full screen background image

நடிகர் விவேக்கை அறிமுகப்படுத்தும் முன் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாங்கிய சத்தியம்..!

நடிகர் விவேக்கை அறிமுகப்படுத்தும் முன் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாங்கிய சத்தியம்..!

நேற்றைய முதல் நாள் நகைச்சுவை அரசர் மகான் கவுண்டமணியின் வருகை, சாலிகிராமம் பகுதி மக்களை மனம் குளிர வைத்தது. அரங்கத்தில் இறுதிவரையில் நிரம்பியிருந்தது ரசிகர்களின் கூட்டம்.

அடுத்த நாள் சின்னக் கலைவாணர் விவேக்கின் வருகையிலும் இது போலவே நடந்தது. பிரசாத் லேப் தியேட்டரில் நிற்கவே இடமில்லாத நிலைமை. ‘சாரல்’ என்கிற சின்ன பட்ஜெட் படத்தின் இசை வெளியீட்டு விழா. இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர் விக்ரமனும், நடிகர் விவேக்கும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் விவேக் பேசிய 20 நிமிடங்களும் ரகளைதான். அதிலும் படத்தின் பி.ஆர்.ஓ.வான நெல்லை சுந்தர்ராஜனை கிண்டலடித்து அவர் போலவே பேசிக் காட்டியபோது, அரங்கத்தில் எழுந்த கைதட்டல் நிச்சயம் சாலிகிராமம் சாலையையே அதிர வைத்திருக்கும்..

நடிகர் விவேக்கின் பேச்சில் இருந்து சில பகுதிகள் :

“இந்த மேடைல நிறைய பிரபலங்கள் உக்காந்திருக்காங்க. எல்லாரையும்விடவும் தவசி மாஸ்டர்தான் என் கண்ணுக்கு பளிச்சுன்னு தெரியறார். அவர்கூட நிறைய படங்கள்ல நான் ஒர்க் பண்ணியிருக்கேன். ஹீரோயின் பிரியங்காவைவிடவும் அதிகமா முடி வைச்சிருக்கார்.

பிரியங்கா பேசும்போது ‘தமிழ் பேசும் நடிகைகளுக்கு தமிழ்ப் படங்களில் முன்னுரிமை தருவதே இல்லை’ என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். இந்த ஆதங்கத்தை நான் பல வருஷமா பல மேடைகள்ல சொல்லிக்கிட்டுத்தான் வர்றேன். இன்னிக்கு இந்த மேடைல பொங்கித் தீர்த்த தங்கத் தாரகை பிரியங்காவை வாழ்த்துகிறேன்.

அவருக்கு இனிமேல் இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன். ஏன் இதோ.. நம்முடைய ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி உக்காந்திருக்காரு. அவர் நினைச்சா.. அவருடைய அடுத்தப் படத்துல ஹீரோயினாக்கிரலாமே.. இதுக்குத்தான் நான் விழாக்களுக்கு வர்றதே இல்லை.. பேச ஆரம்பிச்சா முடிக்க மாட்டேன்..

பொதுவா மிமிக்ரி செய்றவங்க சினிமால ஹீரோவா நடிக்க வந்துட்டா, மிமிக்ரி செய்றதை நிறுத்திரணும். இல்லைன்னா அவங்க உண்மையா நடிச்சாலே வேற ஒரு ஹீரோ நடிச்ச மாதிரியேதான் ரசிகர்களுக்குத் தெரியும். கொஞ்சம் கோபமா புருவமெல்லாம் உயர்ந்து.. வெறியா நடிச்சா.. ‘ஐயோ எம்.ஜி.ஆர். மாதிரியே இருக்கேம்’பாங்க.. கொஞ்சம் எமோஷனலா.. பாசமா.. உருக்கமா நடிச்சிட்டா.. ‘அட்டா அப்படியே சிவாஜி மாதிரியே இருக்கேம்’பாங்க. இதுனாலதான் சொல்றேன், ஹீரோ அஸார் இனிமேல் மிமிக்ரி செய்றதை விட்ரணும்.

