‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருக்கும் முதல் இணையத் தொடரான ‘ஃபார்ஸி’ வரும் பிப்ரவரி 10-ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இருவரும் இணைந்து தயாரித்து, இயக்கியிருக்கும் இந்தக் க்ரைம் த்ரில்லர் தொடர், பாலிவுட் நடிகரான ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் முதல் இணையத் தொடராகவும் அமைந்துள்ளது.
மேலும் இத்தொடரில் கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
க்ரைம் திரில்லர் வகைகளிலேயே ஒரு தனித்துவமான கதைக் களத்தோடு இயக்குநர் இரட்டையர்களின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய இத்தொடர் 8 எபிசோடுகளில் படமாக்கப்பட்டு, அடுத்தடுத்து விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளால் நிறைந்தது.
பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படும் ஒரு அமைப்பிற்கு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின் தங்கிய நிலையிலிருக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக் கலைஞனை சுற்றித்தான் இதன் கதை பின்னப்பட்டுள்ளது.
அந்த இளைஞனுக்கும், சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான ஒரு விறுவிறுப்பான முடிவற்ற இந்தப் போட்டியில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்தப் படத்தின் கதையை சீதா ஆர்.மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே-யுடன் இணைந்து எழுதியுள்ளனர்.
இத்தொடர் பற்றி இயக்குநர்கள் ராஜ் & டிகே பேசும்போது, “தி ஃபேமிலி மேனின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, எங்களின் அடுத்த புதிய தொடருக்காக பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்!
அடிப்படையில் இந்த தொடரின் உருவாக்கம் அதிகளவில் வியர்வையையும், கண்ணீரையும் சிந்த வைத்திருக்கிறது. ‘தி ஃபேமிலி மேன்’ தொடருக்குப் பிறகு, மற்றொரு அற்புதமான, தனித்துவமான உலகத்தைக் கொண்டு வர எங்களுக்கு நாங்களே சவால் விட்டுக் கொண்டோம்.
இது எங்களுக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும், இதை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கி, பெருந்தொற்று நோய் காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளிடையே படமாக்கியுள்ளோம்.
பிரைம் வீடியோவில் வரும் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தத் தொடரை பார்ப்பதற்காக நாங்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.” என்றார்.









