full screen background image

நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் புதிய நாடகம் சொப்பன வாழ்வில்..!

நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் புதிய நாடகம் சொப்பன வாழ்வில்..!

என்னதான் வாராவாரம் 4 சினிமாக்கள் வந்தவண்ணம் இருந்தாலும் சென்னையில் நாடகங்களுக்கும் குறைவில்லாமல் இருக்கிறது. சினிமாவில் குறைந்த உழைப்பு, நிறைய சம்பளம் என்ற நிலையில் இருந்தாலும் கைக்குட்டையில் சுருக்கிக் கொடுக்கும் அளவுக்கான சம்பளம் கிடைக்கும் நாடகத்தில் நடிப்பதுதான் சில உண்மையான கலைஞர்களுக்கு திருப்தியையும், நிம்மதியையும் அளிக்கிறது. அவர்களில் ஒருவர்தான் ஒய்.ஜி.மகேந்திரா.

Soppana Vazhvil Stage Show Press Meet Stills (5)

அவருடைய தந்தை திரு. ஒய்.ஜி.பார்த்தசாரதியால் 1952-ம் ஆண்டு துவக்கப்பட்டது யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் என்கிற நாடக்க் குழு. அன்றிலிருந்து இன்றுவரையிலும் தொடர்ச்சியாக 63 ஆண்டுகளாக செயல்பட்டு வந்து ஒரு சாதனை டீமாக இருக்கிறது. தந்தையின் மறைவுக்கு பிறகு தனயன் ஒய்.ஜி.மகேந்திரா இந்த நாடக்க் குழுவை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்தக் குழுவின் சார்பாக அரங்கேறவிருக்கும் புதிய நாடகம்தான் சொப்பன வாழ்வில். இந்த நாடகம் யு.எ.எ. அமைப்பின் 65-வது நாடகமாகும்.  ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் நடிப்பில் 1943-ம் ஆண்டு வெளியான ‘சிவகவி’ என்கிற திரைப்படத்தில் பாபநாசம் சிவன் எழுதி புகழ் பெற்ற பாடல் ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’. இந்தப் பாடலின் தலைப்பையே இந்த நாடகத்திற்கும் தலைப்பாக்கியிருக்கிறார் நாடகத்தின் கதாசிரியர் கோபுபாபு.

8

இந்த நாடகத்தில் ஒய்.ஜி.மகேந்திரா கதாநாயகனாகவும், யுவஸ்ரீ கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களோடு ஒய்.ஜி.எம் நாடகக் குழுவின் ஆஸ்தான நடிகையும், ‘மேடையுலகின் மனோரமா’ என்றழைக்கப்படும் பிருந்தா உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கவிருக்கிறார்கள். சுப்புணி மிக முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறார்.  இசை ரமேஷ்வினாயகம். இயக்கம் ஒய்.ஜி.மகேந்திரா.

இந்த நாடகம் பற்றி நேற்று நடந்த பிரஸ்மீட்டில் பேசிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா, “நான் இன்றும் நான்கு பெரிய டைரக்டர்களின் படங்களிலும், ஐந்து புது இயக்குனர்களின் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறேன். இது தவிர டிவி சீரியல்களும் இருக்கின்றன. ‘ஜீ’ தமிழ்த் தொலைக்காட்சிகாக எனது மகன் இயக்கும் ஒரு சீரியலிலும் நடிக்கிறேன்.

9

ஆனாலும் மேடை நாடகத்தைத்தான் நான் அதிகம் நேசிக்கிறேன். இதில் அதிகம் பணம் கிடைக்காது. ஆனால் ஆத்ம திருப்தி கிடைக்கும். ஒரு நல்ல கலைஞனுக்கு வேண்டியதே திருப்தியும், பாராட்டுக்களும்தான். இந்த இரண்டுமே நாடகங்களில் மட்டும்தான் கிடைக்கும். அதனால்தான் இத்தனையாண்டுகளாக எத்தனையோ நாடக்க் குழுக்கள் வந்து மறைந்துபோய்விட்டபோதிலும் இந்த நாடக்க் குழுவை தொடர்ச்சியாக நடத்தி வருகிறேன். இப்போது என்னைப் பார்த்து என் மகள் மதுவந்தியும் தனியாக நாடகம் போட்டு வருகிறார். எனது பரம்பரையே இப்படி நாடக உலகத்தில் இருப்பதில்தான் எனக்கு சந்தோஷம்.

2

நாடகம் போடுவதற்காக  ரஷ்யா, தென்னாப்பிரிக்கா தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் போய் வந்துவிட்டோம். வரும் செப்டம்பர் மாதம் மறுபடியும் அமெரிக்கா செல்கிறோம். அங்கே ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ டிராமா போடப் போகிறோம். இதற்கிடையில்தான்  இந்த ‘சொப்பன வாழ்வில்’ என்ற இந்த புதிய நாடகத்தை அரங்கேற்ற இருக்கிறோம்.

Soppana Vazhvil Stage Show Press Meet Stills (9)

கோபு பாபு ஒரு அருமையான ரைட்டர். என்னுடைய நீண்ட நாள் நண்பர். இவர் ஏற்கெனவே எனக்கு 2 நாடகங்களை எழுதிக் கொடுத்து அதை நான் நடித்து இயக்கியிருக்கிறேன். இது மூன்றாவது நாடகம். ஒரு நாள் வந்து நாடகம் ஒண்ணு எழுதியிருக்கேன். படிச்சுப் பாருங்கன்னு சொன்னார். படித்தேன். வித்தியாசமாக இருந்தது. எனக்கும் பொருத்தமாக இருந்த்து. செய்யலாம் என்று ஆரம்பித்துவிட்டேன்.

