full screen background image

“நடிகர் சங்கத் தேர்தலுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேவை” – விஷால் அணியினர் கோரிக்கை

“நடிகர் சங்கத் தேர்தலுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேவை” – விஷால் அணியினர் கோரிக்கை

“நடிகர் சங்க தேர்தலுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும்” என்று நடிகர் விஷால் அணியினர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தனர்.

தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 18-ந் தேதி சென்னையில் நடக்க உள்ளது. தற்போதைய தலைவர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஷால் தலைமையில் இன்னொரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இரு அணியினரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று பகலில் நடிகர் விஷால் தலைமையில், நடிகர்கள் நாசர், எஸ்.வி.சேகர், கார்த்தி, பொன்வண்ணன் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், “வரும் 18-ம் தேதி நடக்கவிருக்கும் தென் இந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு, தகுந்த பாதுகாப்பு வழங்க ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளோம். தற்போது உள்ள சூழலில், எந்தவித சிறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், அனைவரும் பயமின்றி வாக்களிக்கவும், உச்சகட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்தோடு சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவியும் உதவிடுமாறு வேண்டுகிறோம்.

எந்தவிதமான வன்முறையும், எங்களின் அணியினால் நடக்காது என்பதையும், நியாயமான ஜனநாயக முறையில் அமைதியான முறையில் தேர்தல் நடக்கவும் எங்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும் என்பதையும் இதன் மூலம் உறுதி அளிக்கிறோம்..” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்தவுடன், நடிகர்கள் விஷால், நாசர் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கடந்த கால் நூற்றாண்டுக்கு பிறகு தற்போதுதான் நடிகர் சங்க தேர்தல் முழு ஜனநாயக முறைப்படி நடக்கிறது. முக்கியமான நடிகர்-நடிகைகள் 80 சதவீதத்திற்கும் மேல் நேரில் வந்து வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் யார் மீதும் புகார் அளிக்கவில்லை. தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப் பெட்டிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுள்ளோம். நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது..” என்றனர். 

Our Score