா. படத்தின் ஒளிப்பதிவும் அருமையாக அமைந்துள்ளது. கொடைக்கானலை அதன் எதார்த்தம் கெடாமல் காட்டி கண்களுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

படத்தின் பெரிய வில்லனாக படத்தின் முன் பாதி அமைந்துள்ளது. மிக மிக மெதுவான ஸ்கிரீன்ப்ளே முன் பாதியில் நம்மைச் சோர்வடையச் செய்துவிடுகிறது. ஒற்றை இலக்கை நோக்கிய பயணமாக இல்லாமல் மகிழ் திருமேனி உடன் மோதல், மேகா ஆகாஷுடன் காதல், அகதிகளின் அவதி என கன்னா பின்னாவென மெயின் கேரக்டர் பயணிப்பது அலுப்பைத் தருகிறது. இரண்டாம் பாதி துவங்கிய உடன் படம் ஓரளவு வேகமெடுக்கத் துவங்குகிறது.

எஸ்.பி.ஜனநாதன் ஸ்டைலில் அரசியல் பேசியிருந்தாலும் அகதிகள் எதனால் உருவாகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி, போரினால்தான் உருவாகிறார்கள் என்ற பதிலைச் சொல்லி, பின் போர் எதனால் உருவாகிறது என்ற கேள்விக்குள் சென்று அதன் பின்னுள்ள சுயநல அரசியல் ஆகியவற்றை நேர்த்தியான திரைக்கதை வழியே அணுகியிருந்தால் மறக்க முடியாத படமாக அமைந்திருக்கும்.

அகதிகளுக்கு குடியுரிமை கொடுங்கள் என்ற நியாயமான மெசேஜுக்காக மட்டும் படத்தைப் பார்க்கலாம்.

RATING : 3 / 5

Our Score