full screen background image

விளையாட்டு ஆரம்பம் – சினிமா விமர்சனம்

விளையாட்டு ஆரம்பம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடித்துள்ளார். மற்றும் ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய் ஆனந்த், எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அனுஜாவும் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – அருண்மொழி சோழன், இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் – ருக்சீனா, இந்துமதி, எழில்வேந்தன், தென்றல், ஸ்ரீகாந்த்தேவா, கலை – A.S.சாமி, நடனம் – பாபி, தினேஷ், இருசன், அபீப், சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், படத் தொகுப்பு – எஸ்.பி.அகமது, தயாரிப்பு நிர்வாகம் – கார்த்திக், தயாரிப்பு மேற்பார்வை – ஆத்தூர் ஆறுமுகம், ரபீக், கதை – பெரோஸ்கான், தயாரிப்பு – ஆனந்த் உதார்கர், கார்த்திகேயன். திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய் R. ஆனந்த், A.R.சூரியன்.

MLM எனப்படும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் அனைத்துமே மக்களை சுரண்டி ஏமாற்றுகின்றன. அவைகளைத் தடை செய்ய வேண்டும் என்று நிறைய கூக்குரல்கள் எழுந்திருக்கும் நேரத்தில் அதே மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசும் படமாக இது வந்திருக்கிறது. ஒருவேளை படத்தின் தயாரிப்பாளர்கள் அந்த பிஸினஸில் இருக்கிறார்களோ என்னவோ..?

ஹீரோ யுவன் சாப்ட்வேர் பொறியாளர். ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கூடவே காதலையும்தான். போலீஸ் துணை கமிஷனரான ரியாஸ்கானின் தங்கையான ஸ்ராவியாவை காதலித்து வருகிறார். அவரும்தான். ஸ்ராவியின் அப்பா பாராளுமன்ற உறுப்பினர்.

நன்கு போய்க் கொண்டிருந்த ஐ.டி. வேலையில் திடீரென்று ஒரு பிரேக். திடீரென்று ஒரு நாள் இரவோடு இரவாக நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கிறார்கள். அனைத்து ஊழியர்களுக்கும் வேலை பறி போகிறது.. இந்த வேலையை நம்பி நிறைய கடன்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த யுவனின் நண்பன் இந்தச் சோகத்தைத் தாள முடியாமல் அதே கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். இது யுவனை பெரிதும் பாதிக்கிறது.

வேறு வேலை தேடுகிறார்கள். கிடைக்கவில்லை. இந்த நேரத்தில்தான் எம்.எல்.எம். எனப்படும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் பற்றிய ஒரு அறிமுகம் யுவனுக்கும் அவரது டீமுக்கும் கிடைக்கிறது.

வேண்டாவெறுப்பாக இதில் தலையைக் கொடுத்தாலும் போகப் போக அது நிஜமாகவே ஆர்வமாக இருக்க.. வியாபாரத்தை பலமாக்குகிறார் யுவன். காசு கொட்டுகிறது. இப்போது யுவனே மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கிற்கு பிராண்ட் அம்பாசிடராக மாறுகிறார்.

யுவன்-ஸ்ராவியா காதல் ரியாஸ்கானுக்கு பிடிக்கவில்லை. யுவனை கண்டித்துப் பார்க்கிறார்.. தண்டித்தும் பார்க்கிறார். காதலைப் பிரிக்க முடியவில்லை. ஆனால் தந்திரமாக யுவனை காலி செய்ய காத்திருக்கிறார் ரியாஸ்கான்.

அதே நேரம் வேறொரு திருட்டுக் கும்பலும் இதே எம்.எல்.எம். வியாபாரத்தில் இறங்குகிறது. மக்களிடமிருந்து தோராயமாக 100 கோடியை லவட்டிவிட வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள். இது தெரிந்து யுவன் நேரடியாக அவர்களிடத்தில் சென்று மோதுகிறார்.

இதையெல்லாம் அறியும் ரியாஸ்கான் எம்.எல்.எம். வியாபாரத்தை மூடிவிட்டு ஓடப் போகிறார் யுவன் என்று வதந்தியைக் கிளப்பிவிடுகிறார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி யுவனின் அலுவலகத்திற்கு சீல் வைக்கிறார். கம்பெனி செயல்படவிடாமல் தடுத்து யுவனையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

யுவன் அடுத்து என்ன செய்தார்..? ரியாஸ்கானை பழி வாங்கினாரா..? காதலியைக் கரம் பிடித்தாரா.? என்பதையெல்லாம் நிறையவே பொறுமையிருந்தால் இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஹீரோ யுவன் எப்படியாவது அடுத்தக் கட்ட முதல் வரிசை ஹீரோவாக வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் தகுதிகளை அவர்தான் இன்னமும் அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். வெறும் நடனம், சண்டை பயிற்சி மட்டுமே இதற்கு போதுமானதல்ல. நடிப்பில் வேறு வேறு விதங்களை படத்திற்கு படம் மாறுபட்டு காண்பித்தால் மட்டுமே இதில் ஜெயிக்க முடியும்..!

தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் யுவன். இயக்கம் சரியில்லை என்னும்போது இவரை மட்டும் குறை சொல்லி என்ன புண்ணியம்..?

ஹீரோயின் ஸ்ராவியா வழக்கமான ஹீரோயின்களை போலவே அழகு பதுமையாக வருகிறார். நடனடமாடுகிறார். சரசமாடுகிறார். மற்றபடி ஸ்பெஷலாக எதுவும் இல்லை..

ரியாஸ்கான் அளவுக்கு அதிகமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவரது அப்பாவாக நடித்தவரைவிடவும் அம்மாவாக நடித்த எலிஸபெத் சூரஜ் மாமா, மாமா என்று தன் கணவரை அழைத்து ஒரு அரசியல்வியாதியின் ஒண்ணும் தெரியாத மனைவியை கொஞ்சம் நிசமாக காண்பித்திருக்கிறார்.

திரைக்கதையும், இயக்கமும் இத்தனை ஓட்டையாய் இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை. கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் யுவனை தனியேவிட்டுவிட்டு போகிறார்கள் போலீஸார். பின்பு நீதிபதி வந்துவிட்டதை யாரோ வெளியில் இருந்து யுவனிடம் சொல்ல அவர் அதுவரையில் மரத்தடியில் தனிமையில் இருந்தவர் எழுந்து செல்கிறார். என்ன மாதிரியான காட்சி இது..?

பெரோஸ்கான் சி.பி.ஐ. அதிகாரியாய் வந்து தானே விசாரிக்கிறார். இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஆனாலும் இவர் மட்டுமே வந்து விசாரிக்கிறார். லஞ்சம் கேட்கிறார். கொடுத்தால் உலகத்திலேயே நீதான் ரொம்ப யோக்கியமானவன் என்று தான் சர்டிபிகேட் கொடுப்பதாகச் சொல்கிறார். ம்ஹூம்.. நமக்கு மண்டை காய்ஞ்சதுதான் மிச்சம்..!

நடிகை அனுஜாவை நீண்ட வருடங்களுக்கு பிறகு இத்திரைப்படத்தில் பார்க்கிறோம். படு மொக்கையான கேரக்டர் ஸ்கெட்ச். படத்தில் இவர் நடிகை அனுஜாவாகவே வருகிறார். இப்போது படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் எம்.எல்.எம். திட்டத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறார். இது நல்ல திட்டம் என்று திட்டத்திற்கு கொடி பிடிக்கிறார். என்ன சொல்லி இவரை நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை. பவர்ஸ்டாரின் காமெடி டிராக் “ஐயோ ராமா” என்று (சொ)கொல்ல வைக்கிறது..!

போதாக்குறைக்கு ஒரு பிராமண பத்திரிகையாளர்தான் இது போன்ற திருட்டு தொழிலதிபர்களுக்கும், அரசியல்வியாதிகளுக்கும் கால் பிடிக்கும் வேலையைச் செய்து மக்கள் விரோதச் செயல்களைச் செய்வதாக காட்டியிருக்கிறார் இயக்குநர். எந்த பத்திரிகை மீது இயக்குநருக்கு கோபமோ தெரியவில்லை. அதற்காக ஒரு பத்திரிகையாளர் மீது ஜாதி துவேஷத்தைத் திணித்து அவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்..? ஏதோ ஒரு பத்திரிகையாளர் என்பதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம்..!

அருண்மொழி செல்வனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் படத்தில் இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேறு எதுவும் இல்லை.

இந்தியாவில் இருக்கும் எந்தவொரு எம்.எல்.எம். நிறுவனமும் மக்களிடையே நற்பெயரை எடுக்கவேயில்லை. நன்கு படித்த மூளைச் சலவை செய்யத் தெரிந்த சில திருடர்களை துணைக்கு வைத்துக் கொண்டு அப்பாவிகளை ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற பொருட்கள்கூட மூன்றாம் உலக நாடுகளின் மக்களை ஏமாற்றுவதற்காகவே தயாரிக்கப்பட்ட பொருட்களாகவே இருக்கின்றன. இதனால்தான் தமிழகத்து மக்கள் இந்த எம்.எல்.எம்.மை இப்போதுவரையிலும் புறக்கணித்தே வந்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் எம்.எல்.எம். கம்பெனிகளுக்கு வக்காலத்து வாங்க நினைத்திருந்தால், தனியே ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக செய்திருக்கலாம். ஆனால் இப்படி ஒரு திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே கருத்தொற்றுமையை உருவாக்க நினைப்பது திரைப்படத் துறைக்கு நல்லதல்ல..!

இது போன்று மக்கள் விரோத செயல்களையெல்லாம் நல்லவைகளாக்க திரைப்படத் துறையை பயன்படுத்தினால் மக்கள் சீக்கிரமாக திரைப்படத் துறைக்கே சங்கு ஊதிவிடுவார்கள்..! ஜாக்கிரதை..!

Our Score