சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்த்தில் நடிகர் விக்ராந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்கம் : S.சிவராமன், தயாரிப்பு: Foot Steps Production, இணை தயாரிப்பு: Kothari Madras International Limited, இசை: சௌரப் அகர்வால், ஒளிப்பதிவு : TS பிரசன்னா, எடிட்டர்: G தினேஷ், பாடியவர்: கலை குமார், கலை இயக்குநர்: மணி, நடன இயக்குனர்: அபு & சால்ஸ் சண்டைக்காட்சிகள்: தீ கார்த்திக், வசனம் : எஸ் சிவராமன், ஒலி வடிவமைப்பாளர்: RK அஸ்வத் (DAW RECORDS), ஃபோலே வடிவமைப்பாளர்: R.ராஜ் மோகன், டப்பிங் மற்றும் மிக்சிங் : DAW RECORDS, டப்பிங் இன்ஜினியர்: வசந்த், DI & VFX: Fire Fox Studios, போஸ்டர் : வியாகி, ஸ்டில்ஸ்: நவின் ராஜ், டைட்டில் வடிவமைப்பு: சசி & சசி விளம்பர கட்ஸ் : அரவிந்த் B ஆனந்த், ஒப்பனை: பாரி, கயல், பத்திரிக்கை தொடர்பு : வேலு. S, புரமோசன் : Starnest Media, தயாரிப்பு நிர்வாகி: ரகுவரன். Kothari Madras International Limited இப்படத்தினை இணைந்து வழங்குகிறது.
ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பதுதான் இந்தப் படம்.
இப்போது நீதிமன்றங்களில் குவிந்திருக்கும் சிவில் வழக்குகளில் பெரும்பாலானவை உயில் பிரச்சனையாகத்தான் இருக்கிறது.
உயிருடன் இருக்கும் பொழுதே வீட்டுப் பெரியவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவரவர்கள் சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டால் நிச்சயமாக பிரச்சனைகள் வராது. ஆனால் இருக்கும்வரையிலும் சொத்துக்களை பிரிக்காமலும், பாகப்பிரிவினை செய்யாமல் இறந்து போகும் அம்மா அப்பா இருவரின் பிள்ளைகளும் கடைசியாக அந்த சொத்துக்களுக்காக அடிதடி, வெட்டு, குத்து கொலைவரையிலும் செல்வது தமிழ்நாட்டில் தினமும் நடக்கிறது.
அது போன்ற ஒரு கதையில் கொஞ்சம் சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த ஜானரில் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.சிவராமன்.
தொழில் அதிபரான பதம் வேணுகுமார் திடீரென்று இறந்து போகிறார். அவருடைய ஊரில் இருக்கும் அவருடைய சொத்துக்களை சரி பாதியாக அவருடைய இரண்டு மகன்களுக்கும் எழுதி வைத்திருக்கிறார். ஆனால் சென்னையில் அவருக்கு இருக்கும் ஒரு பிளாட் வீட்டை மட்டும் ஷ்ரத்தா என்ற பெண்ணுக்கு எழுதி வைத்திருக்கிறார்.
அந்த ஷ்ரத்தா யார் என்று பதம் வேணு குமாரின் மகன்களுக்கே தெரியவில்லை. இப்போது அந்த பெண் யார் என்று கண்டுபிடித்து அவரிடம் இருந்து வீட்டை வாங்குவதற்கு பதிலாக நாமே ஒரு பெண்ணை செட் செய்து இவர்தான் ஷ்ரத்தா என்று கோர்ட்டில் நிரூபித்து அந்த வீட்டைக் கைப்பற்றி விடலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள் மகன்கள்.
அந்த வகையில் சோனியா அகர்வால் நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது அதில் ஷ்ரத்தா என்ற பெயரில் தன் முன்னே நிறுத்தப்பட்டு இருக்கும் பெண்ணை பார்த்தவுடன் சோனியா அகர்வாலுக்கு சந்தேகம் வருகிறது. இதில் ஏதோ சூது இருக்கிறது என்பதை மட்டும் நினைத்த அவர் இந்த வழக்கினை ஒத்தி வைக்கிறார்.
அந்த நீதிமன்றத்தில் பாதுகாப்பு பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் விக்ராந்தை அழைக்கும் சோனியா அகர்வால் இந்த வழக்கு பற்றிய விஷயங்களை சொல்லி உண்மையான ஷ்ரத்தா யார் என்பதை தேடி கண்டுபிடித்து தன்னிடம் கொண்டு வரும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இதை விதார்த் ரகசியமாகவே செய்ய வேண்டும் என்கிறார். நீதிபதியின் உத்தரவுக்கு ஏற்ப சிங்கிள் மனிதராக இந்த வழக்கை கையில் எடுத்துக்கொண்டு விசாரிக்க துவங்குகிறார் விக்ராந்த்.
