full screen background image

“அதிதி கேட்ட மொக்கைக் கேள்விகளும், சூரியின் ஓட்டமும்” – நடிகர் கார்த்தி சொன்ன ரகசியம்..!

“அதிதி கேட்ட மொக்கைக் கேள்விகளும், சூரியின் ஓட்டமும்” – நடிகர் கார்த்தி சொன்ன ரகசியம்..!

2-டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து வழங்கும் படம் விருமன்’.

இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மற்றும் நடிகரான சிங்கம் புலி பேசும்போது, “மதுரை விழாவிலேயே நிறைய பேசிவிட்டோம். வாடிவாசலில் இருந்து வருகிற சத்தம்போல் பேரன்பு மிக்க ரசிகர்களின் ஆரவாரம். “அமைதியாக இருங்கள்” என்று கூறியே சூர்யா சாருக்கும், கார்த்தி சாருக்கும் தொண்டை தண்ணீர் வற்றிவிட்டது.

இப்படம் ஆரம்பித்ததில் இருந்தே விழாவாகத்தான் இருக்கிறது. கார்த்தி சாரை திரையில் பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறது.

மண் சார்ந்த படைப்புகளுக்கு சரியான தேர்வாக முத்தையாவை 2-டி தேர்ந்தெடுத்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி முத்தையா கூறும்போது நாமும் இப்படத்தில் இடம் பெற வேண்டும் என்று அவருடன் தொடர்பில் இருந்தேன்.

முத்தையா ஒருவரிடம் கதை கூறினால், அவர் அப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று அர்த்தம். ஒரு காட்சியை அவரிடம் கூறினால், அதற்கு பல காட்சிகளை கூறுவார். எல்லாவற்றையும் பற்றி அறிந்திருப்பார். எப்போதும் அவருடைய கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டார். நிறைய கதைகளை வைத்துள்ளார். எப்போதும் சோர்வாகவே மாட்டார். சட்டை அணிவதில்கூட ஒரு நெறிமுறையைப் பின்பற்றக் கூடியவர்.

எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவர் கார்த்தி. படப்பிடிப்பு முடிந்தால் உடற்பயிற்சி செய்வார். வேறு யாரைப் பற்றியும் புறம் பேச மாட்டார். அமெரிக்காவில் படித்து வந்தவர்போல அல்லாமல் மிகவும் இயல்பாக இருப்பார். நான் மும்பை சென்று வந்தாலே இரண்டு நாட்களுக்கு ஹிந்தி கலந்துதான் பேசுவேன்.

அதிதிதான் என்னுடைய ஆலியா பட். அப்பாவை மட்டும் பின்பற்றுங்கள் அதிதி. அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்..” என்றார்.

நடிகை இந்திரஜா பேசும்போது, “நான் கலந்து கொள்ளும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இதுதான். என்னை நம்பி இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தைக் கொடுத்த முத்தையா சாருக்கு நன்றி. படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் எனக்கு ஊக்கமளித்தார். அனைத்து கலைஞர்களுக்கும் தேவையானதை செய்து கொடுத்த 2டி நிறுவனத்திற்கு நன்றி.

இப்படத்தில் சூரி மாமாவிற்கு ஜோடியாக நடித்துள்ளேன். ஆனால், உங்கள் அனைவருக்கும் தெரியாத ரகசியம், அவர் மடியில் அமர்த்திதான் எனக்கு 2-வது மொட்டை அடித்தார்கள். என்னை அழகாக காண்பித்த ஒளிப்பதிவாளர் செல்வா சாருக்கு நன்றி. எனக்கு ஆதரவளிக்கும் என் குடும்பத்தாருக்கும் நன்றி..” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “இந்த விருமன்’ படத்தின் மதுரை விழாவிற்கு அழைக்காதது குறித்து ஒரு மேடையில் வருத்தம் தெரிவித்திருந்தேன். அதை மிகப் பெரிய வைரலாக்கி விட்டார்கள். அதற்காக 2-டி நிறுவனத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியாகும் 10 பெரிய பட்ஜெட் படங்களில் 2 படங்களில்தான் எங்களைப் போன்ற பாடலாசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அப்படி 2 படங்களில் ஒன்றாகத்தான் இப்படத்தை நினைத்திருந்தேன். அந்த அங்கீகாரம் கிடைக்காமல் போன உரிமையில்தான் அவ்வாறு பேசினேன். வேறு எந்த உள் நோக்கமும் இல்லை. அதைத் தெளிவுபடுத்தத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டேன்.

