full screen background image

விஸ்வாசம் – சினிமா விமர்சனம்

விஸ்வாசம் – சினிமா விமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் அஜித்குமாருடன் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். மேலும், கெஜபதி பாபு, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரமேஷ் திலக், அனைக்கா, கோவை சரளா, சுஜாதா, சலோனி, ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணன், மதுமிதா, கலைராணி, பாக்யஷ்ரி, சாக்ஷி அகர்வால், தப்பா, பாபி கோஷல், டி.எம்.கார்த்திக், லக்கி நாராயணன் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வெற்றி. இசை – டி.இமான், படத் தொகுப்பு – ரூபன், சண்டை இயக்கம் – திலிப் சுப்பராயன், நடன இயக்கம் – பிருந்தா, கல்யாண், கலை இயக்கம் – மிலன், வசனம் – சிவா, மணிகண்டன், சந்திரன், அந்தோணி பாக்யராஜ், ரா. சவரிமுத்து,உடை அலங்காரம் – ராஜன், ஒப்பனை – குப்புசாமி, VFX – ஹரிஹரசுதன், கலரிஸ்ட் – ராஜசேகர், வசன ஒலிப்பதிவு – ஜெகன், ஒலி வடிவமைப்பு – உதயகுமார், இணை இயக்குநர் – ராஜசேகர், புகைப்படங்கள் – சிற்றரசு, இணை எழுத்து – ஆதி நாராயணா, தயாரிப்பு மேற்பார்வை – R.அன்பழகன், தண்டவ கிருஷ்ணா, உடைகள் வடிவமைப்பு  – தாட்ஷா.A.பிள்ளை, அனுவர்த்தன், பாடல்கள் – தாமரை, விவேகா, யுகபாரதி, அருண்பாரதி, சிவா, நடனம் – பிருந்தா, கல்யாண், அசோக் ராஜா, நிர்வாக தயாரிப்பு – ராகுல், இணை தயாரிப்பு – G.சரவணன் & சாய் சித்தார்த், மக்கள் தொடர்பு – டி ஒன், தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர்கள் – டி.ஜி.தியாகராஜன், செல்வி தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன், எழுத்து, இயக்கம் – சிவா.

இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது..!

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் அஜித்.

‘வீரம்’ படத்தில் அண்ணன், தம்பிகள் பாசம்.. ‘வேதாளம்’ படத்தில் தங்கை மீதான பாசம்.. ‘விவேக’த்தில் மனைவி மீதான பாசம் என்று உறவுகள் மீதான பாசத்தை மையமாக வைத்தே கதை செய்திருக்கும் இயக்குநர் சிவா, இந்த முறை இந்த ‘விஸ்வாசம்’ படத்தில் அப்பா – மகள் பாசத்தை மையக் கருவாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

தேனி மாவட்டம் கொடுவிளார்பட்டி என்னும் கிராமத்தில் பெரும் தலைக்கட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ‘தூக்கு துரை’ என்னும் அஜித். உற்றார், உறவினர்கள், அக்காள்கள், அண்ணன்கள் என்று கூட்டுக் குடும்பமாக வாழும் அவரும் அந்த ஊருக்கு ஒரு டான்தான்.

நிறைய அடிதடி, பஞ்சாயத்து என்று உள்ளூரில் பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லாமல் வாழ்பவர். அதே ஊருக்கு  மருத்துவ முகாம் நடத்த வரும் பெண் மருத்துவர் நிரஞ்சனா என்னும் நயன்தாராவுடன் முட்டல் மோதலாகிறது. தன் கண்ணெதிரேயே அஜித் நடத்தும் அடிதடியைப் பார்த்து நயன்தாரா உள்ளூர் போலீஸில் அஜித் மீது புகார் கொடுக்க… புகாரை தானே வாங்கிக் கொடுத்து லாக்கப்பில் போய் அமர்ந்து கொள்கிறார் அஜித்.

ஆனால் இதற்கடுத்து நயன்தாராவின் மருத்துவ முகாமை நடத்தவிடாமல் உள்ளூர் ரவுடிக் கும்பல் வழி மறிக்க.. வேறு வழியில்லாமல் அஜித் மீது கொடுத்தப் புகாரை திரும்பப் பெறுகிறார் நயன்தாரா. இப்போது மருத்துவ முகாம் தங்குத் தடையில்லாமல் அஜித்தின் அரிசி மண்டியிலேயே நடக்கிறது.

