இன்றைய தேதிப்படி இந்தத் தலைப்பில் உள்ள கேள்விதான் பல சினிமா பத்திரிகைகளுக்கும் முக்கிய விஷயமாக இருக்கிறது..!
ஒரு காலத்தில், ‘தான் யாரையும் காதலிக்கவில்லை’ என்று முதல் வாரம் சொல்லிவிட்டு.. அடுத்த வாரம் ‘ஆமாம்.. ஒரு நடிகையைத்தானே காதலிக்கிறேன்.. இதிலென்ன தப்பு..?’ என்றார்.
அந்த காதலியான நடிகை யாரென்று விளக்கெண்ணெய் போட்டுத் தேய்த்து பார்த்து பார்த்து அலுத்துப் போன கண்களுக்கு பாலீஷாகத் தென்பட்டது வரலட்சுமி மட்டுமே..! விஷால்-வரலட்சுமி இருவரின் நட்பும் அவ்வப்போது தொடர்ந்து கொண்டேயிருக்க அவராகத்தான் இருக்கும் என்பது இப்போதுவரையிலும் ஒரு ஊகமாகத்தான் இருக்கிறது…!
‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன், முந்தைய தினம் வெளியாகியிருந்த ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகையில் லட்சுமி மேனன் கொடுத்திருந்த ஒரு பேட்டியை வைத்து ஒரு கலகத்தை உண்டு செய்தார்.
“நீங்கள் விஷாலை காதலிக்கிறீர்களா..?’ இது கேள்வி. ‘இல்லை’. இது லட்சுமிமேனனின் பதில். அடுத்த கேள்வி. ‘விஷால் உங்களை காதலிக்கிறாரா..?’ – ‘எனக்குத் தெரியாது’. இது லட்சுமி மேனனின் பதில்.. என்னைக் கவர்ந்த புத்திசாலித்தனமான பதில் இது..” என்றார் பார்த்திபன்.
அடுத்து பேச வந்த நடிகர் விஷ்ணு லட்சுமி மேனனை பார்க்க தான் பல முறை முயன்றும், விஷால் அதைத் தடுத்துவிட்டதைச் சொல்லி, “விஷால் ஏன் இப்படி லட்சுமி மேனனை என் கண்ணுல காட்டாம மறைக்கிறான்னு இன்னிக்கு இங்க சொல்லணும்..” என்றார்.
பின்பு பேச வந்த விஷால், லட்சுமிமேனனை பற்றி நல்லவிதமாக நாலு வார்த்தைகள் பேசிவிட்டு, “சொந்த அப்பாவாலேயே கைதாகக் கூடாது என்பதால்தான் விஷ்ணுவிடம் லட்சுமியை காட்டவில்லை. அவன் இனிமேலும் லட்சுமி மேனனை பத்தி எங்கயாவது பேசினான்.. அவன் வாங்கி வைச்சிருக்கிற கிரிக்கெட் பேட்டாலேயே அடிப்பேன்…” என்றார்.
அட.. ஹீரோக்களெல்லாம் கூடிப் பேசி.. பேச்சுக்கு பேச்சும் ஆச்சு.. விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சுன்னு கதையடிச்சு முடிச்சிட்டாங்கன்னு பார்த்தா கடைசியா ஒருத்தர் வந்து நச்சுன்னு நடு மண்டைல கொட்டுற மாதிரி ஒரு மேட்டரை சொல்லிட்டுப் போனார்..
அவர் ‘நான் சிகப்பு மனிதனில்’ காமெடி ரோலில் நடித்திருக்கும் நண்டு ஜெகன். “விஷால் லட்சுமி மேனனைத்தான் காதலிக்கிறார்ன்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனா உண்மையா அவர் காதலிக்கிறது வேற பொண்ணை.. இதை யாரும் கவனிக்கலையே..?” என்றார் மேடையில்…!
இதுதான் உண்மையா இருக்கும்னு தோணுது.. இந்த உண்மையான பொண்ணு யாராம்..? அது நிச்சயம் இந்தப் படத்துடன் சம்பந்தப்படாத ‘லட்சுமி’யாகத்தான் இருக்கும் என்கிறது கோடம்பாக்கம்..!
அது சரி.. இது நாட்டுக்கு ரொம்ப அவசியமான நியூஸான்னு கேக்குறீங்களா..? ப்ச்.. என்ன செய்யறது..? நாடு ரொம்ப கெட்டுப் போய்க் கெடக்கு.. இப்பவாச்சும் நம்புங்க..!