நான் கடந்த 22 வருடங்களில் 2,500 பாடல்களை எழுதியிருக்கிறேன். ஷோபி, சாண்டி மாஸ்டர், சிங்கம் புலி, ராஜ்கிரண் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். நீங்கள் எங்களுடன் இறுதிவரை இருக்க வேண்டும்..” என்றார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும்போது, “பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தில் நடித்திருக்கிறேன். ஏற்கெனவே ஒரு படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்ததிலும் எனக்கு மகிழ்ச்சிதான். படக் குழுவினர் அனைவரையும் தங்கத் தட்டில் வைத்து தாலாட்டுவது 2-டி நிறுவனம் மட்டும்தான். என்ன கேட்டாலும் செய்து கொடுப்பார்கள்.

குட்டிப் புலி படத்தில் முத்தையாவுடன் பணியாற்றினேன். அதற்கு பிறகு அவரின் படங்களில் நான் பணியாற்றவில்லை. இந்தப் படத்திற்கு என்னை அழைத்தபோது “உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆகையால் நான் கதை கேட்க மாட்டேன்…” என்று கூறிவிட்டேன். அவர் கூறியதை செய்தாலே காட்சிகள் நன்றாக வரும்.

ராஜ்கிரண் ஸார் குடும்ப உறவாகத் தோன்றும்படி பழகுவார். சூரியுடன் நகைச்சுவை நன்றாக எடுபடும் வகையில் அமைந்துள்ளது. “எல்லோருக்கும் அம்மாவாக தோன்றும்படி எப்படி நடிக்கிறீர்கள்?” என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். நான் எப்படி நடிக்கிறேன் என்று எனக்கே தெரியாது, அது கடவுளும், தமிழ் சினிமா துறையும் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வரம்..” என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “சூர்யா, கார்த்தி மற்றும் ராஜா சார் அனைவரையும் பார்க்கும்போது எனக்கு அந்த மாதிரி உறவுகள் இல்லையே என்று ஏக்கமாக இருக்கிறது.

ஸ்டுடியோ 9 இன்றுவரை விநியோகம் செய்யும் நிறுவனமாகத்தான் இருக்கிறது. என்னால் வாய்ப்பு கிடைத்தவர்கள் வளர்ந்த பிறகு என்னைவிட்டு சென்று விட்டார்கள். ஆகையால், நானே படங்களைத் தயாரித்து நடிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இப்போது எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.

கார்த்தியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்படத்தில் நிறைவேறியது. கார்த்தி அண்ணன் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் காட்சியிலும் அதைப் பெரிதும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர். அவருடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து கார்த்தி அண்ணன் எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

ஷோபி இன்று பெரிய நடன இயக்குநராக வளர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. சூரி அண்ணனுடன் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு வருந்துகிறேன்..” என்றார்.

நடிகர் சூரி பேசும்போது, “சூர்யா அண்ணன் நீங்கள் எப்போதும் நன்றாக இருப்பீர்கள். கார்த்தி அண்ணனும் நன்றாக இருப்பார். உங்களுக்கு கிடைக்கக் கூடிய வருமானத்தை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால், பலருக்கும் வாய்ப்பளித்துக் கொண்டே வருகிறீர்கள். கல்வி, வேலை என்று மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் அண்ணன், தம்பிகள் இருவரும்.

இந்த 2-டி நிறுவனத்தை ‘சவுக்கு’ போல ராஜா சார் தாங்கிப் பிடித்து கொண்டிருக்கிறார். ஒழுக்கத்திற்கும், உண்மைக்கும் உதாரணமாக இருக்கும் ராஜ்கிரண் அப்பாவிற்கு நன்றி. இன்னும் 25 ஆண்டுகளானாலும், நீங்கள் வேட்டியை தூக்கிக் கட்டினால் அழகாகத்தான் இருக்கும்.

மறுநாள் படப்பிடிப்பிற்கு தேவையானவற்றை முதல் நாளே திட்டமிட்டு தயார் நிலையில் வைக்கிறார்கள் இந்த 2-டி நிறுவனத் தயாரிப்பு நிர்வாகத்தினர். சரண்யா அக்காவிற்கு வாழ்த்துகள். நீங்கள் எல்லோருக்கும் அம்மாவாக நடிக்கவில்லை. அம்மாவாகவே வாழ்கிறீர்கள். ஆகையால்தான் எல்லோருக்கும் அம்மாவாக தோன்றுகிறது.