வெட்டுக் குத்துக்கு அஞ்சாத அஜித் ஊசி குத்துவதற்கு பயப்படுவதும், அவரிடம் இருக்கும் இன்னசென்ட் கலந்த குழந்தைத்தனமும் நயன்தாராவை ஈர்க்கிறது. போதாக்குறைக்கு அவருடைய மிகப் பெரிய குடும்பத்தினர் காண்பிக்கும் பாசப் போராட்டமும் நயன்தாராவை அவர் பக்கம் ஈர்க்கிறது.

மருத்துவ முகாம் முடிந்து ஊருக்குப் போனவர் அடுத்த நாளே தனது தந்தையுடன் நேரில் வந்து தான் அஜித்தை திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்கிறார்கள். அஜித் இதை எதிர்பார்க்கவில்லையென்றாலும் ஏற்றுக் கொள்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு தனக்குக் கிடைக்கும் மருத்துவ மேற்படிப்பைக்கூட தியாகம் செய்கிறார் நயன்தாரா. தம்பதிகளுக்கு ஒரு பெண்ணும் பிறக்கிறாள். இன்னும் இந்த அடிதடியை மட்டும் கைவிடாமல் இருக்கிறார் அஜித். ஒரு சமயம் அப்படியொரு அடிதடியில் அவர்களுடைய பெண்ணும் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராட.. நயன்தாரா கோபப்படுகிறார்.

இனிமேலும் இந்த ஊரில் இருந்தால் தனது குழந்தைக்கு ஆபத்து என்று சொல்லிவிட்டு அஜீத்தைவிட்டு பிரிந்து குழந்தையையும் தூக்கிக் கொண்டு மும்பைக்குச் சென்று விடுகிறார். மும்பையில் நிரஞ்சனா தன் பெயரில் மிகப் பெரிய பார்ம்சூட்டிக்கல்ஸ் கம்பெனியை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இவர்களின் பிரிவு பத்தாண்டு காலத்தைக் கடந்துவிடுகிறது. இப்போது ஊர்க்காரர்களும், உறவுகளும் அஜித்தை உசுப்பிவிட.. தனது மகளைப் பார்ப்பதற்காக மும்பைக்கு வருகிறார் அஜித். கூடவே அவருடைய மாமா தம்பி ராமையாவும், பங்காளி ரோபோ சங்கரும்.

வந்த இடத்தில் நயன்தாரா அஜீத்தை வரவேற்கவில்லையென்றாலும் சூழல் அவரை இருக்க வைக்கிறது. அஜித்தின் மகள் அனைகாவை யாரோ கடத்திச் செல்ல முயற்சிக்க அதைத் தடுக்கிறார் அஜித்.

சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையான தனது மகளின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணரும் நயன்தாரா, மகளின் நீண்ட நாள் கனவான தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் முடியும்வரையிலும் அஜித்தை தன் மகளுக்கு பாடிகார்டாக நியமிக்கிறார்.

அஜித்துதான் அனைகாவின் அப்பா என்பதை எந்தக் காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழலிலும் அவளிடம் சொல்லக் கூடாது என்கிற நயன்தாராவின் கண்டிஷனுக்கும் ஒத்துக் கொண்டு தன் மகள் கூடவே பாடிகார்டாக இருக்கிறார் அஜித்.

அவருடைய எண்ணமெல்லாம் தன் மகளை கொலை செய்ய முயல்பவர் யார்.. எதற்காக கொலை செய்ய நினைக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதுதான். அதே சமயம் தனது மகளின் எதிர்காலம் அழியக் காரணமாக இருந்த அனைகாவை கொலை வெறியோடு துரத்துகிறார் பெரும் பணக்காரரான ஜெகபதி பாபு. இந்த விஷயமே தெரியாமல் அஜித்திடம் மகளை ஒப்படைத்துவிட்டு காத்திருக்கிறார் நயன்தாரா. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘விஸ்வாசம்’ படத்தின் திரைக்கதை.

