full screen background image

‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ – சினிமா விமர்சனம்

‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ – சினிமா விமர்சனம்

உண்மைக் கதைகளை படமாக்குவதில் தனி விருப்பம் கொண்டிருக்கும் இயக்குநர் ராம்கோபால் வர்மா, ஆந்திராவின் ராபின்ஹூட் அரசியல்வாதியான பரிதலா ரவியின் வாழ்க்கை வரலாற்றை ‘ரத்தச் சரித்திரம்’ என்ற பெயரில் எடுத்து அதை படுதோல்வியடைய செய்தார்.

படத்தின் இயக்கம் சிறப்பாக இருந்தாலும், உண்மைத்தனத்தை மூடி மறைத்ததால் ஆந்திர மக்களே அதனை விரும்பவில்லை. அதே கதைதான் சந்தனக் கடத்தல் வீரப்பனை பற்றி அவர் எடுத்திருக்கும் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற இந்தத் திரைப்படத்திற்கும் நடந்திருக்கிறது.

படத்தின் கதை, கர்நாடக போலீஸ் சொன்ன திரைக்கதையை வைத்தே எழுதப்பட்டிருக்கிறதுபோலும். வீரப்பனின் வாழ்க்கைக் கதை என்று சொன்னாலும்.. அதையும் முழுமையாகச் சொல்லாமல் அரைகுறையாக ஒப்புவித்து.. வீரப்பனை தமிழக போலீஸின் சிறப்பு அதிரடிப் படை எப்படி ஸ்கெட்ச் போட்டு சுட்டுக் கொன்றது என்பதையே மையக் கருத்தாகக் கொண்டு படமெடுத்திருக்கிறார் வர்மா.

வீரப்பனின் வாழ்க்கை முடிந்த கதையை மூன்றாண்டுகளுக்கு முன்பாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் ‘வனயுத்தம்’ என்கிற பெயரில் எடுத்துக் கொடுத்தார். அதுவும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்றிலுமே படுதோல்வியடைந்த்து. அதற்குக் காரணமும் இதேதான்.. படத்தில் உண்மைத்தன்மை இல்லாமல் இருந்ததுதான்..!

இந்த ‘வில்லாதி வில்லன் வீரப்பனும்’ அது மாதிரியான தன்மையைக் கொண்டிருப்பதால் இந்தப் படத்தை வன்மையாக எதிர்த்தே ஆக வேண்டிய கட்டாயம் தமிழர்களாகிய நமக்கு உண்டு.

“இந்தப் படம் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியிடம் கேட்டு.. அவரது வாக்குமூலத்தின்படியும்தான் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார் ராம்கோபால்வர்மா. ஆனால் இப்போது வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமியோ “என்னிடம் சொன்னபடி படமெடுக்காமல்.. நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாக  திரைக்கதை அமைத்து ராம்கோபால் வர்மா படமெடுத்திருக்கிறார்..” என்று புகார் சொல்லியிருக்கிறார். அந்த லட்சணத்தில்தான் படம் தயாராகியிருக்கிறது என்பது தெளிவு.

வீரப்பனை பிடிக்க சிறப்பு அதிரடிப் படையின் தலைவராக அப்போதைய டி.ஜி.பி. விஜயகுமாரை நியமித்த பின்னான கதைதான் படத்தில் விலாவாரியாக விளக்கப்படுகிறது.

புதிய டி.ஜி.பி. தனக்குக் கீழே இருக்கும் எஸ்.பி.க்கு வீரப்பனை பிடிக்க புதிய திட்டத்தை உருவாக்குமாறு சொல்கிறார். போலீஸ் உளவாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் வீரப்பன் தன் மனைவியுடன் இருக்கும் நிலையில் போலீஸ் அங்கே வந்து துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. இந்த மோதலில் வீரப்பன் தப்பிவிட அவருடைய மனைவி மாட்டிக் கொள்கிறார்.

அவரிடம் கொடூரமாக விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையை டி.ஜி.பி.யே தடுத்து முத்துலட்சுமியை வீட்டுக்கு அனுப்புகிறார். வீட்டுக்கு வரும் முத்துலட்சுமி தர்மபுரி அருகே ஒரு வீட்டில் வேலைக்கு சேர்கிறார். அந்த வீட்டில் இருக்கும் லிசா ராய், வீரப்பனால் கொடூரமாகக் கொல்லப்பட்ட கர்நாடக மாநில காட்டிலாகா அதிகாரியான சீனிவாஸின் மனைவி.

