full screen background image

“நடிகர் சங்கத்தை கார்ப்பரெட்டாக மாற்றுவதே எங்கள் லட்சியம்…” – பாண்டவர் அணி பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் !

“நடிகர் சங்கத்தை கார்ப்பரெட்டாக மாற்றுவதே எங்கள் லட்சியம்…”  – பாண்டவர் அணி பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் !

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை கோடம்பாக்கத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பத்திரிகையாளர்களிடத்தில் நடிகர் விஷால் பேசும்போது, “நாங்கள் அனைவரும் ஒரு நோக்கத்துக்காக போராடி வருகிறோம். எங்களுடைய நோக்கம் இப்போது கடைக்கோடியிலிருக்கும் கன்னியாக்குமரிவரை போய் சேர்ந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

எங்கள் அணியை ஆதரிப்பவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், 1,280 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதற்காக இவர்களை பணம் கொடுத்து அழைத்து வரவில்லை. தானாக வந்துள்ளனர்.

3 வருடங்களுக்கு முன்பு நடிகர் சங்கம் கட்டிடம் பற்றி கேள்வி கேட்டோம். பதில் வரவில்லை. தொடர்ந்து கேள்விகளை எழுப்பி இப்போது தேர்தலில் வந்து நிற்கிறோம். நல்ல விசயத்துக்காகவே நாங்கள் போராடுகிறோம்.

நடிகர் சங்க உறுப்பினர் பட்டியல் கேட்டோம். பொறுப்பில் இருந்தவர்கள் தரவில்லை. இதனால் பல லட்சங்கள் செலவு செய்து கோர்ட்டுக்கு போய் பட்டியலை வாங்கி இருக்கிறோம். 

தேர்தலில் வெற்றி பெற்றதும் நடிகர் சங்கத்தின் 19 கிரவுண்ட் நிலத்தை மீட்போம். அதில், புதிய கட்டிடம் கட்டுவோம். வருமானத்துக்கான ஏற்பாடுகளையும் செய்வோம். அந்த பணத்தில் நலிந்த கலைஞர்களுக்கு உதவுவோம். 

அவர்கள் கூறுவதை போல் நாங்கள் யாருக்கும் சரக்கோ, கோழி பிரியாணியோ வாங்கி கொடுக்கவில்லை. நாங்கள் சங்கத்துக்காக செலவழிக்கும் பணம் அனைத்தும் எங்கள் சொந்த பணம். எங்கள் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி மிகவும் பொறுப்புள்ளவர். இப்போதுகூட இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு நானும் கார்த்தியும் பொறுப்பாக கணக்கு பார்க்க வேண்டும். கார்த்திதான் எங்கள் சங்கத்தின் கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார். மற்றவற்றை எங்கள் சங்கத்தினர் பார்த்துக் கொள்வார்கள்.

நாங்கள் யாரோ பைனான்சியரிடம் இருந்து பணம் பெற்று சங்க வேலைகளை செய்கிறோம் என்று ராதாரவி குற்றம் சாட்டியுள்ளார். அது தவறான தகவல். அந்த பைனான்சியரின் முகவரியை அவர் கொடுத்தால் நாங்கள் அவரை சந்திக்க தயாராக உள்ளோம். நான் இதுவரை என்னுடைய படத்தை தயாரிக்க மட்டுமே பைனான்சியாரை நாடியுள்ளேன்.

இன்று அறிவிக்கப்பட்ட எங்களது பாண்டவர் அணியின் தேர்தல் அறிக்கை நடிகர்களிடையே மிகச் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

எஸ்.பி.ஐ. சினிமாஸுக்கு நாங்கள் பணத்தை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம். பணத்தை திருப்பி கொடுத்து நாங்கள் உறுதியாக நடிகர் சங்க கட்டிடத்தை மீட்டு விடுவோம்.

எனக்கு நடிகர் சங்கத்தை கார்ப்ரெட்டாக மாற்ற வேண்டும் என்ற எண்ணமுண்டு.  ஆகவே நடிகர் சங்கத்தில் படித்த நடிகர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளோம். நாங்கள் தயாரிக்கும் படத்தை நாங்களே மிக பெரிய அளவில் தயாரிக்கும் முடிவில் உள்ளோம்.

இந்த ஜனநாயக நாட்டில் கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயம்.

நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்ட மதுரை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு 40 நடிகர்-நடிகைகள் விரைவில் செல்ல இருக்கிறோம். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உறுப்பினரை பொறுப்பாளராக அறிவிக்க உள்ளோம்.

அனைத்து நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்கள் 18-ந்தேதி தவறாமல் சென்னைக்கு வந்து ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும்.  நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும். எங்கள் அணி ஜெயிக்க போவது உறுதி. 

வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து வாக்களிக்க விரும்புபவர்கள் நீதிபதியை அணுகி அவரிடம் அனுமதி பெற்று நேரில் வந்து வாக்களிக்கலாம்..” என்றார்.

நாசர் பேசும்போது, “நடிகர் சரத்குமார் நாங்கள் கமல்ஹாசனின் பேச்சை கேட்டு இதையெல்லாம் செய்வதாக ஒரு தொலைக்காட்சிக்கு தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அந்த அளவிற்கு அறிவில் குறைந்தவர்கள் அல்ல நாங்கள். எங்களுக்கும் சுயமாக சிந்திக்க தெரியும். இப்போது எனக்கே சந்தேகமாக இருக்கிறது.. ஏன் அனைத்து நடிகர்களும் எங்கள் எதிர் அணியினரை எதிர்க்கிறார்கள் என்று..!” என்றார் கிண்டலாக.

Our Score