அப்பா மகளுக்கு இடையையான பாசத்திற்கு ‘விஸ்வாசம்’ என்று பெயர் சூட்டவே முடியாது. அதேபோல் ஒரு கணவனுக்கும், மனைவிக்குமான பந்தத்தை ‘விஸ்வாசம்’ என்று சொல்லிவிடவும் முடியாது. ஆனால் இங்கே ‘விஸ்வாசம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார் இயக்குநர். ‘பொருந்தா தலைப்பு’ என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்திரைப்படம் 2008-ம் ஆண்டு தெலுங்கில் வெங்கடேஷ், நயன்தாரா நடித்த ‘துளசி’ என்கிற படத்தின் கதைக் கருவை அப்படியே கொண்டுள்ளது. அந்தப் படத்தில் மகன்தான் பிரதானம். இந்தப் படத்தில் மகள்தான் பிரதானம். அந்தப் படத்திலும் நயன்தாராதான் மனைவி. இதிலும் நயன்தாராதான் மனைவி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதே நயன்தாரா இந்த ஒற்றுமையைப் பற்றி இயக்குநரிடம் நிச்சயமாகச் சொல்லியிருப்பார் என்றே நம்புகிறோம். ஒருவேளை கதை உரிமம் பெற்றே இந்தப் படத்தை எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறோம்.

அஜித்திற்கு அட்டகாசமான ‘கம் பேக்’ வேடம் இது. கல்யாணத்திற்கு முந்தைய காலக்கட்டத்திற்கான தோற்றத்திற்காக மெனக்கெட்டிருக்கிறார்கள் மேக்கப்பில்.. ஆனாலும் அதையும் தாண்டி குளோஸப்பில் வயோதிகம் தெரிந்தாலும், அதுவும் அழகாகத்தான் தெரிகிறது.

படம் முழுவதும் ‘ராமராஜ் வேட்டி’க்கு விளம்பரம் கொடுப்பவரை போல அஜித்தை வேட்டி சட்டையில் வலம் வர வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முற்பாதியில் தம்பி ராமையா, ரோபோ சங்கர் கூட்டணியை வைத்து நகைச்சுவையை வலுக்கட்டாயமாக வரவழைத்து சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இந்தக் கூட்டணியில் புதிதாக அஜித்தும் சேர்ந்து காமெடிக்கு முயற்சி செய்திருக்கிறார். சில இடங்களில் அது ஜெயித்திருக்கிறது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

3-ம் வகுப்புவரையில் படித்ததையே பெருமையாகச் சொல்லிக் கொண்டு அவ்வப்போது ரோபோ சங்கரிடம் ஆங்கில வார்த்தைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதையும் அரையும்குறையுமாகச் சொல்லி போகிறபோக்கில் சிரிக்க வைத்திருக்கிறார் அஜித்.

எப்போதும் சினிமாக்களில் பெண் பார்க்கும் படலம்தான் நடக்கும். ஆனால் இந்தப் படத்தில் முதல் முறையாக மாப்பிள்ளை பார்க்க நயன்தாரா வந்திருக்கும் காட்சி ரசனையானது. அந்தக் காட்சியில் அஜித் காதலை உறுதிப்படுத்த நயன்தாராவிடம் கேட்கும்விதமும், அதைப் படமாக்கியவிதமும் ஜோர்..!

படத்தின் பிற்பாதியில்தான் அதிகமான ரசிகர்களை அஜித் தன்வசப்படுத்தியிருக்கிறார். தன் மகள் வாயாலேயே தான் வெறுக்கப்படும் காரணத்தைத் தெரிந்து கொள்ளும் அஜித்தின் நடிப்பும், பேச்சற்ற முக பாவனையும் ‘ஐயோ பாவம்’ என்கிற உணர்வை வெகுவாக எழுப்பிவிட்டது. இந்தக் காட்சி கடைசிவரையிலும் ரசிகர்களின் மனதைவிட்டு விலகாமல் இருந்ததுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம்.

‘அப்பா’ என்பதை மறைத்துக் கொண்டு மகளிடம் பேசும் பேச்சுக்களும், கணவன் என்பதை மறந்துவிட்டு நயன்தாராவிடம் ‘மேடம்’ என்று மரியாதையாக விளிக்கின்ற காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார் அஜித்.

அந்த வெள்ளை முடியும், வெள்ளை தாடியும் சேர்ந்து அவரை ஒரு அப்பாவாக உருமாற்றினாலும், மகளுடன் பேசும் அனைத்துக் காட்சிகளிலும் அவர் காட்டும் உடல் மொழியும்கூட படத்தில் ஒன்ற வைத்துள்ளது.