எப்படியாவது வீரப்பனின் மனைவியை வைத்து நாடகமாடி, வீரப்பனை உயிருடன் பிடித்துவிட வேண்டும் என்று எஸ்.பி. இந்த பிளானை உருவாக்கியிருக்கிறார். வீரப்பனின் மனைவி அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்து தன் கணவர் துபாயில் வேலை பார்ப்பதாகப் பொய் சொல்கிறார். லிசாவும் அதை நம்புவதை போல நடிக்கிறார்.

இடையில் திடீரென்று தனக்கு பணத் தேவையிருப்பதாக லிசா சொல்ல.. இதற்காக வீரப்பனுக்கு ஆடியோ கேஸட் வடிவில் பணம் கேட்டு செய்தியனுப்புகிறார் முத்துலட்சுமி. ஆனால் இதனை சந்தேகப்படும் வீரப்பனோ, ‘வர முடியாது’ என்று சொல்லிவிட்டு மனைவி வரச் சொன்ன இடத்திற்கு வருகிறார். அங்கே போலீஸாரே மாறுவேடத்தில் இருப்பதை அறிந்து கோபப்பட்டு அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுகிறார்.

இதையறிந்த முத்துலட்சுமி, லிசா போலீஸ் ஆளோ என்று சந்தேகப்படுகிறார். இதையும் லிசா சென்டிமெண்ட்டாக பேசி உடைக்கிறார். இப்பவும் முத்துலட்சுமி லிசாவை உண்மையாக நம்பிவிட.. இது சரிப்பட்டு வராது என்று நினைத்த எஸ்.பி. வேறொரு பிளான் போடுகிறார்.

தன்னால் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்னொரு அதிகாரியான ஜெய்யை சந்தித்து வீரப்பனை கொலை செய்யும் திட்டத்தை செய்து கொடுத்தால் 50 லட்சம் ரூபாயை அவருக்குப் பெற்றுத் தருவதாக ஐஸ் வைக்கிறார் எஸ்.பி..  ஜெய்யும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.

அப்போது வீரப்பன் இயந்திரத் துப்பாக்கியை எதிர்பார்த்து காத்திருந்த நேரம். தனித் தமிழ்நாடு கேட்கும் இளைஞர்கள் சிலர் அவருடன் இருந்த நேரம். அவர்கள் மூலமாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்திக்க விருப்பம் கொள்வதாகச் சொல்லியனுப்புகிறார் வீரப்பன்.  

முகிலன் என்ற அந்தத் தலைவர் சொன்னதாக ஜெய், வீரப்பனை சந்திக்கிறார். வீரப்பனுக்கு நம்பிக்கை தருவதற்காக அவருக்கு இயந்திரத் துப்பாக்கியை அளிக்கிறார். பெரிதும் சந்தோஷப்படுகிறார் வீரப்பன். தொடர்ந்து வீரப்பனுடன் பேசி, பழகி அவருடைய நம்பிக்கையை பெறுகிறார் ஜெய்.

பிரபாகரனை தான் சந்திக்க வேண்டும் என்று வீரப்பன் சொல்ல.. இதற்கு முகிலனிடம் சொல்லி ஏற்பாடு செய்வதாக ஜெய் சொல்கிறார். அதேபோல் வீரப்பனை ஒரு நள்ளிரவு நேரம் காட்டில் இருந்து வெளியில் கொண்டு வந்து ஒரு வேனில் ஏற்றி இலங்கைக்கு போக பயணப்படுகிறார்கள்.

அந்த வேனை எதிர்பார்த்து தயார் நிலையில் காத்திருந்த போலீஸ் படை, வேனை சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி வீரப்பனை கொல்கிறார்கள்.. இதுதான் வீரப்பன் வீழ்ந்த கதை என்று ராம்கோபால் வர்மா சொல்கிறார்.

