கலைஞர் டிவியின் ‘நாளைய இயக்குனர் சீசன் 3’-ல் பங்கேற்றவரும், இயக்குநர் ஹரியிடம் ‘சிங்கம் 2’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவருமான பிரசாந்த், புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு, ‘யானும் தீயவன்’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.
புதுமுகம் அஷ்வின் கதாநாயகனாக அறிமுகமாகுகிறார். வர்ஷா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வி.டி.வி.கணேஷ், பொன்வண்ணன் மற்றும் நடன இயக்குநர் ராஜூசுந்தரமும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.
பிரபல தெலுங்கு இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, பாடல்கள் கபிலன், மணிஅமுதவன். பெப்பி சினிமாஸ் நிறுவனம் சார்பாக ஸோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். எழுதி, இயக்குபவர் அறிமுக இயக்குநர் பிரசாந்த்.
படம் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் இயக்குநர் பிரசாந்த்.
“இந்தப் படத்தில் பேய் இல்லை. அமானுஷ்யங்கள் இல்லை. ஆனால் கொஞ்சம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையைச் சேர்ந்த்து. நிஜ வாழ்க்கையில் நாம் நேரில் பார்த்திருக்கும் ஒரு சம்பவத்தை திரையில் பார்ப்பது போன்ற பீலிங்கை இந்தப் படம் கொடுக்கும்.
இந்தப் படத்தின் தலைப்பே கதைக் கருவை சொல்கிறது. ஒரு கெட்டவனிடம் சிக்கித் தவிக்கும் நல்லவனான ஹீரோ, அந்தக் கெட்டவனிடமிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லாமல் கெட்டவனின் வழியிலேயே முயன்று தப்பிப்பதுதான் கதைக் கரு.
ஹீரோவும், ஹீரோயினும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்து தங்களுக்கான வாழ்க்கையை அமைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அப்போது ஒரு தீயவன் விரித்த சதி வலையில் மாட்டிக் கொள்கிறார்கள். அதுவொரு சின்ன பிரச்சினை. ஆனால் அது அந்த தீயவனால் பெரிதுபடுத்தப்பட்ட பின்னர் இவர்களுக்கு பிரச்சனையாகிறது.
இதில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். நல்லது செய்து தப்பிக்க முடியாது என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்டு அந்த தீயவன் தங்களுக்கு என்ன செய்தானோ அதையே அவனுக்கு திருப்பிச் செய்துவிட்டு, அதிலிருந்து தப்புகிறார்கள்.
இவர்கள் சிக்கிக் கொள்ளும் விஷயம் என்பது நாம் தினமும் நிஜத்தில் பார்ப்பதுதான். ஆனால் அது கொஞ்சம் சஸ்பென்ஸ். அது ஒண்ணை மட்டும் விட்ருங்களேன்.
ஒரு தீயவனை எதிர்த்து நல்லவன் வேடத்தில் ஜெயிக்க முடியாமல், அந்த நல்லவனும் தீயவனாகிவிட்டதால் ‘யானும் தீயவன்’ என்ற தலைப்பு இந்தப் படத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது..” என்று பெருமையாகச் சொல்கிறார் இயக்குநர் பிரசாந்த்.
அவர் மேலும் பேசுகையில், “இப்படத்தின் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக அமையும். ஒவ்வொரு பாடலும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பல்லவி, அனு பல்லவி, சரணம் என்ற வடிவத்தில்தான் பாடல்கள் இருக்கும். ஆனால், இந்த வழக்கமான வடிவத்தில் இல்லாமல் புதுமையான விதத்தில் ஒரு பாடலை இந்தப் படத்திற்காக உருவாக்கியிருக்கிறோம். நிச்சயமாக இந்தப் பாடல் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று அதீத நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் பிரசாந்த்.
ஹீரோ அஸ்வின் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றவராம். புதிதாக கல்லூரி முடித்த மாணவர் தோற்றத்தில்தான் இந்த ஹீரோ இருக்க வேண்டும் என்பதால் நிறைய தேடுதல் வேட்டை நடத்தி கண்டுபிடித்ததாகச் சொல்கிறார் இயக்குநர்.
அதேபோல் ஹீரோயின் ஸ்வாதியும் தமிழ்ச் சினிமாவுக்கு புதிது என்றாலும் “ஹீரோவைவிட ஹீரோயினின் உயரம் குறைவாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஸ்வாதியைத் தேடிப் பிடித்தோம்…” என்கிறார் இயக்குநர்.
எல்லா படத்துலேயும் இதுதானுங்களே நடக்குது..!