இன்னொரு பக்கம் பிர்லா போஸ் ஒரு மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் ஹெச்.ஆர் டிபார்ட்மெண்ட்டில் அசிஸ்டன்ட் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தில் இல்லாத நபர்கள் முழு நேர வேலை பார்ப்பதாக சொல்லி அவர்களுக்கு கோடிக்கணக்கான சம்பளத்தை யாரோ பெற்று வந்திருக்கிறார்கள் என்பது காவல்துறைக்கு புகாராக வந்திருக்கிறது. இது குறித்து விசாரித்த போலீசார் இதில் மிகப் பெரிய அளவுக்கு ஊழல் நடந்திருப்பதை கண்டறிகிறார்கள்.
அந்த நேரத்தில் கம்பெனி பணத்தில் ஏழரை லட்சம் ரூபாய் பிர்லா போஸூக்கு வந்திருப்பதை கண்டறிகிறார்கள். உடனடியாக அந்த ஏழரை லட்ச ரூபாயை திருப்பி கட்டினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று நிறுவனமும் காவல் துறையும் சொல்ல ஏழரை லட்ச ரூபாயை தேடிக் கொண்டிருக்கிறார் பிர்லா போஸ்.
அந்த நேரத்தில் விக்ராந்த் அந்த வீட்டுக்குள் நுழைந்து உண்மையான ஷ்ரத்தா பிர்லா போஸின் மகள்தான் என்பதைக் கண்டறிகிறார். அவர் தற்போது திருமணமாகி கோத்தகிரியில் இருப்பது தெரிய வர ஷ்ரத்தாவை தேடி சென்று விசாரிக்கிறார் விக்ராந்த்.
இதன் பின்பு என்ன நடந்தது..? எதற்காக ஆள் மாறாட்டம் செய்தார்கள்? இந்த ஷ்ரத்தாவுக்கும், தொழிலதிபர் பதம் வேணு குமாருக்கும் என்ன தொடர்பு..? அந்த பிளாட் வீட்டை ஷ்ரத்தாவின் பெயரில் எதற்காக பதம் வேணுகுமார் எழுதி வைத்தார்?… போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
கொஞ்சம் சஸ்பென்ஸ் திரில்லராக இந்தப் படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.சிவராமன் இடைவேளைக்கு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அந்த வழக்கின் முடிச்சுகள் அவிழ்த்து கொண்டிருக்க கடைசியாக தெரிய வரும் உண்மை நிச்சயம் நம் மனதை தொடுகிறது.
அந்த வகையில் இந்தப் படம் நிறைய லாஜிக் ஓட்டைகளை வைத்திருந்தாலும் மனதை கனமாக்கும் திரைப்படம் என்பதில் சந்தேகம் இல்லை.
சோனியா அகர்வாலுக்கு இதுவும் ஒரு சாதாரண திரைப்படம்தான். அவரால் எந்த அளவுக்கு நடிக்க முடியுமா… அந்த அளவுக்கு மட்டுமே தன்னுடைய நடிப்பை காட்டி இருக்கிறார். அவ்வளவுதான். விக்ராந்துக்கும் இத்திரைப்படம் அவருடைய எண்ணிக்கையில் ஒன்றை கூட்டி இருக்கிறது அவ்வளவுதான்.
பிர்லா போஸ், பதம் வேணுகுமார், மோகன் ராமன், ஷ்ரத்தாவாக நடித்த அலேக்யா,.. இவர்கள்தான் திரைப்படத்தை முழுமையாக தாங்கி இருக்கிறார்கள்.
பிர்லா போஸ் தான் வாங்கிய பணம் மிகப் பெரிய சுமையாக கழுத்தை நெரிக்கிறது என்பதை உணர்ந்து ஒரு மிடில் கிளாஸ் அப்பாவாக தன்னால் என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து ஒரு பரிதாப உணர்வை காட்டி இருக்கிறார்.
மோகன் ராமன் இரண்டு காட்சிகளே என்றாலும் தன்னுடைய மகனை நினைத்து அவர் வருத்தப்படும் அந்த ஒரு காட்சியில் நமக்குப் பாவமாகத் தெரிகிறார்.
அப்பாவுக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் அலேக்யா தன்னுடைய தோழியின் உதவியோடு தொழிலதிபர் பதம் வேணு குமாரை சந்திக்கும் காட்சியிலும், அதற்குப் பிறகு அங்கே நடக்கின்ற காட்சிகளிலும், நடந்ததை நினைத்து கண்ணீர் விடும்போதும் நம்முடைய பாராட்டுக்களை பெறுகிறார்.
பதம் வேணு குமார் ஒரு கை தேர்ந்த நடிகர் என்பதைப் போல நடித்திருக்கிறார் அவருக்காக ஒலிப்பதிவாளர் வைத்திருக்கும் ஷாட்டுகள் அனைத்துமே அழகு. பணம் வைத்திருக்கும் ஒருவர் அந்த படத்துக்காக இளம் பெண்ணை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதற்கான காட்சியாக வேணு குமார் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை சிறப்பாக காட்டி இருக்கிறார்.