இயக்குநர் முத்தையா மண் சார்ந்து அதோடு ஒன்றி வாழ்ந்து வருகிறார். அதனால்தான் தொடர்ந்து அது போன்ற படங்களை இயக்கி வெற்றிப் படமாக கொடுக்க முடிகிறது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற பந்தா இல்லாமல் அனைவரிடமும் இயல்பாக பழகுவார். உணர்ச்சிவசப்படக் கூடிய காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போதுகூட நகைச்சுவை செய்து விடுவார். முதல் படத்திலேயே சிறப்பாக நடனமும் ஆடியிருக்கிறார்.

நான் தூக்கி வளர்த்த பெண் இந்திரஜாதான் எனக்கு ஜோடி என்று கூறியதும், முதலில் தயங்கினேன். ஆனால், இந்திரஜாவே அந்தத் தயக்கத்தை உடைத்துவிட்டார்.

மதுரை விழாவில், “மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன் நான். ஆயிரம் அன்னச் சத்திரங்கள் கட்டுவதைவிட, ஆயிரம் கோயில்களை கட்டுவதைவிட ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது” என்ற பாரதியாரின் கூற்றைத்தான் நான் எடுத்துக் கூறினேன். நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகவும் அப்படி கூறிவில்லை..” என்றார்.

நடிகர் ராஜ்கிரண் பேசும்போது, “இந்தப் படம் மூலமாக 2-டி நிறுவனம் எனக்கு முதல் வாய்ப்பினை கொடுத்திருக்கிறார்கள். இதற்காக சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜா மூவருக்கும் எனது நன்றிகள். தம்பி முத்தையாவும், கார்த்தியும் கொம்பனில்’ முதல் வாய்ப்பு கொடுத்தார்கள். இரண்டாவது படமாக இந்த விருமன்’ படத்திலும் கொடுத்ததற்கு நன்றி.

2-டி நிறுவனம் படத் தயாரிப்பினை ஒரு கடமையாக செய்யாமல் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராக பாவித்து அனைவருக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தார்கள். இப்படத்தை வெறும் படமாக வியாபார நோக்கில் எடுக்காமல், நல்ல கருத்துகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்போடு தம்பி முத்தையா எடுத்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பாளரான சக்திவேலன் பேசும்போது, “இந்தப் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் விநியோகத்தை சக்தி பிலிம் பேக்டரி செய்கிறது. கார்த்தியின் ரசிகனாகத்தான் இந்தப் படத்தை நான் விநியோகம் செய்கிறேன்.

பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவதாக இந்த ‘விருமனை’யும் நான்தான் விநியோகம் செய்கிறேன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

ஒரு காலத்தில் கிராமப் பகுதிகளில் ராஜ்கிரண் போன்ற கலைஞர்களின் படங்களை வண்டிக் கட்டிக் கொண்டு வந்து பார்ப்பார்கள். சம காலத்தில் கிராமங்களை இயல்பாக பதிவு செய்ய பாரதிராஜாவிற்குப் பிறகு யாரும் கிடையாது. அதை முத்தையா நிறைவேற்றி வருறார்.

எப்போதும் மண் சார்ந்த படத்திற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கும். அதிலும் கார்த்தி சார் படமென்றால் மக்கள் கொண்டாடுவார்கள். மண் சார்ந்த அயல்நாட்டு படங்கள் முதல், நம் நாட்டு படங்கள்வரை ஒரே மாதிரியாக இருக்கிறது என்று சலிப்படைய செய்யும். நகரத்து பெண்களைவிட கிராமத்து பெண்கள்தான் அருமையாக காதலிப்பார்கள். அதை நிறம் மாறாமல் பதிவு செய்வது முத்தையாதான்.

உலகத்தில் எங்கோ மூலையில் இருக்கும் விஷயங்களைப் பற்றி தேடித் தேடி தெரிந்து கொள்கிறோம். ஆனால், பக்கத்தில் இருக்கும் கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள தவறி விடுகிறோம். கூட்டு குடும்பங்கள் எப்படி இருக்கும் என்பதை மதுரையின் பக்கத்தில் இருக்கும் கிராமங்களில்தான் தெரிந்து கொள்ள முடியும்.

