சினிமாவில் தடியெடுத்தவன் தண்டல்காரன் கதையாக சக்தி படைத்தவர்களுக்கு ஒரு சட்டமும், சக்தியில்லாதவர்களுக்கு வேறொரு சட்டமும் இருக்கிறது. கிட்டத்தட்ட அரசியல் உலகம் போலத்தான்.
ஒரு படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் அந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்துகிறது. இதற்காக தங்களது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி தனது சக உறுப்பினர்களுக்கு அறிக்கையாகவும் அறிவித்தது.
ஆனால் ஸ்டார்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் பெரிய தயாரிப்பாளர்களாலேயே அதனை பின்பற்ற முடியவில்லை.
நடிகர்களில் அஜீத் தனது படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதேயில்லை. அதேபோல் நயன்தாராவும் தனது படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை புறக்கணித்தே வருகிறார். காரணம் கேட்டால், சென்ட்டிமெண்ட்டாக தான் ஒரு விழாவில் கலந்து கொண்டால் அந்தப் படம் தோல்வியடையும் என்று தான் கருதுவதாகச் சொல்கிறார் நயன்தாரா.
இதனாலேயே இவர் நடித்த அத்தனை படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அதன் ஹீரோக்களும், மற்றைய நடிகர், நடிகர்களும்தான் நயன்தாராவுக்கும் சேர்த்தே பேசிவிட்டுப் போவார்கள்.
இன்றைக்கு நடந்த ‘காஷ்மோரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் இதேதான் நடந்தது.
படத்தின் நாயகிகள் இருவருமே வரவில்லை. இது பற்றி கிண்டல் செய்து பேசிய நடிகர் விவேக், “இங்க நயன்தாரா வரலை.. அவங்களுக்கும் சேர்த்துதான் நான் பேச வேண்டியிருக்கு. ஏன் வரலைன்னு கேட்டால், ரொம்ப காமெடியா ஒரு விஷயத்தைச் சொல்வாங்க.. இவங்கன்னு இல்லை. எல்லாருமே இப்படித்தான்.. ‘நான் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தா அந்தப் படம் ஓடாது’ன்னு சொல்லி எஸ்கேப்பாயிருவாங்க.
இப்படிச் சொல்றதுக்கு பதிலா, ‘நான் கடைசி பேமேண்ட் வாங்குனா படம் ஓடாது. அதுனால அது வேண்டாம்’ன்னு எந்த ஹீரோயினும் சொல்ல மாட்டேன்றாங்க. அதைச் சொன்னாங்கன்னா தயாரிப்பாளர்களும் கொஞ்சம் வாழ்வாங்க இல்லியா..?” என்று மென்மையாக போட்டுத் தாக்கினார்.
சீனியர் காமெடியன் என்பதால் விவேக்கின் இந்த கிண்டல் நயன்தாராவின் அகராதியிலும் மென்மையாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்பலாம்.
நயன்ஸ் சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. நயன்தாரா கடைசியாக 2014-ம் வருடம் ஜூன் 28-ம் தேதி சத்யம் தியேட்டரில் நடைபெற்ற ‘அமரகாவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரிஷாவுடன் இணைந்து கலந்து கொண்டார். அந்தப் படம் நடிகர் ஆர்யாவின் தம்பி ஹீரோவாக நடித்தது. ஆர்யாவின் சொந்தப் படம் என்பதாலும்தான் ஆர்யாவுக்காக தான் கலந்து கொண்டதாக சொன்னார் நயன்தாரா.
ஆனாலும் நயன்தாராவின் சென்டிமெண்ட் இந்தப் படத்திலும் அபாரமாக வேலை செய்தது. ‘அமரகாவியம்’ படம் வாஷ்அவுட் ஆனது..!
இதெல்லாம் தெரிந்துதான் தயாரிப்பாளர்கள் நயன்தாராவுக்கு எதிராக எந்த முணுமுணுப்பையும் எழுப்பாமல் இருக்கிறார்கள்..!