இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், அனுராக் காஷ்யப், மஞ்சு வாரியர், கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் – வெற்றிமாறன், இசை – ‘இசைஞானி’ இளையராஜா, ஒளிப்பதிவு – ஆர்.வேல்ராஜ், கலை இயக்குநர் – ஜாக்கி, படத் தொகுப்பு : ராமர், ஆடை வடிவமைப்பாளர் – உத்ரா மேனன், சண்டை பயிற்சி இயக்கம் – பீட்டர் ஹெய்ன் & ஸ்டண்ட் சிவா, ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார், விஎஃப்எக்ஸ் – ஆர்.ஹரிஹரசுதன், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, டி.ஒன்., நிர்வாகத் தயாரிப்பாளர் – ஜி.மகேஷ், இணைத் தயாரிப்பாளர் – வி.மணிகண்டன், தயாரிப்பாளர் – எல்ரெட் குமார்.
‘விடுதலை’ முதல் பாகம் மிகப் பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.
பெருமாள் வாத்தியாரான விஜய் சேதுபதியை தமிழக போலீஸின் சிறப்புப் படையினர் கைது செய்ததோடு விடுதலை படத்தின் முதல் பாகத்தை முடித்திருந்தார்கள்.
இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்த நிலையில், அவர் எப்படி நக்சல் அமைப்பு என்றழைக்கப்பட்ட தமிழர் மக்கள் படையின் தலைவராக உயர்ந்தார் என்பதுதான் முக்கிய கதைக் களமாக அமைந்துள்ளது.
விஜய் சேதுபதி கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் காவலர் குமரேசன் என்ற சூரி. இந்த இரண்டாம் பாகத்தில் தான் பிடித்துக் கொடுத்த இந்த பெருமாள் வாத்தியார் என்பவர் யார்?.. அவருடைய பூர்வாசிரமம் என்ன.. அவருடைய குடும்ப வாழ்க்கை.. அவர் எப்படி தீவிரவாதப் பாதைக்குள் வந்தார்..? என்பதை சூரி தனது அம்மாவுக்கு எழுதும் கடித்த்தில் குறிப்பிடுகிறார்.
மேலும் விஜய் சேதுபதியை காட்டுக்குள் இருக்கும் கேம்ப் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும்பொழுது சூரியிடம் அவர் தன்னுடைய மீதிக் கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.. இதுவும் திரையில் நம் கண் முன்னே காட்சிகளாக விரிகிறது.
தான் வேலை செய்யும் கிராமத்தின் பண்ணையார் அந்தப் பகுதி மக்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார் என்பதை கண்முன்னே காண்கிறார் விஜய் சேதுபதி. உள்ளூர் போலீஸாரும், பண்ணையாரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்து கொண்டு அந்த பகுதி ஏழை மக்களை கொடுமைப்படுத்துவதை நேரில் கண்டு மனம் வெதும்புகிறார் விஜய் சேதுபதி.
அப்போது அந்த பகுதி மக்களிடையே மிகப்பெரிய செல்வாக்கைப் பெறும் கம்யூனிஸ்ட் தலைவரான தோழர் கே.கே. என்ற கிஷோரை விஜய் சேதுபதி சந்திக்கிறார். தோழர் கே.கே.வின் பேச்சுக்களிலும். அவருடைய கம்யூனிச சிந்தாத்திலும் ஈர்க்கப்படும் விஜய் சேதுபதி அவருடனேயே பயணிக்க முடிவெடுக்கிறார்
பண்ணையார்களின் அடக்குமுறையை எதிர்ப்பதினாலும், விவசாயக் கூலி தொழிலாளர்கள் உரிமைகளை காப்பதற்காக போராடுவதாலும் போலீசார் மற்றும் பண்ணையார்கள் இருதரப்பினரின் கோபத்திற்கும் ஆளாகுகிறார் பெருமாள் வாத்தியார்.
தோழர் கே.கே.வின் தளபதியாக செயல்படும் விஜய் சேதுபதிக்கு அந்த பகுதியில் இருக்கும் ஒரு கரும்பு தொழிற்சாலையில் கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதை எதிர்க்கும் அந்த ஆலை முதலாளியின் திட்டத்தை முறியடிக்கும் வேலை தரப்படுகிறது.