கிராமப்புற படங்களை ஆதரித்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இன்னும் மேன்மையடையும். அதற்கான மிகப் பெரிய அடித்தளமாக இப்படம் இருக்கப் போகிறது. என் பெயருக்குப் பின்னால் எனது அப்பாவின் பெயர் இனிஷியலாக இருப்பதுபோல எனது வியாபாரத்திற்கு 2-டி நிறுவனம் பின்புலமாக இருக்கும். அவர்களின் குடும்பத்திற்கு நன்றி என்ற வெறும் வார்த்தையால் கூற முடியாது. இப்படம் நிச்சயமாக வெற்றியைக் கொடுக்கும்..” என்றார்.

நடிகை அதிதி பேசும்போது, “என் கனவை நிறைவேற்றிய அப்பா, அம்மா, தங்கைக்கு நன்றி. என் வீட்டைவிட்டு நான் எங்கும் சென்றதில்லை. அந்தக் குறை தெரியாமல் பார்த்து கொண்ட 2-டி நிறுவனத்திற்கும், படக் குழுவிற்கும் நன்றி.

இயக்குநர் முத்தையா ஸார் எல்லாவற்றையும் ஊக்கப்படுத்திக் கற்றுக் கொடுத்தார். இப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி. கார்த்தி சார் தினமும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுப்பார். சூரி சாருடன் நடிக்கும் காட்சிகளில் ஏதாவது நகைச்சுவையாக சொல்லிக் கொண்டிருப்பேன். ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் சாருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. கார்த்தி சார் போலவே நானும் எனது முதல் படமாக மண் சார்ந்த இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்..” என்றார்.

தயாரிப்பாளரான 2-டி ராஜசேகர் பாண்டியன் பேசும்போது, “கார்த்திக்குத்தான் முதலில் நன்றி கூற வேண்டும். கொம்பன்’ போன்று ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ‘கொம்பன்–2’ எடுக்கலாம் என்றுகூட முத்தையா கூறினார்.

ஆனால், புதிதாக மண் சார்ந்த படம் வேண்டும் என்று நினைத்துதான் இந்த ‘விருமன்’ கதையைத் தேர்ந்தெடுத்தோம். உறவுகளை அரவணைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதியை மறந்துவிடாத கதையம்சத்தில் ஒரு படத்தினை எடுக்க நினைத்தோம். எல்லா உறவுகளையும் அரவணைத்துக் கொள்ளும்படியான ஒருவர், ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். இப்போது எனது குடும்பத்தில் எனது தங்கை அப்படித்தான் இருக்கிறார்.

அதிதியை அறிமுகப்படுத்தியதில் எங்களுக்குத்தான் பெருமை. எங்களை நம்பி அதிதியை அனுப்பி வைத்த ஷங்கர் சாருக்கும், ஈஸ்வரி மேடத்திற்கும் நன்றி. ராஜ்கிரண் சாரை கடைக்குட்டி சிங்கம்’ படத்திலேயே நடிக்க அழைத்தோம். ஆனால், அப்போது அவரிடம் தேதிகள் இல்லை. இந்தப் படத்தில் நடித்ததற்கு நன்றி.

பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை திரையிலும், திரைக்கு வெளியிலும் செய்து காட்டும் முத்தையாவிற்கு இந்த பட வாய்ப்பைக் கொடுத்தற்காக பெருமைப்படுகிறோம்.

மதுரையில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. நம் வீட்டில் திருமணம் நடக்கும்போது பெரியப்பா, சித்தப்பா யாராவது ஒருவரை மறந்துவிடுவது போலத்தான் பாடலாசிரியர் சினேகனை நாங்கள் மறந்துவிட்டோம். அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எல்லோருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்…” என்றார்.

இயக்குநர் முத்தையா பேசும்போது, “இதுவரையிலும் எனக்கு பெரும் ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். அதேபோல் இனிமேலும் தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் இரு பிள்ளைகளை வளர்ப்பது சிரமமாக இருக்கிறது. இப்போது ஒரு குழந்தை. பிறகு ‘குழந்தையே வேண்டாம். நாம் இருவர்.. நாமே இருவர்’ என்ற நிலையும் வரலாம்.