ஆனால் மூன்றாண்டுகளுக்கு முன்பு வந்த ‘வனயுத்தம்’ படத்தில் இயக்குநர் ரமேஷ் சொன்னவிதம் இதைவிட கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

‘வனயுத்தம்’ படத்திலாவது கொஞ்சமாவது நம்பும்படியாக திரைக்கதை அமைத்து, வசனத்தை பூசி படமாக்கியிருந்தார்கள். இதில் அப்பட்டமாக அனைத்தையும் பொய்யாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் சொல்லப்பட்டிருக்கும் முத்துலட்சுமியின் நண்பியான கொல்லப்பட்ட வனத்துறை அதிகாரியின் மனைவி, வீரப்பனின் கொலை ஆபரேஷனில் கடைசிவரையிலும் கலந்து கொண்டாரா என்பதை முத்துலட்சுமிதான் சொல்ல வேண்டும்.

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் வீரப்பனை ‘கொலைகாரன்’, ‘கொடூரமானவன்’, ‘மக்கள் விரோதி’ என்றே சொல்கிறார் வர்மா. அதே சமயம் போலீஸார் மக்களை துன்புறுத்தினார்கள்.. முத்துலட்சுமியை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தார்கள் என்று ஒரேயொரு காட்சியில் காட்டிவிட்டு போலீஸிடமும் நல்ல பெயர் எடுக்க முனைந்திருக்கிறார்.

ஒரு எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்னொரு எஸ்.பி.யிடம் பேரம் பேசி அவரை சம்மதிக்க வைத்து கடைசியாக அவரையும் படுகொலை செய்துவிட்டு டி.ஜி.பி.யிடம் “எல்லாம் நல்லபடியாக முடிந்தது. நாம் தப்பித்தோம்..” என்று சொல்வதாகவும் திரைக்கதையை அமைத்திருக்கிறார். இதெல்லாம் யாரை திருப்தி செய்ய என்று தெரியவில்லை..? இதனால்தான் படம் கன்னடத்திலும் தோல்வியைத் தழுவியிருக்கிறதோ என்னவோ..?

வீரப்பனுடன் துணை நின்ற ஒரு தோழன், பெங்களூர் ஹோட்டலில் தங்க வந்து, தப்பித்து ஓடி.. நடுரோட்டில் துப்பாக்கிச் சண்டையெல்லாம் போட்டு.. கடைசியாக போலீஸிடம் மாட்டி சித்ரவதை பட்ட கதையெல்லாம் எந்தக் காலத்தில், எங்கே நடந்தது என்பதை ராம்கோபால் வர்மாவே ஆதாரத்துடன் சொன்னால்தான் உண்மையா இல்லையா என்று தெரியும்.

உண்மையாக வீரப்பனுடன் இருந்த தமிழர் மீட்சிப் படையின் தலைவரான முத்துக்குமார் காட்டுக்குள் இருந்து வெளியில் வந்து இயக்க வேலைகளைப் பார்த்தபோது சேலத்தில் கியூ பிராஞ்ச் போலீஸிடம் பிடிபட்டு குற்றுயிரும், குலையிருமாக சிறையில் அடைக்கப்பட்டார். அதிலிருந்து அவர் மீண்டு வரவே சில ஆண்டுகள் ஆகின. கடைசியாக சிறையில் இருந்து வெளியில் வந்து அரசியலில் ஈடுபட்ட நிலையில், வேறொரு பிரச்சனை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்டார் முத்துக்குமார்.

பிரபாகரனை பார்க்க துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் வீரப்பன் என்று கதை, கதையாகச் சொல்கிறார்கள். வீரப்பன் மூலமாக பிரபாகரனை பல இடங்களில் உயர்த்திப் பேசுகிறார். ஆனால் மறைமுகமாக பிரபாகரன் இழிவுபடுத்தப்பட்டுள்ளார் என்பதுதான் உண்மை.

வீரப்பன் யார்..? பிரபாகரன் யார்..? வீரப்பனே ஒரு காட்சியில் சொல்கிறார்.. “பிரபாகரன் எப்பேர்ப்பட்ட ஆளு.. நான்லாம் அவரோட ஒப்பிட்டால் சாதாரண ஆளு..” என்கிறார். வீரப்பன் கொள்ளையன், கொலையாளி.. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினைக்காக துப்பாக்கியைத் தூக்கியவர்.. ஆனால் பிரபாகரன் அப்படியா..? ஒரு இனத்தையே காக்க வேண்டும் என்ற உயர்வான நோக்கத்திற்காக இறுதிவரையிலும் போராடி மரணமடைந்த மாவீரன்.. யாரை, யாருடன் ஒப்பிடுவது என்ற அறிவார்ந்து யோசிக்காமல் வர்மா, தனது அரசியல் கருத்தையெல்லாம் இந்தப் படத்தில் இந்த ரூபத்தில் திணித்திருக்கிறார்.

