“பதிலுக்கு நாங்களும் பேசினால்..?” – கொதிக்கும் இயக்குநர் வெங்கட்பிரபு..

“பதிலுக்கு நாங்களும் பேசினால்..?” – கொதிக்கும் இயக்குநர் வெங்கட்பிரபு..

‘அஞ்சான்’ பிரச்சினை இன்னமும் முடிந்தபாடில்லை இணையத்தில். ஆகஸ்ட்-15 அன்று இணையத்தில் மூன்றுவித இடங்களிலும், நாலாவிதமான வார்த்தைகளையும் வைத்து அஞ்சானை கொத்தி எடுத்தார்கள் சிலர்..

ஏன்.. எதற்கு… என்ற காரணமே இல்லாமல் இவர்கள் செய்ததில் ‘அஞ்சான்’ படத்தை பார்த்த பின்பு “ஓ.. ஒரு தடவை பார்க்கலாமே…” என்று சொல்லக் கூடிய ரசிகர்களைகூட வர விடாமல் செய்துவிட்டது சிலரின் அந்த ஒரு நாள் அல்லப்பரை..

அப்போதுதான் முடிந்ததே என்று இப்போதும் நினைக்க முடியவி்லலை.. யாரோ ஒரு புண்ணியவான் சென்ற வருடம் இயக்குநர் லிங்குசாமி சன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றை கேட்டுவிட்டு அதில் லிங்குசாமி சொல்லியிருந்த இரண்டு வார்த்தைகளை போட்டு கேள்வி கேட்க துவங்க.. அது இன்றைக்கு முகநூலில் தனி பக்கம் ஆரம்பிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

“இதுவரைக்கும் கத்துகிட்ட மொத்த வித்தையையும் முழுசா இறக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன்…”

“நானே அப்படி டியூன் ஆகியிருக்கேன்…”

இந்த இரு வார்த்தைகளை வைத்து இயக்குநர் லிங்குசாமியை மீண்டும் குதறி எடுக்கிறார்கள் சிலர். வழக்கம்போல கண்மூடித்தனமான, முட்டாள்தனமான தாக்குதல்தான் இது என்றாலும், படிப்பவர்கள் மனதை பாதிப்பதை அவர்கள் உணரவில்லை..

ஆனால் வெங்கட்பிரபு உணர்ந்திருக்கிறார். இது பற்றி தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள வெங்கட்பிரபு இது போன்ற செயல்களை செய்பவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெங்கட் பிரபு தனது பதிவில், “நீங்கள் நினைப்பது போல, சினிமா இயக்குவது என்பது சாதாரண விஷயமில்லை. எங்களுக்கு எது சிறப்பாக வருகிறதோ.. அதைச் செய்கிறோம். ஆனால், சில நேரங்களில் அது எடுபடுகிறது, பல நேரங்களில் அது எடுபடாமல் போகிறது.

லிங்குசாமி சார் ஒரு சிறந்த இயக்குநர். ‘ஜி’ படத்தில் அவரோடு பணியாற்றியிருக்கிறேன். எந்த ஓர் இயக்குநரும் கடவுள் அல்ல. கடவுளே சில தப்புகளைச் செய்கிறார். தீர்ப்பு சொல்வதற்கு நாம் யார்…?

நீங்கள் சொல்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது. ஆனால், எதிலுமே அர்த்தமில்லை. உங்களைப் பொறுத்தவரை ஒரு படம் வெற்றியா இல்லையா என்பது மட்டும்தான். நீங்கள் நல்ல ரசிகர்களாக இருந்திருந்திருந்தால், ‘தங்க மீன்கள்’ ஒரு மகத்தான வெற்றிப் படமாகி இருக்குமே?

உங்களால், எங்களை கிண்டல் மட்டுமே செய்ய முடியும். பதிலுக்கு நாங்களும் உங்களைக் கலாய்க்க ஆரம்பித்தால்..? உங்களுக்காகத்தான் படம் இயக்குகிறோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், ஒரு நல்ல படத்தை ஏன் வெற்றி அடைய வைக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் வெங்கட்பிரபு.

நியாயமான கேள்விதான்.. ‘அஞ்சான்’ குப்பை, மொக்கை என்றவர்கள் ‘தங்க மீன்களை’ வாழ வைத்திருக்கலாமே..? ஏன் செய்யவில்லையாம்..?

தனி மனித விரோதத்துடன் சினிமாவையும் சேர்த்து வைத்து பாவிப்பது சமீப காலங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது எங்கே போய் முடியுமோ..?

Our Score