full screen background image

நடிகர் விஷால், இயக்குநர் ஹரி இணையும் புதிய படம் துவங்கியது

நடிகர் விஷால், இயக்குநர் ஹரி இணையும் புதிய படம் துவங்கியது

ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்கிறார். இது விஷாலின் 34வது படமாகும்.

‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு இந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இருவரும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள்.

குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய விறுவிறுப்பான திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்கி வரும் இயக்குநர் ஹரியும், ஆக்ஷன் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் நடிகர் விஷாலும் ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ வெற்றிப் படங்களுக்கு பிறகு இணையும் இப்படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர்.

கதாநாயகி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள நடிகர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்.

இசை – தேவி ஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவு – எம்.சுகுமார், படத் தொகுப்பு – டி.எஸ்.ஜெய், கலை இயக்கம் – காளி, பிரேம்குமார், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், பாடல்கள் – கவிஞர் விவேகா, பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

இப்படத்தை தயாரிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், “விஷால் மற்றும் ஹரி உடனான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த வெற்றி கூட்டணியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி…” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் படக் குழுவினர் இதில் பங்கேற்றனர்.

விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் வேகமான திரைக்கதை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி சென்னை, தமிழ்நாட்டின் தென் பகுதிகள், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படவுள்ளது.

Our Score