டாக்டர் நிரஞ்சனா என்ற நயன்தாரா அழகி மட்டுமல்ல.. பேரழகியும்கூட. படத்தில் அஜித்தே இதைத்தான் சொல்கிறார். ஒளிப்பதிவாளரின் கை வண்ணத்தில் பேரழகியாக ஜொலிக்கிறார் நயன்ஸ். படத்தில் இவர் வரும் பிரேம்களில் இவர் மட்டுமே அழகு என்பதைச் சொல்லாமல் சொல்கிறது கேமிரா.

நடிக்கவும் செய்திருக்கிறார் நயன்தாரா. ரொமான்ஸ் காட்சிகளில் அஜித்திற்கு ‘விம்’ போட்டு விளக்கும் காட்சியில் நயன்ஸை அனைவருக்குமே பிடித்துப் போகிறது. மகள் காணாமல் போன நிலையில் அவர் படும் பதற்றமும், தவிக்கும் தவிப்பும் படத்தின் கனத்தைக் கூட்டியிருக்கிறது. நடிப்பும், அழகும் ஒன்று சேர அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கும் நயன்ஸூக்கு, இன்னும் பல கதைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

ஜெகபதி பாபு வில்லன் என்னும் கேரக்டர் ஸ்கெட்ச்சில் சிக்கியிருந்தாலும் மகள் மேல் உள்ள பாசத்தில் சிக்குண்ட முட்டாள் மனிதராகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். தன் மகள் அவர் கொண்ட பாசமும், அஜித் தன் மகள் வைத்திருக்கும் பாசமும் ஒன்றுதான். இதை கிளைமாக்ஸ் காட்சியில் பக்குவமாகச் சொல்லி திசை திருப்பி மனதை ‘டச்’ செய்திருக்கிறார் இயக்குநர். இதனாலேயே இவரை பெரிதாக நினைக்கத் தோன்றவில்லை.

மகளாக நடித்திருக்கும் அனைகாவின் நடிப்பும் நன்று. யாரோ என்று நினைத்து “அங்கிள்…” என்று அழைத்து அஜித்துடன் பழகத் துவங்கும்போதே நமக்குள் பிடித்துப் போகிறார். தனது அப்பாவை தனக்குப் பிடிக்காது என்பதற்கு அவர் சொல்லும் காரணமும், ஓட்டப் பந்தயத்தில் அப்பாவை உருவகப்படுத்தி அவர் சொல்லும் விளக்கமும் நமக்கே அதிர்ச்சியை அளிக்கிறது என்றாலும், அதைக் கேட்கும் அஜித்தும் அதை அதிர்ச்சியை வெளிப்படுத்துவது அற்புதமான காட்சி.

“அவர்கூட இருக்கும்போது ஏதோ ஒரு ஃபீலிங் வருதும்மா…” என்று அனைகா நயன்ஸிடம் சொல்வது டச்சிங்கான காட்சி. கிளைமாக்ஸில் ஜெகபதியிடம் அஜித் அடி வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு புரியாமல் நயன்ஸிடம் “இவர் யாரும்மா… எதுக்கு இப்படி அடி வாங்குறார்..?” என்று நயன்தாராவிடம் கேட்கும் காட்சி உச்சப்பட்ச செண்டிமெண்ட்.  கச்சிதமான இயக்கம்.

“அவர்தான் உன் அப்பா” என்று நயன்தாரா சொன்னவுடன் அஜித்தைப் பார்த்தபடியே அனைகா மைதானம் நோக்கி ஓடுவதும்.. ஓடுதளத்தில் அஜித்தின் குரலைக் கேட்டவுடன் அனைகாவுக்குள் ஒரு வெறி வந்து வெற்றியை நோக்கித் துரத்துவதும் அற்புதமான இயக்கமும், நடிப்பும் கொண்ட காட்சிகள்.. அனைகாவுக்கு நமது பாராட்டுக்கள்.

அனைகா கடைசியாக அஜித்தை “அப்பா” என்று அழைக்கும் காட்சியில் சட்டென்று மனம் நெகிழ்கிறது.. ரசிகர்கள் அனைவரும் ‘அப்பாடா’ என்றதும் அந்தக் காட்சியில்தான்..! இயக்குநர் சிவா தான் நினைத்ததை சாதித்துக் காட்டியதும் அந்த ஒரு காட்சியின்போதுதான்..!

மேலும், திரும்பிய பக்கமெல்லாம் நட்சத்திரப் பட்டாளங்கள் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படத்தில் சாதாரண சின்னக் கேரக்டர்களுக்கெல்லாம் முகம் தெரிந்த ஆர்ட்டிஸ்ட்டுகளை நடிக்க வைத்து படத்தை பிரம்மாண்டமாக்கியிருக்கிறார்கள்.