ஷ்ரத்தாவாக நடித்த அலேக்யாவின் அற்புதமான நடிப்பு இந்தப் படத்தை இடைவேளைக்கு பின்பு நம்மை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. அவருடைய செயல் மிக மிக தவறு. எப்போதும் நமது மனம் சரி, தவறு என்ற இரண்டு பக்கத்திலும் சாயும் நிலையில்தான் இருக்கும். எந்தப் பக்கத்தில் இருந்து அழுத்தம் நமக்கு கிடைக்கிறதோ நிச்சயம் அந்தப் பக்கம் நாம் சாய்கிறோம். அதைத்தான் அலேக்யாவும் இந்தப் படத்தில் செய்து இருக்கிறார்.
மற்றும் வேணு குமாரின் மகன்களாக நடித்தவர்கள், சம்மதியாக நடித்தவர், லொள்ளுசபா சாமிநாதன் என்ற மற்றைய கேரக்டர்களும் மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னா வேணு பவன் குமாரின் வீட்டில் நடக்கின்ற காட்சிகளுக்கு மட்டும் அபாரமான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். மற்றைய காட்சிகளில் கோத்தகிரியில் நடக்கும் காட்சிகள் மற்றும் நீதிமன்ற காட்சிகளிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.
செளரவ் அகர்வாலின் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும் பின்னணி இசையை கொஞ்சம் கவனிக்கத்தக்கது போல இசைத்திருக்கிறார்.
கொஞ்சம் சஸ்பென்ஸ், திரில்லராக இந்தப் படம் திசை மாறும்போது அந்தக் காட்சிகளை ஆபாசமாக நீண்டு விடாமல் கொஞ்சம் தடுத்து ஒரு திரில்லர் டைப்பில் காட்சிகளை வெட்டி ஒட்டி கொடுத்திருக்கிறார் எடிட்டர் ஜி.தினேஷ்.
தன்னுடைய தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பண நெருக்கடியை சமாளிக்க ஒரு மகள் தன்னையே தாரை பார்ப்பதெல்லாம் அதீதமான ஒரு செயல். ஆனால் அதற்கான சூழல் இதில் சொல்லப்பட்டிருந்தாலும் இதன் பின்பு அலேக்யா ஒரு முறைகூட தான் செய்தது தவறு என்று சொல்லவே இல்லை. மற்றைய கேரக்டர்கள் மூலமாகவும் அவர் செய்தது தவறு என்பதையும் பதிவு செய்யவில்லை.
பொதுவாக நீதிமன்ற விசாரணையில் ஆவணங்களை விசாரித்து தேட வேண்டிய விசாரணையாக இருந்தால் ஒரு அட்வகேட்டை நியமிப்பார்கள். அந்த அட்வகேட் இரு தரப்பினரிடம் அமர்ந்து விசாரித்து உண்மை என்ன என்பதை நீதிபதிக்கு எடுத்துச் சொல்லுவார். இதுதான் இந்திய முழுவதும் இருக்கும் நீதிமன்றங்களில் நடைமுறை.
ஆனால், இந்தப் படத்தில் காட்டுவது போல நீதிமன்றத்தை பாதுகாக்கும் பணியில் இருக்கும் ஒரு சப் இன்ஸ்பெக்டரிடம் இப்படி ஆஃப் தி ரெக்கார்டாக, வெளியில் சொல்லாமல், எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமல், புகார் ஏதும் கொடுக்காமல், ரகசியமாக விசாரித்து உண்மையை கொண்டு வாருங்கள் என்று ஒரு நீதிபதி சொல்வதெல்லாம் நிச்சயம் ஏற்கத்தக்க திரைக்கதை அல்ல. முட்டாள்தனமானது. பொய்யான விஷயம்.
சினிமாவுக்காக வகைப்படுத்துதலாக இருந்தாலும் இது நிச்சயம் ஏற்கக் கூடியது அல்ல. ஒரு பொய்யான நடைமுறையை இந்த இயக்குநர் எதற்காக இதில் சேர்த்தார் என்று தெரியவில்லை.
இயக்குநரின் இயக்கத்தைப் பொருத்தவரையில் அலேக்யா, பவன் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் அழகாக பதிவு செய்த இயக்குநர் மற்றைய காட்சிகளை ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்தக் கடைசி 10 நிமிடங்கள்தான் இத்திரைப்படத்தின் உயிர் நாடி. அதை இன்னும் கொஞ்சம் மக்கள் மனதில் பதிவது போல உணர்வுபூர்வமாக எடுத்திருக்கலாம். இப்போது எடுத்தவரையிலும் இந்தப் படம் பரவாயில்லை. ஒருமுறை பார்க்கலாம் என்ற ரீதியில்தான் அமைந்திருக்கிறது.
RATING : 2.5 / 5