பிரபாகரனை பார்க்க வேண்டும் என்பதற்காகவே வீரப்பன் காட்டைவிட்டு வெளியில் வந்ததாக சொல்லி ஒரு புதிய பிரச்சினையை உருவாக்கியிருக்கிறார் வர்மா. இதிலிருந்து தெரிவது என்னவெனில் வீரப்பன் கடைசியாக போய்ச் சேர நினைத்த இடம் எல்.டி.டி.ஈ. ஆக.. அந்த இருவருமே ஒரே வேலையைத்தான் செய்து வருகிறார்கள் என்பதாக வர்மா சொல்ல வந்திருக்கிறார். இப்படியொரு இனத்தின் விடுதலை போராட்டத்தையே கொச்சைப்படுத்தியிருக்கிறார் வர்மா.

எந்தக் குழந்தையும் வன்முறையாளனாக பிறப்பதில்லை. ஆனால் வளரும்போது அவனுக்கு கிடைக்கும் அனுபவங்களும், சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளுமே அவனை கெட்டவனாகவும், வன்முறையாளனாகவும் மாற்றுகிறது.

வீரப்பனும் இதற்கு விதிவிலக்கல்ல. சின்னப் பையன்களுடன் சேர்ந்து காட்டுக்குள் சுற்றிக் கொண்டு, சுள்ளி பொறுக்கி.. ஆடு மாடு மேய்த்து அனைத்து வேலைகளையும் செய்தவர்.. சந்தர்ப்ப சூழ்நிலையால் வேட்டையாடும் தொழிலைத் தொட்டிருக்கிறார். யானைகளைச் சுட்டுக் கொன்று, அதன் தந்தங்களை விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடித்த கும்பல் ஒன்று வீரப்பனை பயன்படுத்திக் கொள்ள..  அவர்கள் கொடுத்த பணத்திற்கு அடிமையாகியிருக்கிறார்.

ஊரில் போலீஸிடம் தன்னைக் காட்டிக் கொடுக்க முயன்ற, சக ஊர்க்காரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுதான் வீரப்பனின் முதல் கொலை. அடுத்து தன்னிடம் தந்தம் வாங்கி விற்று பெரிய அளவுக்கு காசு பார்த்துவிட்டு, தனக்கு கொஞ்சத்தை மட்டுமே ஊதியமாக அளித்து வந்த தனது முதல் முதலாளி ராஜூ கவுண்டரை சுட்டுத் தள்ளியது இரண்டாவது பெரிய கொலை. இதன் பின்புதான் அவரது புகழ் கேரியர் உயரத் துவங்க.. அந்த வயதுக்கே உரித்தான குணம் அவரை நிரந்தரமாகவே கொலைகாரனாக மாற்றியிருக்கிறது.

வீரப்பனின் கடைசிக் காலத்தில்தான் டி.ஜி.பி. விஜயகுமார் அதிரடிப் படையின் தலைவராக பொறுப்பிற்கு வந்தார். அங்கே அவருக்கு அடுத்த நிலையில் எஸ்.பி. லெவலில் இருந்த செந்தாமரைக்கண்ணனுக்கும், சங்கர் பிதாரிக்கும் இடையில் இருந்த ஈகோ, உட்கட்சிப் பூசல் இவைகளால்தான் வீரப்பன் கில்லிங் ஆபரேஷன் சொதப்புகிறது என்பதை தெரிந்து கொண்டார் விஜயகுமார்.