இப்பக்கூட நான் கார்த்திக்கு அப்பாவா நடிச்சிருக்கேன். இதுல கொடுமையைப் பாருங்க. 25 வருஷத்துக்கு முன்னாடி கார்த்தியோட அப்பாவான சிவக்குமாருக்கு நான் மகனா நடிச்சிருக்கேன். ஆனால் இப்போ நான் அவரோட மகன் கார்த்திக்கு அப்பாவா நடிச்சிருக்கேன். ஸோ.. எல்லாரும் இந்த காலேஜ் வாழ்க்கையையும், வயதையும் கடந்துதான் வந்திருக்கோம்.

வாத்தியார் ராமன்னு ஒரு நடிகர் இருக்கார். கவிதாலயா மட்டுமல்ல பல படங்கள்ல.. பல நடிகர்களுக்கு வசனப் பயிற்சி கொடுத்தவர். டைட்டிலேயே அவருக்கு ‘வசனப் பயிற்சி -வாத்தியார் ராமன்’னு போடுவாங்க. 1986-ல் அவரோட மகனுக்குக் கல்யாணம். அப்போ நான் ஹியூமர் கிளப்ல செகரட்டரியா இருந்தேன். அந்தக் கல்யாண ரிசப்ஷன்ல மிமிக்ரி செஞ்சேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி, மனோகர், நம்பியார், கமல், ரஜினின்னு எல்லா நடிகர்களை போலவும் நடிச்சுக் காட்டினேன்.

எனக்கு முன்னாடி முதல் வரிசைல இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் உக்காந்திருந்தார். என் ஷோ முழுதையும் பார்த்து விழுந்து, விழுந்து சிரிச்சார். ஷோ முடிஞ்சதும் ‘அந்தப் பையனை கூப்பிடுங்க. நான் கொஞ்சம் பேசணும்’ என்றார். நான் போனேன்.. என் கையைப் பிடிச்சு ‘எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு கொடுப்பியா?’ன்னாரு. ‘என்ன ஸாரு?’ன்னேன்.. ‘இனிமேல் யார் மாதிரியும் நடிச்சு மிமிக்ரி செய்ய மாட்டேன்’னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுன்னாரு.. எனக்கு திக்குன்னு ஆயிருச்சு.. அவ்ளோ மோசமாவா நாம நடிச்சிட்டோம்னு நினைச்சுட்டேன்.

அதுக்கப்புறம் அவரே சொன்னாரு.. ‘நீ ஒரு நடிகனா மாறினா அதுல வேற யாரோட சாயலும் இருக்கக் கூடாது.. அதுக்காகத்தான் சொல்றேன்.. இனிமேல் மிமிக்ரி செய்ய மாட்டேன்னு சத்தியம் செய்யு’ன்னாரு.. அதுக்கப்புறமாத்தான் தெரிஞ்சது… அவர் என்னை அவர் படத்துல நடிக்க வைக்கப் போறாருன்னு.. 1987-ல் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்துல நான் இப்படித்தான் அறிமுகமானேன்.

20, 25 வருஷத்துக்கு முன்னாடி இருந்த தமிழ்த் திரையுலகம் வேற.. இப்போ சினிமா இருக்குற செட்டப் வேற.. யார் வேணும்னாலும் இப்போ நடிக்கலாம். படம் நல்லாயிருந்தால் படம் ஓடும். ‘அன்னக்கிளி’ படத்துக்கு முதல் 15 நாளைக்கு பிக்கப்பே இல்லை.. கூட்டமே இல்லை. அதுக்கப்புறம்தான் கூட்டம் அள்ளுச்சு. ‘முதல் மரியாதை’ படத்துக்கு சாந்தி தியேட்டர்ல முதல் வாரம் ஒண்ணுமே இல்லை. அதுக்கப்புறம்தான் ஓடத் துவங்குச்சு.. ‘ஒரு தலை ராகம்’ படத்துக்கு முதல் பத்து நாள் பேச்சு, மூச்சே இல்லை. அதுக்கப்புறம்தான் ஒரு வருஷம் ஓடுச்சு..