இந்தப் பணிக்காக வேண்டுமென்றே அந்த கருப்பு தொழிற்சாலையில் ஊழியராக வேலைக்கு சேரும் விஜய் சேதுபதி அந்த தொழிலாளர்கள் நலனை பாதுகாப்பதற்காக கம்யூனிஸ்ட் சங்கத்தை முதன் முதலில் நிறுவி அங்கேயிருக்கும் தொழிலாளர்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்.
இதற்கிடையில் அந்த ஆலை உரிமையாளரின் மகளும் முற்போக்குவாதியுமான மகாலட்சுமி என்ற மஞ்சு வாரியாரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் விஜய் சேதுபதி.
அருகில் உள்ள அருமபுரி என்ன ஊரில் கனிம உள்ள சுரங்கம் தோன்றுவதற்காக பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளிக்கிறது அன்றைய தமிழக அரசு. இதை கம்யூனிச இயக்கம் எதிர்க்கிறது. அதே சமயம் இதை சட்டப்பூர்வமாகத்தான் எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் கே.கே. ஆனால் இனியும் அமைதி வழியில் போராட்டம் நடத்தினால் எந்தத் தீர்வும் கிடைக்காது. ஆயுதம் ஏந்தினால்தான் விடிவு பிறக்கும் என்கிறார் விஜய் சேதுபதி.
இது விஷயமாக இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிகழ்ந்து கே.கே.வுக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையில் பிரிவு ஏற்படுகிறது. இனிமேல் நாம் ஆயுதப் போராட்டம் செய்வோம் என்ற கொள்கையில் இறங்குகிறார் விஜய் சேதுபதி.
கே.கே.விடமிருந்து பிரிந்து வந்து தமிழர் மக்கள் படை என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கும் விஜய் சேதுபதி வெடிகுண்டு வீச்சு, அழித்தொழிப்பு என்ற பெயரில் நிலக்கிழார்கள், பண்ணையார்களை கொலை செய்வது என்று நக்சல் பாணியில் செயல்படுகிறார்.
அப்போது தமிழக அரசின் கவனத்தை பெறுவதற்காக அரியலூர் மேம்பாலத்தில் குண்டு வைத்து அது இத்தனை மணி நேரத்தில் வெடிக்க போகிறது என்ற தகவலையும் முன்கூட்டியே போய் சொல்கிறார்கள். ஆனால் அரசு இந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக டபுள் கேம் விளையாடுகிறது.
இந்தக் குண்டு வெடித்தால் அந்த தமிழர் மக்கள் படை மீது தமிழக மக்களுக்கு கோபம் வரும். அவர்கள் அந்த அமைப்பினரை முற்றிலுமாக நிராகரிப்பார்கள். ஆதரவு தர மாட்டார்கள் என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமல் விட வெடிகுண்டு வெடித்து ரயிலில் பயணம் செய்த அப்பாவி மக்கள் பலியாகிகிறார்கள்.
இதற்குப் பின்பு தமிழக அரசு ஒரு தனி போலீஸ் படையை அமைத்து விஜய் சேதுபதி கூட்டாளிகளையும் படிப்பதற்காக முயல்கிறது. இந்த நேரத்தில்தான் இரண்டு படைகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து கடைசியில் விஜய் சேதுபதி பிடிபடுகிறார்.
விஜய் சேதுபதி பிடிபட்ட விஷயத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர், அமைச்சர், கலெக்டர், லோக்கல் அதிகாரிகளும் முடிவு எடுக்கிறார்கள்.
ஆனால் அதற்குள்ளாக ஒரு பத்திரிகை நிருபரின் தீவிரமான வேட்டையில் விஜய் சேதுபதி பற்றிய விவரம் வழியாக அது பத்திரிகையில் வெளியாகி விடுகிறது.
இதனால் விஜய் சேதுபதியை பத்திரமாக காட்டுப்பகுதியில் இருக்கும் கேம்புக்கு அனுப்ப உத்தரவிடுகிறார் தலைமைச் செயலாளர். அதே நேரத்தில் விஜய் சேதுபதியின் தமிழர் மக்கள் படையை சேர்ந்தவர்களும் விஜய் சேதுபதியை விடுவிப்பதற்காக காவல்துறையினரை சுற்றி வளைத்து மலைப்பகுதிக்கு செல்கிறார்கள்.
