full screen background image

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக சினிமா..! – விஷாலின் முடிவுக்கு நடிகர் சங்கத்தின் ஒப்புதல் உண்டா..?

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக சினிமா..! – விஷாலின் முடிவுக்கு நடிகர் சங்கத்தின் ஒப்புதல் உண்டா..?

நேற்றைய ‘பூஜை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், நடிகர் சங்கம் பற்றியும் தவறாமல் பேசினார்.

‘நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நோக்கத்தில், சம்பளம் வாங்காமல் புது படமொன்றில் நடிக்க இருக்கிறேன். இதில் என்னுடன் ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா உள்ளிட்ட மேலும் பல கதாநாயகர்களும் இணைந்து நடிக்க உள்ளனர். நாங்கள் யாரும் சம்பளம் வாங்க மாட்டோம். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு துவங்கும். டைரக்டர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை…’’ என்றார்.

இது பாராட்ட வேண்டிய விஷயம்தான்.. ஏற்கெனவே நடிகர் சங்கத்திற்காக மலேசியா, சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைத்த பணத்தில் நடிகர் சங்கத்தின் வங்கிக் கடனையும் அடைத்து, கணிசமாக சில கோடிகளையும் பேங்க் பேலன்ஸாக வைத்துவிட்டுத்தான் வெளியேறினார் முன்னாள் தலைவர் விஜயகாந்த்.

அதற்கடுத்து தலைவராகப் பொறுப்பேற்ற நடிகர் சரத்குமார் மற்றும் புதிய நிர்வாகிகளின் ஆலோசனைப்படி புதிதாக ஷாப்பிங் மால் போல பல மாடி கட்டிடம் கட்டலாம் என்று யோசித்து இருந்த இடத்தையும் தரைமட்டமாக்கிவிட்டார்கள்.

ஆனால் அதற்குள்ளாக அக்கம் பக்கம் வசிப்பவர்கள் அனைவரும் கூட்டாக ஒன்று சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டனர்.

“இந்த இடத்தில் ஷாப்பிங் மால் மற்றும் சினிமா தியேட்டர்கள் வந்தால் இந்த இடத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.. இது மிகவும் சின்ன இடம்.. சாலையும் அகலமானதில்லை.. ஆகவே இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்..” என்று கேட்டார்கள். உயர்நீதிமன்றமும் தடை விதித்துவிட்டது.

இப்போதுவரையிலும் அந்தத் தடையை நீக்க நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதே தெரியவில்லை. இத்தனைக்கும் எஸ்.ஆர்.எம். என்ற பெரிய நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து மும்பையைச் சேர்ந்த ஒரு மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துதான் இந்தப் பணியைத் துவக்கியது..

இதில் நடிகர் சங்கத்திற்கு பணத் தேவையில்லை.. ஒப்பந்தப்படி கட்டி முடித்தவுடன் கட்டிக் கொடுத்த பணத்திற்கு ஈடாக சில மாடிகளை அந்த கட்டுமான நிறுவனமும், எஸ்.ஆர்.எம். நிறுவனமும் சில வருடங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உள் வாடகைக்கு விட்டும்  சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஒப்பந்தமாம்..

இப்போது நடிகர் விஷால் சொல்லியிருப்பது புது கதை. கட்டிடம் கட்ட நிதியென்றால், பழைய ஒப்பந்தத்தை தூக்கியெறிந்துவிட்டு இவர்களே கட்டப் போகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

இதற்காக விஷால் சொன்னபடி ஒரு திரைப்படத்தில் இலவசமாக நடித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கட்டுவதென்பது பாராட்டுக்குரியதுதான்.

இதேபோல மலையாள சினிமா நடிகர் நடிகைகள்.. தங்களது ‘அம்மா’ அமைப்பிற்காக 2008-ம் ஆண்டு ஒரு திரைப்படத்தைத் தயாரித்தார்கள்.

இவர்கள் அனைவரின் சார்பிலும் நடிகர் திலீப் தன்னுடைய சொந்தப் பணத்தில் ‘டிவென்டி டிவென்டி’ என்ற அந்தப் படத்தை தயாரித்தார். அதில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், சுரேஷ்கோபி, திலீப் என்ற வரிசையில் அனைத்து பிரபல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார்கள். பிரபல மசாலா மாமன்னர் ஜோஷிதான் படத்தை இயக்கியிருந்தார்.

7 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தின் மொத்த வசூல் 32.6 கோடி. ‘திரிஷ்யம்’ படம் சென்ற ஆண்டு இந்தச் சாதனையை முறியடிக்கும்வரையிலும் இதுதான் மலையாள சினிமாவுலகில் அதிக வசூல் செய்த படம்.

அதுபோல் தமிழ் நடிகர்களும் ஒரு படத்தில் பணம் வாங்காமல் தொழிலாளர்களுக்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு படத்தைத் தயாரிக்கட்டும்.. வசூலை சங்கத்திற்கு கொடுக்கட்டும்.. நல்ல யோசனைதான்..

நமக்கு இதிலிருக்கும் ஒரேயொரு சந்தேகம்.. விஷாலின் இந்த உறுதியான அறிவிப்புவுக்கு நடிகர் சங்கத்தின் ஒப்புதல் இருக்கிறதா..? சங்கத்தின் தலைவரும், செயலாளரும் ஒத்துக் கொண்டார்களா..? என்பதுதான்..!

சரி.. கூடிய சீக்கிரம் இதையும் விசாரிச்சிர வேண்டியதுதான்..!

Our Score