இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவான ‘விசாரணை’ திரைப்படம் அடுத்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் சார்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அமெரி்க்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திரைப்பட விருதுகளுக்கான உலக அளவிலான தலையாய விருதான ‘ஆஸ்கர் விருது’ வழங்கப்படும். 99 சதவிகிதம் ஆங்கில திரைப்படங்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும். கூடவே சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருது போட்டியில் ஒவ்வொரு நாடும் ஒரேயொரு படத்தை மட்டுமே அனுப்ப முடியும். இந்தப் பிரிவில் போட்டியிட தகுதியுள்ள படத்தை தேர்ந்தெடுக்கும் பணி அந்தந்த நாட்டின் சினிமா அமைப்புகளிடமே உள்ளன.
இந்தியாவில் இந்திய திரைப்பட வர்த்தக சபையும், மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகமும் இணைந்து தகுதியான நடுவர்களைக் கொண்டு படங்களை பார்த்து, பரிசீலித்து போட்டிக்கு வந்தவைகளில் ஒன்றை தங்களுடைய நாட்டின் சார்பாக போட்டியிடும் படமாக ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கும்.
அந்த வகையில் அடுத்தாண்டு ஆஸ்கர் போட்டிக்காக இந்தியாவின் சார்பில் போட்டியிடுவதற்காக பல இந்திய திரைப்படங்கள் போட்டியிட்டன. இந்தக் கடுமையான போட்டியின் நடுவில் ‘விசாரணை’ தமிழ்ப் படம் தேர்வாகியுள்ளது.
இதுவரையிலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ‘ஆஸ்கர்’ விருதுக்கான போட்டியில் 8 தமிழ் திரைப்படங்கள் போட்டியிட்டுள்ளன. இந்த ‘விசாரணை’ திரைப்படம் 9-வது தமிழ் திரைப்படமாகும்.
1969-ல் ‘தெய்வமகன்’, 1987-ல் ‘நாயகன்’, 1990-ல் ‘அஞ்சலி’, 1992-ல் ‘தேவர் மகன்’, 1995-ல் ‘குருதிப்புனல்’, 1996-ல் ‘இந்தியன்’, 1998-ல் ‘ஜீன்ஸ்’, 2000-ல் ‘ஹே ராம்’ ஆகிய படங்கள் போட்டிக்குச் சென்றன. இதில் ‘நாயகன்’, ‘தேவர் மகன்’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘ஹேராம்’ ஆகிய படங்கள் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்தன.
மு.சந்திரகுமார் என்பவர் எழுதிய ‘லாக்கப்’ என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த ‘விசாரணை’ திரைப்படம். சந்திரகுமார் ஆந்திராவில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு குற்ற வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக போலீஸிடம் பிடிபட்டிருந்தபோது தனக்கு நேர்ந்த கொடுமைகளை ஒரு கதையாக இதில் பதிவு செய்திருந்தார். இன்றைக்கு ஒரு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் சந்திரகுமார் இதற்கு பின்பு மேலும் 2 நாவல்களை எழுதி புகழ் பெற்றிருக்கிறார்.
இந்த ‘விசாரணை’ திரைப்படத்தில் ஆனந்தி, சரவணா சுப்பையா, கிஷோர், முருகதாஸ், முத்துகுமார், சந்திரன், அஜய் கோஷல், மூனார் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு- ராமலிங்கம், படத்தொகுப்பு – கிஷோர்.டி.இ, கதை – சந்திரகுமார் , கலை – ஜாக் , சண்டை பயிற்சி- திலீப் சுப்ராயன், ஒலிக் கலவை – பிரதாப், போர் பரம்ஸ் உதயகுமார்.
இத்திரைப்படம் இத்தாலி நாட்டின் வெனிஸில் நடைபெற்ற 72-வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டது. அந்த விழாவில், இத்தாலி நாட்டை சேர்ந்த உலக மனித உரிமைகள் அமைப்பு வழங்கும் மனித உரிமைகளை உரக்கச் சொல்லும் திரைப்படத்திற்கான விருதினை பெற்று பெருமை பெற்றது.
இந்தப் படத்திற்கு விருது கொடுத்த்து பற்றி பேசிய இத்தாலி மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரிகார்டோ நவுரி, “இந்தப் பிரிவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் கலந்து கொண்டன. அவைகள் அனைத்துமே மனித உரிமைகளைப் பேசும் படங்களே. எனினும், இயக்குநர் வெற்றி மாறனின் ‘விசாரணை’ திரைப்படம் தனித்துவம் மிகுந்தது.
விசாரணைக் கைதியாக இருந்து தற்போது சமூகப் போராளியாக இருக்கும் ஒருவரது அனுபவத்தை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. இந்தியாவில் உள்ள காவல் நிலையங்களில் நிகழும் மனித உரிமை மீறல்களையும், கொடுமைகளையும் இப்படம் பதிவு செய்துள்ளது. இதனால், இப்படத்துக்கு இந்த வெனிஸ் திரைப்பட விழாவில், ‘மனித உரிமைகளுக்கான சினிமா’ என்ற பிரிவில் விருது கொடுக்கப்பட்டுள்ளது..” என்றார்.
மேலும் சென்ற ஆண்டிற்கான சிறந்த மாநில மொழி திரைப்படம் என்ற விருதையும், இதில் சிறப்பாக நடித்த நடிகர் சமுத்திரக்கனி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், இந்தப் படத்தை சிறப்பாக படத் தொகுப்பு செய்திருந்த மறைந்த கலைஞர் டி.ஈ.கிஷோர் சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருதையும் பெற்றார்கள் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.
லைகா நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது. படமும் வெளியாகி உலகமெங்கும் வசூலை வாரிக் குவித்தது என்பது எதிர்பாராதது.
ஆஸ்கர் விருதினை ‘விசாரணை’ படம் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்..!