full screen background image

வளர்த்துவிட்ட பாக்யராஜையே 3 மணி நேரம் காக்க வைத்த நடிகர் விஜயன்..!

வளர்த்துவிட்ட பாக்யராஜையே 3 மணி நேரம் காக்க வைத்த நடிகர் விஜயன்..!

திரையுலகில் அடித்தட்டு நிலையில் இருந்து உயர்ந்தவர்களில் சிலர் உயர்ந்தவுடனேயும் பழசை மறக்காமல் தொழிலுக்கு மரியாதை கொடுத்து வாழ்ந்தார்கள்.. ஆனால் பலரோ அந்த உயர்வையே நிரந்தரமாக எண்ணி தங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு வளர்த்துவிட்டவர்களை காயப்படுத்தி வீழ்ந்தும் போனார்கள்.. அப்படியொருவரின் கதையை நேற்றைய ‘திலகர்’ படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கூறினார் இயக்குநர் கே.பாக்யராஜ்.

vijayan

“கிழக்கே போகும் ரயில்’ படத்தின்போது எப்போதும் என்னுடன் இருப்பார் ஒருவர். அவர் விஜயன். கேரளாக்காரர் நான்தான் அவரை எங்கள் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்த்து விட்டேன். ஆனால் அவருக்கு நடிக்க ஆசை. ஏதாவது வேடமிருந்தால் தரச் சொல்லி அடிக்கடி என்னை நச்சரிப்பார்.

அவரது அனத்தல் தாங்காமல் அந்தப் படத்தில் அவரை நடிக்க வைக்க முடிவெடுத்தேன். “விஜயனுக்கு சிறு வேடம்தான்..” என்று எங்கள் டைரக்டரிடம் சொன்னேன். நான் விஜயனுக்கு எழுதியிருந்த வசனங்களைப் பார்த்து, “என்னய்யா இவன் எங்க பார்த்தாலும் வர்றான்.. ஹீரோவுக்கு எழுதின மாதிரி இருக்குய்யா..?” என்றார். இருந்தாலும் நான் இயக்குநரை சம்மதிக்க வைத்து, விஜயனை அந்தப் படத்தில் நடிக்க வைத்தேன்.

படத்தில் சுதாகரையும், ராதிகாவையும் துரத்தும் காட்சியில் இடையில் பட்டாளத்தானாக விஜயன் வந்து நின்றது தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றது. போகிற இடமெல்லாம் அவருக்கு அத்தனை கைதட்டல்கள்.. வரவேற்பு. இதை எங்கள் இயக்குநர் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

அடுத்து ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தின் கதையை சொல்லி எங்கள் இயக்குநரிடம் சம்மதம் வாங்கியிருந்தேன். ‘இதில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று இயக்குநரிடம் கூறினேன். “இல்ல.. இல்ல.. விஜயனே நடித்தால் போதும்.. நன்றாக இருக்கும்…” என்றார் அவர். அப்படித்தான் விஜயன் பெரிய ஆளானார்.

அதே விஜயன் சில ஆண்டுகளில் என்னுடனும் நடிக்கும் சந்தர்ப்பம் வந்தது. ஒரு நாள் ஷூட்டிங்கில் என்னை மூன்று மணி நேரம் காக்க வைத்துவிட்டு.. அலட்சியமா, தாமதமாக வந்து சேர்ந்தார். நான் அவரிடம் ‘என்னய்யா… சிறுவேடம் இருந்தால் கொடுங்கள் என்று கெஞ்சியது நினைவில்லையா?’ என்று கேட்டேன். நெளிந்து கொண்டே ‘சாரி’ என்றார். இப்படிப்பட்ட வசதி வாய்ப்பெல்லாம் கதாநாயகர்களுக்கு மட்டுமே உண்டு.

படத்தில் எந்தக் கதாபாத்திரமா இருந்தாலும் பேசும் வசனம் முக்கியம். பரோட்டா சூரி அந்த ஒரு வசனத்தின் மூலம் பெயர் பெற்று இன்று வளர்ந்து விட்டார். இந்தத் துருவாவும் இதேபோல கடுமையாக உழைத்திருக்கிறார். இந்த ‘திலகர்’ நல்ல கருத்தைச் சொல்கிற படம். கதாநாயகனுக்கும் படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். துருவா தனக்காக உழைத்தவர்களுக்கும் பெயர் வாங்கித் தர வேண்டும்” என்று வாழ்த்தினார் பாக்யராஜ்.

Our Score