full screen background image

பழம்பெரும் சினிமா கதாசிரியர் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் காலமானார்

பழம்பெரும் சினிமா கதாசிரியர் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் காலமானார்

பிரபல பழம்பெரும் கதாசிரியரும், இயக்குநருமான ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 73.

திருச்சியில் 1943-ம் ஆண்டு பிறந்தவர் வியட்நாம் வீடு சுந்தரம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சுந்தரம், 10 வயதிலேயே வேலை தேடி சென்னை வந்தார். டன்லப் ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்தார். அப்போதே எழுத்து மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டு ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகக் குழுவில் சேர்ந்தார். குடும்ப பின்னணியிலான கதைகளை அவர் எழுதினார்.  பிறகு சினிமா துறைக்கு வந்தார்.

இவர் எழுதிய நாடகமான ‘வியட்நாம் வீடு’தான் படமாக உருவாகியது. படத்துக்கு சுந்தரம்தான் கதை வசனம் எழுதினார். அந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்றது. அன்று முதல் ‘சுந்தரம்’  என்ற அவரது பெயருடன் ‘வியட்நாம் வீடு’ என்ற அடைமொழியும் சேர்ந்துக் கொண்டது.  அப்போது முதல் சிவாஜிக்கு நெருங்கிய நண்பராகவும் அவர் விளங்கினார்.

பின்பு சிவாஜி நடித்த ‘கவுரவம்’, ‘ஞான ஒளி’ ஆகிய படங்களை இயக்கியதுடன் அவர் நடித்த ‘சத்யம்’,  ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, ‘அண்ணன் ஒரு கோயில்’, ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ போன்ற பல படங்களுக்கு கதை வசனம் எழுதினார்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘நாளை நமதே’  படத்துக்கு திரைக்கதை எழுதி தந்தார். இப்படம் இந்தியில் வெளியான தர்மேந்திரா நடித்த ‘யாதோங்கி பாரத்’ படத்தின் ரீமேக் ஆகும். எம்.ஜி.ஆர் நடித்த ‘நான் ஏன்  பிறந்தேன்’ படத்துக்கு வசனமும் எழுதி உள்ளார்.

‘அப்பு’, ‘கண்ணாமூச்சி ஏனடா’, ‘கோலாகலம்’, ‘வந்தா மல’ போன்ற படங்களில் சிறு வேடங்களில் சுந்தரம் நடித்திருப்பதுடன், ‘மை டியர் பூதம்’, ‘மெட்டி ஒலி’, ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘அவர்கள்’,  ‘ஆடுகிறான் கண்ணன்’, ‘பிள்ளை நிலா’, ‘பைரவி’, ‘வள்ளி’ உள்ளிட்ட பல்வேறு டி.வி. சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் சென்னை தி.நகர் ராமன் தெருவில் வசித்து வந்தார். கடைசியாக, சன் டி.வி.  தொடர்களில் அவர் நடித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக  உடல்நலமில்லாமல் இருந்து வந்த அவர் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இன்று  அதிகாலை ஒன்றரை மணி அளவில் அவர் மரணம் அடைந்தார்.

மறைந்த சுந்தரம் உடலுக்கு இயக்குநர்கள் மனோபாலா,  சித்ரா லட்சுமணன், தளபதி, சுந்தர்.சி, நடிகை குஷ்பு, நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ராஜேஷ், பஞ்சு சுப்பு உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்களும், டி.வி. நட்சத்திரங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

‘வியட்நாம் வீடு’ சுந்தரத்தின் மனைவியின் பெயர் செல்லா. இவர்களுக்கு அனு,  சுவேதா என 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் அனு திரைப்படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வருகிறார்.

வியட்நாம் வீடு சுந்தரம் எழுத்தாளராக பணியாற்றிய படங்கள்

வியட்நாம் வீடு (1970)
ஞான ஒளி (1972)
நான் ஏன் பிறந்தேன் (1972)
நாளை நமதே (1975)
பணக்காரப் பெண் (1976)
பயணம் (1976)
சத்யம் (1976)
கிரஹப்பிரவேசம் (1976)
ஜஸ்டிஸ் கோபிநாத் (1978)
அண்ணன் ஒரு கோவில் (1978)
தேவதா (1978) (Hindi)
அனுபமா (1981) (Kannada)
பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
ஒரு மலரின் பயணம் (1985)
நவக்கிரஹ நாயகி (1985)
கீதாஞ்சலி (1985)
ஆயிரம் கண்ணுடையாள் (1986)
தர்மம் (1986)
பிறந்தேன் வளர்ந்தேன் (1986)
நம்பினார் கெடுவதில்லை (1986)
ஆனந்த் (1987)
ஜல்லிக்கட்டு (1987)
ராஜ மரியாதை (1987)
வேலுண்டு வினையில்லை (1987)
சூரசம்ஹாரம் (1988)

பரட்டம்லோ பால சந்துரு (1988) (Telugu)

ஞானப்பார்வை (1991)

இயக்கிய படங்கள்

கெளரவம் (1973)
விஜயா (1973) – எழுத்து, இயக்கம்
தேவிஸ்ரீகருமாரியம்மன் (1974) – எழுத்து, இயக்கம்

வியட்நாம் வீடு சுந்தரம் நடித்த திரைப்படங்கள்

அப்பு (2000)
கண்ணாமூச்சி ஏனடா (2007)
கோலாகலம் (2013)
வந்தா மல (2015)

நடித்த தொலைக்காட்சி தொடர்கள்

மை டியர் பூதம்
ரிஷிமூலம்
கிருஷ்ணதாசி
எனக்குள் அவன்
மெட்டி ஒளி
ராஜ ராஜேஸ்வரி
தற்காப்பு கலை

அவர்கள்

ஆடுகிறான் கண்ணன்

மர்மதேசம்

அத்திப்பூக்கள்

தங்கமான புருஷன்

அபிராமி

கலசம்

பொண்டாட்டி தேவை

பைரவி

அகல்விளக்கு

பிரியமானவள்

பிள்ளை நிலா

வள்ளி

Our Score