12 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வினோதமான ஆசை கொண்ட நாயகன் பால்ராஜ், அதற்கு எந்தப் பெண்ணும் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு 6 குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார்.
அவரது 6 குழந்தை ஆசைக்கு சம்மதம் தெரிவித்ததால் காயத்ரி ரெமாவை மணக்கிறார்.
இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு காயத்ரி ரெமா, ஒரு குழந்தை போதும், அதற்கு மேல் குழந்தை வேண்டாம், என்ற முடிவுக்கு வர, பால்ராஜ் மட்டும் 6 குழந்தை ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இதனால், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான கணவரால் தாம்பத்ய சுகம் இல்லாமல் தவிக்கும் சுவேதாஸ்ரீக்கும், பால்ராஜுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது.
நாளடைவில் நட்பு கள்ளக் காதலாக மாற, கணவன், மனைவி மற்றும் கள்ளக் காதலி ஆகிய மூன்று பேருடைய வாழ்க்கையும் என்னவாகிறது, என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் பால்ராஜ், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
கதாபாத்திரத்திற்கு பொறுத்தமானவராக இருப்பதோடு, அளவான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
மனைவியை கட்டி அணைக்க முயற்சிக்கும்போது, அவர் தள்ளிவிடும் காட்சிகளில் தன் ஏக்கம் மற்றும் ஏமாற்றத்தை சரியான முறையில் வெளிக்காட்டியிருக்கிறார்,
மற்றொரு பெண்ணின் நட்பு கிடைத்த உடன் தன்னுள் ஏற்படும் மனமாற்றம் மற்றும் அவருடனான காதல் லீலைகள் என்று மனுஷன் படம் பார்ப்பவர்களுக்கு பொறாமை ஏற்படும் விதத்தில் வலம் வருகிறார்.
நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் 6 குழந்தைகள் என்ற கணவரின் பேராசையை நிராகரிக்கும் காட்சிகளில், பெண்களின் மனதையும், அவர்களது வலியையும் பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சுவேதாஸ்ரீ, பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போடும் விதமாக பயணித்திருக்கிறார்.
பார்த்ததும் கவனம் ஈர்க்கும் முகம், அப்பாவித்தனமான பேச்சு என்றாலும், அடப்பாவி…என்று சொல்லும் அளவிலான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கும் சுவேதாஸ்ரீ-க்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்… என்று சொல்லும் அளவுக்கு அம்மணி வலம் வந்திருக்கிறார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரவி மரியா, தன் அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருப்பதோடு, பல இடங்களில் தனது வில்லத்தனம் மூலம் மிரட்டுவதோடு, சிரிக்கவும் வைக்கிறார்.
அம்பானி சங்கர், பசங்க சிவகுமார் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
உதயன் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், காட்சிகள் தரமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
விஜய் பிரபு இசையில் பாடல்கள், வசனங்கள் போல் ஒலித்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
கே.சங்கரின் படத் தொகுப்பு இயக்குநர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லவில்லை என்றாலும், கதையில் இருக்கும் கள்ளக் காதல் விவகாரத்தை சுவாரஸ்யமாக சொல்லி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் பால்ராஜ், தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையை கதைக் கருவாக எடுத்துக் கொண்டு அதை கமர்ஷியல் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.
கதையில் கள்ளக் காதல் விவகாரம் முக்கிய பங்கு வகித்தாலும், அதை நேர்மையாகவும், திரைக்கதைக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய விதத்திலும் கையாண்டிருப்பவர், மக்களுக்கு நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறார். பட
மதுவுக்கு அடிமையானவர்களால் குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும், புரிதல் இல்லாத தம்பதியினரால் குடும்பம் எப்படி திசை மாறி பயணிக்கிறது, என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பால்ராஜ், அதை பல குறைகளோடு சொன்னாலும், சுவாரஸ்யமாக சொல்லி படத்தை ரசிக்க வைத்து விடுகிறார்.
RATING : 2 / 5