இதற்கு அடுத்து என்ன நடந்தது? விஜய் சேதுபதி அவர்கள் காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதுதான் இந்த இரண்டாம் பாகத்தின் திரைக்கதை.
பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்திப் போகிறார் நடிகர் விஜயசேதுபதி. எங்கேயும் நடிகன் விஜய்சேதுபதியை தெரிய விடாமல் கவனமாக பார்த்து நடித்து இருக்கிறார்.
படத்தின் சிறப்பு அம்சங்கள்:கதையின் ஆரம்பத்தில் வரும் சண்டைக் காட்சியை மிகப் பிரமாதமாக எடுத்துள்ளார்கள். கருணாஸின் மகன் கென் கருணாஸீக்கு பேர் சொல்லும் கதாபாத்திரமாக அமைந்து, அவரும் அதை சிறப்பாகவே செய்துள்ளார்.
தலைமைச் செயலாளராக நடித்த ராஜீவ் மேனன் அவர்களின் இயல்பான நடிப்பு ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. தோழர் கே.கே.வாக நடித்த தோழர் கிஷோரின் நடிப்பு வெகு சிறப்பு.
ஒளிப்பதிவு இயக்குநர் வேல்ராஜ் அவர்கள் இரவு நேர காட்சிகளை மிக சிறப்பாக பதிவு செய்திருந்தார்.
போலீஸ் படைக்கும், பெருமாள் வாத்தியாரின் ஆயுதப் படைக்கும் நடக்கும் துப்பாக்கி சண்டைக் காட்சியை சிறப்பாகவே வடிவமைத்து இருந்தார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் சூரி தனது மனசாட்சிப்படி எடுக்கும் அந்த முடிவு சிறப்புதான்.
தோழரை கே.கே.வை பின்பற்றி சென்ற பெருமாள் வாத்தியார் அதிகார வர்க்கத்தை எதிர்க்க வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்துவதுதான் சரியான வழி என தீர்மானித்து முடிவெடுக்கும் அந்த காட்சியை மேலும் அழுத்தமாக பதிவு செய்திருக்க வேண்டும்.
அதேபோல்,போலீஸாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தன்னிடம் உள்ள தோழர்களை இழக்கையில் மனம் மாறி ஆயுதத்தால் தீர்வு காண இயலாது என உடனே முடிவெடுக்கும் அந்த இடம் சற்று நெருடல்தான்.
கூலி உயர்வு கேட்டதற்காக வெளியூரிலிருந்து ஆட்களை இறக்குவதும் அவர்களை நோக்கி நாயகன் பேசும் காட்சிகள் எல்லாம் பல திரைப்படங்களில் பார்த்த காட்சிகள் என்பதால் நமக்கு எவ்வித தாக்கத்தையும் உண்டு பண்ணவில்லை.
மக்களுக்காக போராடிய தலைவனுக்கு மிகப்பெரிய துன்பவியல் சம்பவம் நடந்தேறிய பொழுது கான்ஸ்டேபிள் குமரேசனுக்கு ஏற்பட்ட அதே உணர்வு நமக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும்.
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் இரண்டு பாடல்கள் வெகுசிறப்பாக அமைந்து இருந்தன. பின்னணி இசையைப் பொறுத்த வரையில் பழைய இசைஞானி இளையராஜாவை தவறவிட்ட உணர்வே ஏற்பட்டது.
நாயகன், ரமணா போன்ற படங்களில் இவர்களின் இழப்பை நாம் உணர்ந்தோம். காரணம், அவர்களின் செயல்பாடுகளை காட்சிகளின் வழியே நம் உணர்வுகளை அழகாக தொட்டிருப்பார்கள். அந்த உணர்வு இந்தப் படத்தில் முழுமையாகயில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
இருந்தாலும், இந்த விடுதலை திரைப்படம் தமிழ் சினிமாவின் பெருமையைச் சொல்லும் திரைப்படங்களில் ஒன்று என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.









