நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்.’
சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்.
தயாரிப்பாளர் ரூஸோவும், மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை ‘கயல்’ ஆனந்தி ஆர்.கே.சுரேசிற்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட்டும் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.

என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, கோபி கிருஷ்ணா படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி.என்.கபிலன் கவனிக்க, சண்டைப் பயிற்சி இயக்கத்தை பிரபு அமைக்கிறார். அறிமுக இயக்குநரான ராஜசேகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் ராஜசேகர் பேசும்போது, “அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையில் இந்த ‘ஒயிட் ரோஸ்’ படம் உருவாகியிருக்கிறது.” என்றார்.

‘விசித்திரன்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் தயாராகும் சைக்கோ திரில்லர் படம் என்பதால், ‘ஒயிட் ரோஸ்’ படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஆரி உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.