இன்னிக்கு மொத்தமே மூணு நாள்தான் தியேட்டர்ல படம் ஓடுது.. வெள்ளி, சனி, ஞாயிறு.. மூணே நாள்ல படத்தை முடிச்சுடறாங்க. படம் இந்த மூணு நாள்ல பிக்கப் ஆனால், திங்கள்கிழமை இருக்கும். இல்லைன்னா ஞாயித்துக்கிழமையோட காலி.. இதுதான் இன்னிக்கு தமிழ் சினிமாவோட நிலைமை. இப்படி தியேட்டர்ல படத்தை விட்டு வைக்கலைன்னா படத்தைப் பத்தி மவுத் டாக் எப்படி பரவும்..?

அன்னிக்கு ‘அன்னக்கிளி’ படத்துக்கும் இதே மாதிரி நடந்திருந்தால் ஒரு இசைஞானி உருவாகியிருப்பாரா..? இன்னிக்கு இப்படியொரு அவசர யுகத்துல.. பாஸ்ட் புட் மாதிரி ஷார்ட் பிலிம் மாதிரி படத்தை ஓட்டிக்கிட்டிருக்காங்க. இந்த நேரத்துல அஸார் நீ தைரியமா உள்ள வந்திருக்க.. வாழ்த்துகள்..!

அம்பானியோட பையன் 108 கிலோல இருந்தானாம். இப்போ உடற்பயிற்சியெல்லாம் செஞ்சு 46 கிலோ குறைஞ்சுட்டானாம். இதை ஒரு பெரிய நியூஸ்ன்னு சொல்லி எல்லா பத்திரிகைகள்லேயும் எட்டு காலத்துல செய்தி போட்டிருக்காங்க. டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்ல போட்டோவோட நியூஸ் அடிச்சுத் தள்ளுறாங்க. அம்பானி உலகப் பணக்காரர்களின் லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பவர். அவருடைய மகனைப் பற்றிய ஒரு செய்தின்னு சொன்னவுடனேயே எல்லாருக்கும் அதுதான் நியூஸா தெரியுது.  அதே மாதிரி ஒரு கோடம்பாக்கத்து சினிமா செய்தியை எழுதச் சொல்லுங்க.. எழுத மாட்டாங்க.

இன்னிக்கு தமிழ்ச் சினிமாவில் குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்களைத் தவிர்த்த மற்ற குறும் தயாரிப்பாளர்களின் நிலைமை இதுதான். ஒரு படம் எடுத்தாங்கன்னா அவ்ளோதான். அடுத்த படத்தை எடுக்க முடியல. எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல்தான் தமிழ்ச் சினிமாவுலகம் இன்னிக்கு இருக்கு. எத்தனைவிதமான சவால்கள் தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு இருக்கு தெரியுமா..?

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இந்த ஒரு படத்தோட நிறுத்திரக் கூடாது. அடுத்தப் படத்துக்கு அரிவாளைத் தூக்கிட்டு வந்திரணும். இந்தப் படத்தை ஓட வைக்குறது ஊடகங்களின் கைகளிலும், ரசிகர்களின் கைகளிலும்தான் இருக்கு.

ஒரு புதிய ஹீரோவை வைத்து அவனை நம்பி படத்தை எடுத்திருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். அடுத்த முறை நான் அவரைப் பார்க்கும்போது நல்ல டீ ஷர்ட்.. நிறைய முடியுடன்.. முடிஞ்சா சிக்ஸ் பேக்குடன் கெத்தா இருக்கணும்.