உடனேயே கவனமாக காய் நகர்த்தி, சங்கர் பிதாரியை அந்த இடத்தில் இருந்து தூக்கினார் விஜயகுமார். இதன் பின்பு செந்தாமரைக்கண்ணன் மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக கடைசிக் கட்டத்தில் தர்மபுரி காடுகளில் வலம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது போலீஸார் வைத்திருந்த எந்திரத் துப்பாக்கியை வாங்க விரும்பிய வீரப்பனுக்கு அதை வாங்கிக் கொடுக்கும் பணியில் போலீஸாரே ஈடுபட்டு தோற்றுப் போயினர். கடைசி நேரத்தில் வீரப்பன் இதையும் கவனித்து எஸ்கேப்பானார். இதன் பின்பு தன்னிடம் இருந்த முத்துக்குமார் தலைமையிலான தமிழர் மீட்சிப் படையினர் மூலமாக கோவை சிறையில் இருந்த அப்துல் நாசர் மதானியை தொடர்பு கொண்டு, அவர் மூலமாகவே துப்பாக்கி வாங்கவும் முயற்சித்திருக்கிறார்.

இந்த விவகாரம் உளவுப் பிரிவு போலீஸ் மூலமாக மேலிடத்திற்கு கிடைக்க.. மதானி மூலமாகவே வீரப்பனை மடக்க முடிவு செய்து அதற்கும் ஒரு திட்டத்தைத் தீட்டி மதானியின் உதவியை நாடினார்கள். ஆனால் மதானி இதற்கு மறுத்துவிட்ட கையோடு முத்துக்குமார் கோஷ்டியிடமும் இதை போட்டுக் கொடுத்துவிட்டார்.

இதே நேரம் காட்டுக்குள் இருந்த முத்துக்குமார் கோஷ்டிக்கும், வீரப்பனுக்கும் இடையில் பிணக்கு வர.. தமிழர் மீட்சிப் படையினர் ஒவ்வொருவராக காட்டுக்குள் இருந்து வெளியேறினார்கள். ஆனாலும் கடைசியாக போலீஸீல் சிக்கினார்கள். இவர்களை உருக்குலைத்து பார்த்தும் வீரப்பனின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் போலீஸுக்கு இப்போது புதிய செய்தியாகக் கிடைத்தது. அது வீரப்பனுக்கு இரவு நேரத்தில் கண் சரியாகத் தெரியவில்லை. கண் ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பதுதான்.

இதை வைத்துதான் போலீஸ் அடுத்த ஸ்கெட்ச்சை போட்டது. துப்பாக்கி விற்கும் நபராக ஒரு போலீஸ்காரர், வீரப்பனின் கூட்டத்தில் சேர.. அவர் மூலமாகவே 2 மாதங்கள் வீரப்பனை போலீஸ் விட்டுப் பிடித்திருக்கிறது. கடைசியாக கண் ஆபரேஷன் செய்துவிடலாம். அப்படியே வெளி மாநிலங்களுக்கு சென்று பதுங்கிவிடலாம் என்று ஆசை காட்ட.. தனது வயது மற்றும் அசதி காரணமாய் வீரப்பன் இதற்கு ஒத்துக் கொள்ள காட்டில் இருந்து வெளியில் வந்தார்.

இவர்கள் எதிர்பார்த்ததுபோலவே பாப்பிரெட்டிபட்டி மெயின் ரோட்டில் ஒரு மெடிக்கல் ஷாப் காம்ப்ளக்ஸ் அருகில் இவர்களது வேன் வருகையில், போலீஸார் சுற்றி வளைத்து தீபாவளி கொண்டாடிவிட்டார்கள். இதிலேயே இன்னொரு கிளைக் கதையையும் சொல்கிறார்கள்.

காட்டில் இருந்து வெளியேறிய வீரப்பன்.. தனது நெருங்கிய உறவுக்காரர் ஒருவரின் வீட்டுக்கு சாப்பிடச் சென்றபோது, அங்கே கொடுக்கப்பட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டு அதனால் உடனடியாய் உயிரிழக்க.. இதன் பின்புதான் போலீஸுக்கு தகவல் போய் அவரை உயிரற்ற சடலமாய் தூக்கினார்கள் என்கிறார்கள். ‘சந்தனக்காடு’ தொலைக்காட்சி தொடரில் இதுதான் உண்மை என்று படமாக்கப்பட்டு வெளியானது.

வீரப்பனின் சரித்திரத்தில் நடைபெற்ற பல முக்கிய விஷயங்கள் இந்தப் படத்தில் பல இடங்களில் வசனம் மூலமாகவே கடத்தப்பட்டிருக்கிறது.

