விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ-9 சுரேஷ், இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே.சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார். இப்போது ‘தனிமுகம்’ என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டிருக்கிற ஸ்டுடியோ 9 சுரேஷ், ‘சலீம்’ முதல் அண்மையில் வெளியாகியுள்ள ‘தர்மதுரை’ போல சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.
‘தர்மதுரை’ திரைப்படம் அண்மையில் வெளியாகி 50 நாட்களைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது . இந்தப் படம் குடும்பத்துடன் மக்களை திரையரங்கிற்கு படையெடுக்க வைத்திருக்கிறது.
‘தர்மதுரை’ படத்தின் பாடல்களையும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். எந்த அளவுக்கு என்றால் விளக்கவே வியப்பூட்டும். ‘மக்கா கலங்குதப்பா’ பாடலுக்கு தாங்களே நடனமாடியும் குடும்பத்துடன் நடனமாடியும், குழுவாக நடனமாடியும் பலவாறாக யூ டியூபில் பதிவேற்றி அவற்றை லட்சணக்கணக்கான பார்வையாளர்களை பார்க்க வைத்துள்ளார்கள். இன்றும் பார்த்து வருகிறார்கள். இப்படி ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு ரசிக்கப்பட்டு வருகின்றன.
இப்படி ‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய பல ப்ரோமோ பாடல்கள் கலக்கி வருகின்றன. சாதாரண ஒரு சினிமா பாடல், இன்று புதிய பரிமாணத்தை அடைந்து மக்களை மகிழ்விக்கிறது என்பது காலமாற்றம் சாத்தியப்படுத்தியுள்ள காட்சியாகும்.
இப்படி இணையத்தில் வீடியோக்களை பதிவிட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தயாரிப்பாளர் ஸ்டுடியோ-9 சுரேஷ், அவர்களைப் பாராட்டவும் அங்கீகரிக்கவும் விரும்புகிறார்.
இணையத்தில் பாடல் வீடியோக்களை பதிவேற்றிய ஆர்வலர்களை தேர்வு செய்து, ‘தர்மதுரை’ படத்தின் 75-வது நாள் விழா மேடையில் திரைப் பிரபலங்கள் மத்தியில் அவர்களை அங்கீகரிக்கவும் பாராட்டவும், நடனத் திறமையுள்ளவர்களுக்கு விழா மேடையிலேயே ஆடவும் வாய்ப்பளிக்க எண்ணியுள்ளார். இதற்காக திறமையான ஆட்டக்காரர்கள் அந்தப் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தான் நடிக்கும் படங்கள் பற்றிப் சுரேஷ் பேசும்போது, ”என்னுடைய நடிப்பில் இப்போது தனிமுகம்’ என்கிற படம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை இயக்குபவர் சஜித். இவர், பிரபல மலையாள இயக்குநரான ஷாஜி கைலாஸிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
இது ஹீரோயிசக் கதையல்ல. இரு வேறு முகம் காட்டி, என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதை. கதாநாயகனாகவே நடிப்பது என்பது என் கொள்கையல்ல. பிற நாயகர்கள் படங்களில் நல்ல நடிப்பு வாய்ப்புள்ள கதைகளிலும் நடிப்பேன்.
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளேன். சரவண ஷக்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் கதை நாயகனாக நடிக்கிறேன். சீனு ராமசாமி இயக்கத்திலும் ஒரு படம் உருவாகவுள்ளது. இவை தவிர, புதிதாக சில படங்களும் இருக்கின்றன…” என்கிறார்.
வீடியோ ஆர்வலர்களே.. நடன மாமணிகளே.. உங்களது திறமையைக் காட்ட அரிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பரிசுக்கு முந்துங்கள்..! வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!