இப்படத்தின் கதை உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைதான். என் வீட்டிற்கு பக்கத்தில் நேரில் நடந்ததைதான் படமாக எடுத்திருக்கிறேன்.

கார்த்தி சாரிடம் இக்கதையைக் கூறியதும் ஒப்புக் கொண்டார். இப்படம் துவங்கும்போது “எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளுங்கள்” என்று ராஜா அண்ணன் கூறினார். ஆனால், இப்படத்தில் அதிகமாக ஆன செலவு வீடுகளின் சுவர்களுக்கு வெள்ளையடித்ததுதான்.

நிறைபாண்டி’, ‘முனியாண்டி’ என்ற இருவர்தான் இந்தப் படத்தின் முக்கியமான கேரக்டர்கள். மைனா’ நந்தினி, அருந்ததி இருவரும் நடித்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் வெற்றியின் ஜன கன மண’ படமும் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இளையராஜா சார் என் படத்திற்கு டைட்டில் பாடலைப் பாடி கொடுத்ததில் எனக்கு மிகுந்த பெருமை. இக்கால இயக்குநருக்கு இது போன்று அமைவது அரிது. அனைத்து வாகன ஒட்டுனர்களும் இரவில் அமைதியாக வண்டிகளை இயக்க இப்போது இளையராஜாதான் காரணமாக இருக்கிறார்.

செல்வா நன்றாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘வட சென்னை’ படத்தில் வட சென்னை பகுதியை தத்ரூபமாக செட்டாக அமைத்துத் தந்திருந்தார் ஜாக்கி. ஆகையால்தான், இந்தப் படத்திற்கு அவரை அழைத்தோம்.

பொதுவாக நான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது வியாபார நோக்கத்தையும் மனதில் வைத்துத்தான் எடுப்பேன். சூழல்கள் அமைந்தால் நகரம் சார்ந்தும் படம் எடுப்பேன். ஆனால், தவறான படத்தை ஒருபோதும் இயக்க மாட்டேன். என் படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் வசனமோ, காட்சிகளோ நிச்சயமாக இடம் பெறாது…” என்றார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, “இப்படத்தின் டிரைலர் வரும்வரை பதட்டமாகத்தான் இருந்தது. அயல் நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து நம் கலாச்சாரம் மாறி விட்டதோ? நமது மண் சார்ந்த படங்களுக்கு ஆதரவு இருக்காதோ? என்ற சந்தேகம் துவக்கத்தில் எங்களுக்குள் இருந்தது.

ஏனென்றால், தற்போது கிராமத்தில்கூட ‘ஸ்விக்கி’, ‘ஸொமேட்டோ’ வந்துவிட்டது. ஆனால், இந்த ‘விருமன்’ படத்தின் டிரெயிலர் வெளியாகி வெற்றி பெற்றதும் அந்த எண்ணம் மாறிவிட்டது.

பருத்தி வீரன்’ பாணி ‘கொம்பனில்’ வரக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். அதேபோல் கடைக்குட்டி சிங்க’த்தில் 5 அக்காக்களுக்கு தம்பியாக இருக்க வேண்டும். முன் படத்தின் சாயல் வரக் கூடாது என்று எண்ணினேன்.

கிராமத்து கதாபாத்திரங்கள்தான் அழகாக இருக்கிறது. அந்தக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது சுகமாக இருக்கிறது. என் மாமனாருக்கு என்னுடம் பேச மிகவும் பிடிக்கும். ஆனால், எனது தோளை தொட்டுவிட்டு சென்று விடுவார். நானே வலிய சென்று அவரிடம் பேசுவேன். அவர் உலக அரசியல்வரைக்கும் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். எப்படி என்று கேட்டால், “எல்லாம் நம்ம டீ கடையில் கேட்டதுதான்” என்பார்.

ராஜ்கிரண் சார் இந்தப் படத்தில் நடிக்கிறார்  என்று கூறியதும் எனக்குப் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது. “காசு வாங்காமல் நடிப்பேன்; ஆனால், சம்பளம் வாங்காமல் நடிக்க மாட்டேன்” என்பார் பிரகாஷ் ராஜ் சார். கலைஞன் என்றால் பணத்தைப் பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டும் என்ற அழகான விஷயத்தை பிரகாஷ் ராஜ்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.