தன்னை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்யத் திட்டமிட்ட டி.எஃப்.ஓ. சீனிவாசனை வீரப்பன் தந்திரமாக காட்டுக்குள் அழைத்து அவர் தலையை துண்டித்து ஈட்டியில் சொருகி வைத்தது..! 

துப்பாக்கி வாங்கும் ஆசையில் ஷகீல் அகமது, ஹரிகிருஷ்ணன் என்ற இரண்டு போலீஸ் உயரதிகாரிகள் விரித்த வலையில் சிக்கிக் கொண்ட வீரப்பனின் கூட்டாளி மாதையனை போலீஸ் சுட்டுக் கொல்ல.. பதிலுக்கு பொய்யான செய்தி கொடுத்து ஷகீலையும், ஹரிகிருஷ்ணனையும் வரவழைத்து, அவர்கள் வந்த அம்பாசிடர் கார் மீது குண்டு மழை பொழிந்து அவர்களை காலி செய்தது..!

வீரப்பனை பிடிக்காமல் நான் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன் என்று தமிழகத்து மக்களிடம் உறுதி மொழி கொடுத்து எஸ்.பி.யான கோபாலகிருஷ்ணனை அவர் செய்த பல கற்பழிப்புகளுக்காகவும், கொடுமைகளுக்காகவும் தந்திரமாக வரவழைத்து கண்ணிவெடியில் சிக்க வைத்து 22 பேரை கொன்றது..!

ராமாவரம் போலீஸ் ஸ்டேஷனைத் தாக்கி அங்கேயும் சில போலீஸ்காரர்களை கொலை செய்தது..! தன்னை போலீஸில் காட்டிக் கொடுக்க நினைத்த சிலரை கொலை செய்தது..! ராஜ்குமாரை கடத்தியது.. பின்பு பேச்சுவார்த்தை வந்த நக்கீரன் கோபாலிடம் பேசியது.. நெடுமாறன் அண்ட் கோ.விடம் ராஜ்குமாரை ஒப்படைத்தது..!

அடுத்து நாகப்பாவைக் கடத்தியது.. அவரை கொலை செய்தது..! இந்தக் கொலையை தான் செய்யவில்லை என்று அப்போதே வீரப்பன் அறிக்கையெல்லாம் விட்டார். “கர்நாடக, தமிழக கூட்டு அதிரடிப் படைதான் என் மீது வெறுப்பு வருவதற்காக இதைச் செய்திருக்கிறார்கள். நாகப்பா என்னிடமிருந்து தப்பியோடிவிட்டார்..” என்றார் வீரப்பன். ஆனால் இரு மாநில அரசுகள் அதை மறுத்து வீரப்பன்தான் இந்தக் கொலையைச் செய்தார் என்று இப்போதுவரையிலும் சொல்கின்றன.

டி.எஃப்.ஓ. சீனிவாசனை தன்னைக் கொல்ல முயற்சித்ததாலும், தனது ஆட்களை கைது செய்து சிறைக்குள் அனுப்பி வைத்ததாலும் ஏற்பட்ட கோபத்தில்தான் கொன்றதாக வீரப்பனே சொல்லியிருக்கிறார்.  இதற்குப் பின்னர் வீரப்பனின் குண்டுக்கு பலியான போலீஸ் உயரதிகாரிகள் அனைவருமே மலைவாழ் மக்களை கொடுமைப்படுத்தியதற்காகவும், பல நூறு கற்பழிப்புகளை செய்த காரணத்தினாலும்தான் தான் கொலை செய்ததாக அவரே சொல்லியிருக்கிறார்..!

வீரப்பன் தண்டிக்கப்பட வேண்டியவர்தான். கொல்லப்பட வேண்டியவர்தான். இதில் சந்தேகமே இல்லை. ஆனால் வீரப்பனை சாக்காக வைத்து சிறப்பு அதிரடிப் படையினர் அந்தப் பகுதி மலைவாழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்களுக்கு யார் நியாயம் சொல்வது..? ‘வீரப்பன் வேட்டை’ என்ற பெயரில் இரு மாநில அரசுகள் நடத்திய இந்த கொடூரத்தைப் பற்றி இந்தச் சினிமாவிலும் ஒரு வார்த்தைகூட இல்லை என்பதுதான் மிக கேவலமானது..!