சுஜாதா, மதுமிதா, சில காட்சிகளுக்கே ஆனாலும் குரல் வளம் மூலமாகவே காட்சியை பிடிக்க வைத்திருக்கும் கோவை சரளா, கலைராணி, பேத்தியின் பிரிவை நினைத்து அழுது கண்ணீர்விடும் அந்தப் பாட்டி என்று தாய்க்குலங்களின் நடிப்பில் மின்னுகிறது இத்திரைப்படம்.

அதேபோல் நிமிடத்திற்கு நிமிடம் ‘விட்’ அடிக்கும் ரோபோ சங்கர், இவருக்குச் சரியான விதத்தில் கவுண்ட்டர் கொடுக்கும் தம்பி ராமையா.. இந்தக் கூட்டணியில் சேர்ந்து கொண்டு அஜித் செய்யும் சிற்சில காமெடிகள் ஒர்க் அவுட்டாகியிருக்கின்றன. கூடுதல் இணைப்பாக யோகி பாபுவும் தன் பங்குக்கு காமெடியை உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறார்.

மேலும் ஓ.ஏ.கே.தேவர், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாரயணன், டி.எம்.கார்த்திக் என்று குணச்சித்திரங்களும் இருக்கிறார்கள். இவர்களையும் தாண்டி படத்தின் பிற்பாதியில் டெம்போவை இறக்கவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விவேக். அவருடைய போர்ஷனில் காமெடி பெரிதாக இல்லையென்றாலும் உதட்டோரம் புன்னகையைக் கடைசிவரையிலும் சிந்த வைத்திருக்கிறார் விவேக். நன்றிகள் பல.

மற்றபடி அனைத்து நாயக சினிமாக்களிலும் இருக்கும் நாயக முகஸ்துதி, நாயகனுக்கான முன்னோட்டம்.. நாயகனுக்கான தனி மரியாதை.. என்று எல்லாவித ஹீரோயிஸத்தையும் இந்தப் படமும் தாங்கித்தான் நிற்கிறது.

படத்தின் முதல் காட்சியில் துவங்கி கடைசிவரையிலும் இது ‘தல’ அஜித் படம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. இதனாலேயே அவருக்கான பில்டப்புகள் படம் முழுவதும் அவ்வப்போது நிரவியபடியே வருவதால் ‘சூப்பர் ஸ்டார்’ படத்துக்குண்டான அனைத்துப் பெருமைகளையும் இந்தப் படமும் பெற்றிருக்கிறது.

சண்டை காட்சிகளில் புதிதாக எதுவும் இல்லை. ஆனால் சூப்பர் ஸ்டார்கள் சண்டையிட்டால் எப்படியிருக்குமோ அப்படியேதான் இதிலும். தொழில் நுட்பத்தின் உச்சத்தைத் தொட்டுக் காண்பித்திருக்கிறார்கள். வில்லன்கள் பறக்கிறார்கள். தெறித்துப் போய் விழுகிறார்கள். ரத்தம் சிந்தி கதறுகிறார்கள். கடைசியில் ஒப்புக்குச் சப்பாணியாக அஜித்தும் ஜெகபதியிடம் அடி வாங்கி, மிதிபட்டு ரத்தம் சிந்துகிறார். அதற்கு இதுவும் சரியாகிவிட்டதுபோலவே தோன்றுகிறது.

ஆனால் அந்தக் காட்சியை கொஞ்சம் பாசத்தனமாகவும், குடும்பத்தனமாகவும் படமாக்கியிருப்பதால் சண்டை காட்சி போலவே தெரியவில்லை. படத்தின் உயிர் நாடியே கிளைமாக்ஸில் இருப்பதால் அனைத்தையும் மறந்து ‘பிரிஞ்ச குடும்பத்தை சேர்த்து வைச்சிருங்கப்பா’ என்று ரசிகர்களையே வாய்விட்டு கேட்கும் தருணத்தை உருவாக்கிவிட்டார் இயக்குநர் சிவா.

வெற்றியின் ஒளிப்பதிவுக்கு ஒரு ‘ஜே’ போடலாம். பிரம்மாண்டமான படம் என்பதை இந்தப் படத்தின் ஒளிப்பதிவே சொல்லாமல் சொல்கிறது. கூடிய கூட்டத்தைப் படமாக்கியதைவிடவும் தெளிவான, தரமான ஒளிப்பதிவை கடைசிவரையிலும் கொடுத்திருப்பதன் மூலம் திரையிலேயே அதைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி.