7

பொதுவாக நாம் நம்மைவிட உயரம் குறைவானவர்கள், உடல் ரீதியாக குறைபாடுகள் கொண்டவர்களையெல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் கேலி செய்து அவமானப்படுத்துவதை வழக்கமா வச்சிருக்கோம். ஆனா அந்த நேரத்துல அவங்க மனசு அதையெல்லாம் கேட்டு என்ன பாடுபடும்ன்றதை மட்டும் நாம யோசிக்கிறதில்ல.. அதுதான் இந்தக் கதையின் மையக் கருத்து.

கோபுபாபு இந்தக் கதையை சொன்னவுடன் எனக்கு, நடிகர் தேங்காய் சீனிவாசனிடம் உதவியாளராக இருந்த வத்சல் என்பவர்தான் ஞாபகத்திற்கு வந்தார். அவர்  வேலைகளை ஒழுங்காக செய்வார். அவருடைய கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் அவரது உயரம் குறைவு.  ரொம்ப அப்பாவிபோல் நடந்து கொள்வார்.

10

அவரை எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அவரை நானும் கமல்ஹாசனும் சேர்ந்தே நிறைய கிண்டல் செய்திருக்கிறோம். அவர் எங்ககிட்ட வந்து, ‘நான் கல்யாணம் பண்ணிட்டேன்’னு சொன்னப்ப நாங்க அப்படியொரு சிரிப்பை சிரிச்சோம். இப்போ நினைச்சா அது தப்புன்னு தோணுது. நாங்க அப்படி செஞ்சிருக்கக் கூடாது. இப்போ வத்சல்கிட்ட மன்னிப்புக் கேட்கக்கூட வழியில்ல. அவர் இறந்துவிட்டார். அவரை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த கேரக்டரில் நான் நடிக்கப் போகிறேன்.

இந்த நாடகத்தில் வரும் ஹீரோ தன்னை எல்லோரும் எப்பவும் அவமானப்படுத்துவதை தாங்க  முடியாம ஒரு நிலையில் பொங்கியெழுந்து அவரை கேலி செய்யும் இந்த சமுதாயத்தையே ஒரு வழி பண்ற மாதிரியான காமெடி திரில்லர் டிராமா இது. இதில் நான் அந்த ஹீரோ கேரக்டரில் நடிக்கிறேன். கணவனான என்னை விட்டுக் கொடுக்காத மனைவியாக நடிகை யுவஸ்ரீ நடிக்கிறாங்க. அவங்க ரொம்ப வருஷமா சினிமால நடிச்சுக்கிட்டிருக்காங்க. இந்த நாடகத்துக்காக புதிய ஹீரோயினா யாரை போடலாம்னு தேடும்போது சட்டுன்னு ஞாபகத்துக்கு வந்தாங்க. தொடர்பு கொண்டு கேட்டோம். ‘ஓகே’ன்னு சொல்லிட்டு நடிக்க வந்துட்டாங்க. எங்க டிராமா குழுவின் ‘ஜாதக’ப்படியே இப்போ இவங்களுக்கும் புதிய சீரியல்களும், சினிமாக்களும் கமிட் ஆகியிருக்கு.  

பொதுவாக நாடகங்களில் இசைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் இருக்காது. அது  டிராக் மியூஸிக்கை ஏத்திவிடற வேலை மட்டும்தான். இப்போ சமீபத்தில் நான் நடித்த ராமானுஜன் படத்தை பார்த்தப்ப அதுக்கு இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் செய்திருந்த இசை மிகவும் ஈர்ப்பாக இருந்தது.  யாராவது ஒரு புதுமுக இசையமைப்பாளரை இதுக்கு பிக்ஸ் செய்யலாம் என்று நினைத்தபோது இவரது ஞாபகம் வந்தது. இவரிடம் பேசி இந்த நாடகத்துக்காக தனியா ஒரு டைட்டில் பாடல் பண்ணித் தரச் சொன்னேன்.  அற்புதமா போட்டுக் கொடுத்திருக்கார். அவருக்கு எங்களது நன்றி.

சபாக்கள் ஆதரவில்லாமல் இப்போவெல்லாம் நாடகங்கள் போடுவது முடியாது. எங்களுக்கு தொடர்ந்து மூன்று நாடகங்களை ஸ்பான்ஸர் செய்து வருகிறது ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் நிறுவனம், இப்போது இவர்களுடன் அப்பாஸ் கல்சுரல் மற்றும் பாரத் கலாச்சார் போன்ற அமைப்புகளின் உதவியோடும்தான் இந்த நாடகம் அரங்கேறவுள்ளது. வரும் ஜூன் 19, வெள்ளிக்கிழமையன்று மாலை சென்னை தி.நகர்., வாணி மகாலில் முதல் காட்சி அரங்கேறுகிறது. தொடர்ந்து ஜூன்  20 மற்றும் 21-ம் தேதிகளில் தி.நகர், பி.டி. தியாகராயர் ஹாலில் நாடகம் நடக்கவுள்ளது..” என்றார்.

நாடக ரசிகர்களே மிஸ் பண்ணிராதீங்க..!

Our Score