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்களை பிடித்து மாதேஸ்வரன் மலைப் பகுதியில் ஒர்க்ஷாப் என்னும் கொட்டகையில் அடைத்து வைத்து.. ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் யூத மக்களுக்கு நேர்ந்த கொடுமையைப் போலவும், சிங்களப் படைகள் தமிழர்களுக்கு எதிராக செய்ததையும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இரு மாநில கூட்டு போலீஸ் படைகள் செய்திருப்பதாக ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன், சதாசிவம் கமிஷன் இரண்டுமே சொல்லியிருந்தும், படத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை..! காட்டவும் இல்லை..!

எத்தனை எத்தனை கொடுமைகளைத்தான் செய்திருக்கிறார்கள் இந்த போலீஸ் பாவிகள்..! எத்தனை கற்பழிப்புகள்..? எத்தனை கொலைகள்..? ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவலில் இருக்கும் காட்சிகளையெல்லாம் படித்தால் நல்ல மனம் படைத்தவர்களுக்கு அதற்குப் பின் தூக்கமே வராது..!

இத்தனை கொடூரங்களையும் செய்த யோக்கியசிகாமணிகள் பலரும் இப்போது இரண்டு பதவி உயர்வுகளை ஒரே நேரத்தில் பெற்றுக் கொண்டு நமது சல்யூட்டையும் பெற்றுக் கொண்டு நமக்காகவே உழைத்து வருகிறார்கள்.. இத்தனை கொலைகளுக்காகவும், கற்பழிப்புகளுக்காகவும் இதுவரையிலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மீதுகூட எஃப்.ஐ.ஆர். போடப்படவில்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம்..! 

இத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு அந்த அப்பாவி மக்கள் மீது தடா வழக்கிலும் கைது செய்து சிறையிலும் அடைத்தார்கள். சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தடா கைதிகளாக்கப்பட்டு, பின்பு இவர்களில் அதிகம் பேர் எட்டாண்டுகள் கழித்தே நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர்..! 

ஒரு விஷயத்தை ஊறப் போட வேண்டுமெனில் அதன் மீது கல்லை போடு.. இல்லையெனில் கமிஷனை போடு என்பதை போல இது விஷயமாக உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு கமிஷனை போட்டு அக்கமிஷன் கொடூரங்கள் நடந்தது உண்மை என்று கொடுத்த இறுதி அறிக்கையின் மீது இன்னமும்கூட நடவடிக்கை எடுக்காமல் வைத்திருக்கிறார்கள்..! 

ராஜ்குமார் கடத்தலின்போது தனது கோரிக்கைகளாக மலைவாழ் பெண்கள் கற்பழிப்புகள் பற்றியும், சீருடை அணிவித்து பலரை வீரப்பனின் ஆட்கள் என்று பொய் சொல்லி படுகொலைகளை செய்தது பற்றியும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் வீரப்பன் பேசியிருந்தார்..

ஒவ்வொரு படுகொலைகளுக்குப் பின்னாலும் வீரப்பன் தரப்பில் ஒரு வலுவான காரணங்கள் இருத்தன.. இவைகள் அத்தனையையும் தூக்கிக் கடாசிவிட்டு ஏதோ வீரப்பன் போலீஸ்காரர்களை கொல்வதற்காகவே காட்டுக்குள் மறைந்திருந்ததாகவும், வீரப்பனை பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் போலீஸார் கடும் சிரமப்படுகிறார்கள் என்று ‘வனயுத்தம்’ போலவே இந்தப் படத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது..!

வீரப்பனின் தம்பி அர்ஜூனன் கதையை இதிலும் காணோம்.. டி.எஃப்.ஓ. சிதம்பரநாதனை கடத்தி வைத்துக் கொண்டு அதற்குப் பதிலாக சில கோரிக்கைகளுடன், உடல் நலமில்லாமல் இருந்த தனது தம்பி அர்ஜூனனுக்கு சிகிச்சையளித்து திருப்பி அனுப்பும்படியும் வீரப்பன் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால், திடீரென்று சிதம்பரநாதனும் மற்ற இருவரும் தப்பி வந்துவிட.. இங்கே விருந்தாளியாக இருந்த அர்ஜூனன் வசமாகச் சிக்கிக் கொண்டார்.. அதற்குப் பின்னர் ஒரு நாள் அர்ஜூனனும், அவரது கூட்டாளிகளும் விஷமறிந்து இறந்துவிட்டதாகச் சொல்லி அவர்கள் கதையை முடித்தார்கள்  போலீஸார்.. இது பற்றியும் இதில் எதையும் காணவில்லை..!