நயன்தாராவின் அழகு, கிராமத்தின் பேரழகு, வயல் வெளிகள், மும்பையின் புறக் காட்சிகள், கொட்டும் மழையில் சண்டை காட்சிகள், ஓட்டப் பந்தயக் காட்சிகள்.. என்று அனைத்திலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி.

அனைத்துப் பாடல்களுமே கணீர் என்று கேட்கின்றன. ஒலிக்கின்ற குரல்கள் மூலமாக வார்த்தைகள் தெள்ளத் தெளிவாக செவிகளில் விழுகின்றன. இசையமைப்பாளர் டி.இமானின் இசை வஞ்சகமில்லாமல் வாழ்த்துரை வழங்கியிருக்கிறது. இடையிடையே சின்னச் சின்ன பிட்டுகள்போல பாடல்கள் ஒலிப்பதுதான் ஒரே குறை.

‘கண்ணான கண்ணே’ பாடல் மிக அழகான மெலடி. இதேபோல், ‘வானே வானே’ பாடலும் திரும்பத் திரும்பக் கேட்கச் சொல்கிறது. ஆனால் திரும்பவும் கேட்டால் ஏற்கெனவே கேட்ட மெட்டுதானே என்று ஆசுவாசம் கொள்ள வைக்கிறது. ‘தூக்கி அடி’ பாடல் அஜித்தின் ரசிகர்களை தியேட்டருக்குள்ளேயே ஆட வைத்திருக்கிறது.

பின்னணி இசையில் அஜித்தின் நாயக எமோஷனலை கூட்டும்வகையில் போட்டுத் தாளித்திருக்கிறார் இமான். அஜித்தின் அறிமுகக் காட்சியையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இத்தனை குளோஸப் காட்சிகளையும், நகைச்சுவையை வரவழைக்கும் அளவுக்கான காட்சிகளையும் கவனித்தும், சண்டை காட்சிகளில் சோர்வு தெரியாத வண்ணம் தொழில் நுட்ப உதவியுடன் கச்சிதமாக படத்தினை தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ரூபன்.

“எதற்காகவும் குடும்பம் பிரியக் கூடாது.. பெற்ற பிள்ளைகளின் நியாயமான ஆசைகளுக்குக் குறுக்கே நிற்கக் கூடாது…” என்கிற இரண்டு மிகப் பெரிய விஷயங்களை ஒரே படத்தில் கையாண்டிருக்கிறார் இயக்குநர் சிவா. இந்த இரண்டுக்கும் மிகச் சரியான களமான இந்தத் திரைக்கதையை எழுதி அதையும் சம அளவில் வைத்து எழுதியிருக்கிறார். பாராட்டுக்கள் இயக்குநர் சிவாவிற்கு.

‘பெற்றோர்கள் தங்களுடைய விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் குழந்தைகள் மேல் திணிக்கக் கூடாது’ என்பதையும் ஜெகபதி பாபு கேரக்டர் மூலமாகச் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதே சமயம் ‘வெற்றி மட்டுமே முக்கியம்.. தோல்வி என்ற பேச்சுக்கே வாழ்க்கையில் இடமில்லை’ என்று பயமுறுத்தவும் கூடாது என்பதை பக்குவமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. இது இன்றைய காலக்கட்டத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு அவசியமான கருத்துரை..!

கணவன், மனைவி பிரிந்தாலும் பெற்றக் குழந்தைகளின் வளர்ப்பிலும், முன்னேற்றத்திலும் ஒற்றுமையுடன் இருந்து வளர்த்தெடுக்கும் கடமையைச் செய்ய வேண்டும் என்பதையும் அழுத்தமாக இத்திரைப்படத்தில் சொல்லியிருப்பதால் இது குடும்பத்துடன் அனைவரும் காண வேண்டிய படமாகவும் ஆகிறது.

சண்டைக் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் வழக்கம்போல மக்கள் கனவாகவே நினைத்து தூக்கிப் போட்டுவிட்டுப் போய் விடுவார்கள் என்பதால் மற்றைய காட்சிகளே தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்குத் தேவை. அந்த வகையில் இத்திரைப்படம் குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற திரைப்படம் என்பதால் அவசியம் காண வேண்டிய படம்தான்..! மிஸ் பண்ணிராதீங்க..!

Our Score