விஜய் சேதுபதிகிட்ட ஒரு மேடைல நான்தான் கேட்டேன். ‘உங்களுக்கு அடுத்த ஹீரோயினா யார் வேணும்னு..?’ ‘அதோ அங்க இருக்காங்களே நயன்தாரா அவங்கதான்’னார். கிடைச்சாங்களா இல்லையா..? அந்தப் படம் ஜெயித்ததா இல்லையா..?

மக்கள் அண்ணாந்து பார்க்குற நடிகர்கள் சிலர் இருக்காங்க. இன்னும் சிலரை சோதாவா பார்ப்பாங்க. ஆனா ஒரு சிலரை மட்டும்தான் இவன் நம்மாளுன்னு நினைச்சு பார்ப்பாங்க.. அதுதான் இந்த விஜய் சேதுபதி. படத்துல இந்த மாதிரி ஹீரோக்களை பார்க்குற ரசிகன் இவனே டூயட் பாடுற மாதிரி நினைச்சுக்குவான்.. இவனுக்கே அந்த ஹீரோயின் கிடைச்ச மாதிரி சந்தோஷப்படுவான்.

இப்போதெல்லாம் யதார்த்தமான, பில்டப் அதிகமில்லாமல் இருக்கும் படங்களே ஜெயிக்கின்றன. அப்படியொரு படமாக அஸார் இதைக் கொடுத்தால் படம் நிச்சயம் ஜெயிக்கும். சில பேர் முதல் படத்துலேயே வாழ்க்கைலேயே செட்டிலாயிருவாங்க. ஆனால் அதுக்கு கடின உழைப்பு உழைக்கணும். அஸாரின் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள்ன்னு நிறைய பேர் இருக்காங்க. எல்லார்கிட்டேயும் நல்ல பெயர் எடுக்கணும்.

இந்தப் படத்துக்கு புதுமுக இசையமைப்பாளர் ஷான்தேவ் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் நிச்சயம் நல்லா வந்திருக்கும்னு நினைக்கிறேன். பாடல்கள், திரைக்கதை, நடிப்பு, வசனம்ன்னு எல்லாம் கலந்து சரியா வந்திருந்தால் படம் ஓடும்.

இப்போவெல்லாம் 2 மணி நேரம்தான் படத்துல உக்காந்திருக்கான். அதுக்கு மேல உக்கார மாட்டேன்றான்.  2 மணி நேரத்துக்கு மேல போயிட்டா ‘கட் பண்ணு..’ ‘கட் பண்ணு’ன்றாங்க. ஆனா இவங்க முதல்ல கை வைக்குறது காமெடியன்கள் மேலதான்.

ஹீரோ வானத்தைப் பார்த்துட்டே நிப்பாரு. அதையெல்லாம் விட்ருவாங்க. ஹீரோயின் அழுது முடிச்சு கண்ணைத் துடைச்சிட்டிருப்பாங்க. அதைக்கூட விட்ருவாங்க. கை வைக்கிறதெல்லாம் காமெடியன்களாகிய எங்க மேலதான். இப்போவெல்லாம் தோட்டத்துல யூஸ் பண்ற கத்திரியைத்தான் சீன் வெட்றதுக்கு யூஸ் பண்றாங்க.

இப்போ பாடல் காட்சில பொம்பளைங்களே எந்திரிச்சு வெளில போறாங்க. ஆனால் காமெடி காட்சில யாரும் எந்திரிச்சு போக மாட்டாங்க. தமிழ்ச் சினிமால 50, 60 வருஷ வரலாற்றில் காமெடி காட்சிகள் மற்றும் வெறித்தனமான சண்டைக் காட்சிகளில் ரசிகர்கள் யாரும் எந்திரிச்சு வெளில போக மாட்டாங்க. இது மாற்ற முடியாத விதி..!

இந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும், தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படம் ஜெயிக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்..” என்றார்.

Our Score