கூடுதல் போனஸாக.. நக்கீரன் கோபால் இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் நொந்து கொள்வார். அவரைப் போல ஒரு கேரக்டர் வருகிறது. அப்படியே சோப்ளாங்கியாக வீரப்பனை பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட்டு நிற்கிறது. என்ன கொடுமை சரவணா இது..?

கூடவே, ராஜ்குமார் கடத்தப்பட்டபோது தமிழக, கர்நாடக அரசுகள் வீரப்பனுக்குக் கொடுத்தனுப்பிய 9 கோடி ரூபாயை நம்பியவர்கள் ஏமாற்றி, திருடி அதில் வெறும் 27 லட்சம் ரூபாயை மட்டுமே தன்னிடம் கொடுத்ததாக வீரப்பனே சொல்வதுபோல படத்தில் இரண்டு இடங்களில் பதிவாகியிருக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

கூடுதல் தகவல்களாக ஜெயேந்திரர், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களை கடத்தி காசு சம்பாதிக்க வேண்டும் என்று வீரப்பன் நினைத்திருந்ததாக ஒரு செய்தியையும் இந்தப் படத்தில் பரப்பியிருக்கிறார் வர்மா. ராஜ்குமார் கடத்தலுக்குப் பிறகு தான் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பத்தை அரசுகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைத்தான் வீரப்பன் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார். ஆனால் இதைத்தான் இரு மாநில அரசுகளும் ஏற்க மறுத்து நாடகமாடின. எப்படியும் சுட்டுக் கொன்றே தீருவது என்பதில் இரு மாநில அரசுகளும் உறுதியாக இருந்து, அதைச் செய்து காட்டிவிட்டன.

இந்தப் படத்தில் இன்னொரு உறுத்தலான விஷயம்.. சென்சார் போர்டின் ஓரவஞ்சனைதான். கடந்த சில ஆண்டுகளாகவே ‘எல்டிடிஈ’, ‘பிரபாகரன்’, ‘ஈழம்’, ‘இலங்கை’ என்கிற வார்த்தைகள் திரைப்படங்களில் வசனமாக வந்தாலே கவனமாக கத்திரியைப் போட்டு வந்தது சென்சார் போர்டு.

இதன் காரணமாகவே சில தமிழ்த் திரைப்படங்கள் இன்னமும் ரிலீஸாகாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஆனால், இந்தப் படத்தில் மட்டும் ‘பிரபாகரன்’ என்ற வசனத்தை பல இடங்களில் உச்சரிக்க எப்படி அனுமதித்தார்கள் என்பது புரியவில்லை. படம் பெங்களூரில் சென்சார் செய்யப்பட்டது என்கிறார்கள். ஊர், ஊருக்கு சென்சார் விதிமுறைகள் மாறுமெனில், இந்தியா ஒரே நாடு என்கிற வாக்கியத்தின் மீது சந்தேகம் வருகிறதே..?!

நாளைய சமூகம் முந்தைய சமூகத்தை, நிகழ்வுகளை.. திரைப்படம் பார்த்துதான் முடிவு செய்யப் போகிறது. இது போன்ற வரலாற்றைச் சொல்லும் படங்கள் அரைகுறை வடிவத்தில் வெளிவந்து திரையுலகில் பதிவு செய்யப்படுவது வருங்கால மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப் பெரிய துரோகம். இப்படிச் செய்பவர்களும் நிச்சயம் படைப்பாளிகள் அல்ல.

ராம் கோபால் வர்மா செய்திருப்பது அப்பட்டமான திரைக் கற்பழிப்பு..!  படம் பார்க்கும் ஒவ்வொருவரும் இதனை பதிவு செய்து வைப்பது கடமையாகும்..! தயவு செய்து செய்யுங்கள்..!

Our Score