full screen background image

விஷால் தயாரிப்பில் ஹரி இயக்கும் ‘பூஜை’..!

விஷால் தயாரிப்பில் ஹரி இயக்கும் ‘பூஜை’..!

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் தயாரிக்கும் புதிய படத்தை ஹரி டைரக்ட் செய்யப் போகிறார்.

ஏற்கெனவே ஹரி கடைசியாக இயக்கம் செய்த சிங்கம்-2-வின் பிரமாண்டமான வெற்றியினைத் தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்டிஆரை வைத்து இயக்கப் போவதாக பேச்சு எழுந்தது. பின்பு அதுவும் இல்லை என்றாகி.. தமிழ்த் திரையுலக இளம் நடிகர்கள் பலரிடமும் ரவுண்ட் அடித்துவிட்டு கடைசியாக விஷாலிடம் வந்து சிக்கியிருக்கிறார் ஹரி.

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் இப்போது தயாராகி வரும் ‘நான் சிகப்பு மனிதன்’ படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. அந்தப் படம் ரிலீசாவதற்கு முன்பாகவே தனது பேனரில் தயாராகும் இந்தப் படம் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார் விஷால். ஹரி டைரக்‌ஷனில் விஷால் நடிக்கப் போகும் இந்தப்படத்துக்கு ‘பூஜை’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள். ஏற்கனவே தாமிரபரணி படத்தில் இணைந்த இந்த வெற்றிக் கூட்டணி இரண்டாவதாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இதில் விஷாலுக்கு ஜோடி ஸ்ருதிஹாசன்.

பெரிய பட்ஜெட்டில் அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாராக உள்ள ‘பூஜை’யில் வழக்கமாக ஹரி படங்களில் இருப்பது போல சத்யராஜ், ராதிகா, சூரி, ஜெயப்பிரகாஷ், மனோபாலா, சந்தானபாரதி, சார்லி, ஆர் சுந்தரராஜன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வழக்கம்போல நா. முத்துக்குமாரே எழுதுகிறார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர் தயாரிப்பாளர் விஷால். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Our Score