விடியற்காலை 3 மணிக்குத்தான் பாடல் காட்சிகளை பதிவு செய்தார்கள். சினேகனின் வரிகள் பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது. சூரி அண்ணனை நடிகர் என்றே எனக்குத் தோன்றாது. அவரே ஒரு குட்டி இயக்குநர் போலத்தான் இருப்பார். சிறு இடம் கிடைத்தாலும் அதில் பஞ்ச் வசனங்களை இயல்பாக பேசிவிடுவார். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனே ஓடிப் போய்விடுவார்.

கடைக்குட்டி சிங்க’த்தில் அவருக்கும், எனக்குமான ஒரு காட்சியில் மழை பெய்து கொண்டிருந்தபோதும் அழுதுவிட்டார். அவரால் காமெடியும் செய்ய முடியும். குணச்சித்திர வேடத்திலும் நடிக்க முடியும்.

அதிதி இந்தப் படத்தில் புதுமுகமாகவே இல்லை. அனுபவசாலி போலவே நடிப்பிலும், நடனத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதேபோல் அவர் நன்றாக மொக்கையும் போடுவார். படப்பிடிப்பின்போது கிடைத்த நேரத்தில் “நான் சில கேள்விகளைக் கேட்கிறேன் பதில் சொல்லுங்க..” என்று மொக்கை கேள்விகளைக் கேட்டு நம்மை பல்பு வாங்க வைத்தார். 

அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் சூரியிடம் பதில் கேட்டேன். அவரும் “எனக்குத் தெரியாது” என்று சொன்னதால் அதிதியே பதிலை சொன்னார். அந்தப் பதிலைக் கேட்டவுடன் இனிமேல் நான் கேரவன்லேயே உக்காந்துக்கிறேன்.. இந்தப் பக்கமே வர மாட்டேன்..” என்று சொல்லி ஓடிவிட்டார் சூரி.

ஏற்கனவே, இருக்கும் கிராமம் போன்ற அமைப்பில்லாமல் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று ஜாக்கியிடம் கேட்டுக் கொண்டோம். செல்வாவிடம் “எனக்கு குளோசப் ஷாட் வேண்டாம். அழகான கிராமங்கள் இருக்கும்போது ‘வைட்’ கோணத்தில் வைத்தே எடுங்கள்…” என்று கூறினேன். “அந்தக் கிராமத்தில் வாழ்வோர் அப்போதுதான் அதன் அழகைக் கண்டு ரசிப்பார்கள்…” என்று சொன்னேன்.

என் முதல் படம் வெற்றி என்ற வார்த்தையை என்னிடம் முதலில் கூறியது சக்திவேலன்தான். “நகரத்தில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு. கிராமப் புறங்களில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு” என்று அவர் அடிக்கடி கூறுவார். அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் மாதிரி. மிகவும் உண்மையான மனிதர்.

2-டி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்றுதான் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் வைத்தார்கள். ஆனால், அங்கிருந்த ரசிர்களின் விசில் சத்தம் இன்னமும் என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது. விழா நடந்த 5 மணி நேரமும் அவர்கள் உற்சாகமாக இருந்தார்கள்.

“அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல. அதுவொரு நம்பிக்கை” என்று சொல்லும் படம்தான் இது. எங்களுக்கு எதாவது ஒன்று என்றால் என் தங்கை பிருந்தா பக்கத்திலேயே இருப்பார். என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவருடைய தம்பி உடன் இருந்தார். அதன் காரணமாகத்தான் எங்கள் வீட்டுக்கு ‘கந்தன்’ வேண்டும் என்று முடிவெடுத்தோம். அண்ணனையும், பிருந்தாவையும் கொடுத்த அப்பா, அம்மாவிற்கு நன்றி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது ஒரு அம்மா ஓடி வந்து, “இங்கிருக்கும் அரசுப் பள்ளியை வந்து பாருங்கள்” என்று கூறினார். அங்கு சென்று பார்த்தால் அதன் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

இப்போது எங்களுடைய ‘அகரம்’ அறக்கட்டளை சார்பாகவும், பலரும் செய்த உதவியாலும் அந்தப் பள்ளிக்கூடத்தின் கட்டிடங்கள் செப்பனிடப்பட்டு சிறப்பாக மாற்றப்பட்டுள்ளது. இது போன்று இருக்கும் இடங்களில் கேட்ட பிறகு உதவி செய்யாமல் தாமே முன் வந்து உதவிகளை செய்ய வேண்டும். இப்படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்..” என்றார்.

Our Score