இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் ‘சூப்பர் குட்’ சுப்ரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வெள்ளி மலை’ படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார், சீமான், திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னுடைய முதல் படம் வந்தது போல எளிமையாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்த சுப்ரமணி என் மனதுக்கு நெருங்கிய நண்பர். ’பிசாசு’ உட்பட என்னுடைய பல படங்களில் நடித்திருக்கிறார். சுப்ரமணியனை கதாநாயகனாக்கி படமாக்க இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்…?
தயாரிப்பாளர் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் சினிமாவில் போட்டிருக்கிறார். அதனால், இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இன்றைய சினிமாக்களின் கதைக் களத்தை நான் கவனித்துதான் வருகிறேன். அத்திப் பூத்தாற்போல சில இயக்குநர்கள்தான் தாங்கள் வளர்ந்த, கண்ட, களத்தை கதையாக கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி வந்திருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் தான் கண்ட கனவை மெய்ப்படுத்தி இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
எந்த ஒருவன் எந்த ஒரு பொருளைப் படைக்கிறானோ அது மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பதோ அதுதான் சிறந்த பிராண்ட். அப்படிதான் சினிமாவும். அந்தக் கதை அவர்களுக்கு பயன்பட வேண்டும். திரையில் அவர்களுக்கு அது உதவ வேண்டும். அது போன்ற படமாகதான் இதைப் பார்க்கிறேன்.
இது போன்ற படங்களை தியேட்டரில் பார்க்க வேண்டும். ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்பது ரவுடித்தனம். பெரிய படங்கள், அதிகம் செலவழிக்கக் கூடிய படங்களைப் பார்க்கத்தான் மக்கள் இப்போது தியேட்டர்களுக்கு போகிறார்கள்.
நாம் ‘கடைசி விவசாயி’ படத்தைப் பலரும் பார்க்காமல் விட்டுவிட்டோம். சர்வதேச அங்கீகாரங்கள் பலதைப் பெற்றிருக்கிறது. பார்க்காத நாம் வெட்கித் தலை குனிய வேண்டும். அதைப்போல, இந்தப் படமும் நன்றாக இருந்தால் போய்ப் பார்த்து வெற்றி பெற செய்யுங்கள்.” என்றார்.
சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பாளரான சக்திவேலன் பேசும்போது, “இது எளிய மக்களுக்கான படம். நண்பர் விஜய் பல நல்ல கதைகளை வைத்திருப்பவர். இந்தப் படத்திற்கு தெய்வீகமான இசை தேவைப்படுகிறது என ரவிநந்தன் சாரை இசையமைப்பாளராக கொண்டு வந்திருக்கிறார்கள்.
மிஷ்கின் சார் சொன்னதுபோல, எளிமையான மனிதர்களைக் கொண்டு எடுக்கப்படும் கதைகள் குறைந்து வருகிறது. அந்த வரிசையில், நம் மண்ணின் கதைகளையும் எளிய மனிதர்களையும் மறந்து போன அவர்களின் கலாச்சாரத்தையும் இந்த ‘வெள்ளிமலை’ படம் பிரதிபலிக்கும்.
‘விஸ்வாசம்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற படங்களின் விநியோகஸ்தர் நான்தான். குடும்ப பார்வையாளர்களை மையமாகக் கொண்டு வர இருக்கும் ‘வாரிசு’ படத்திற்கு அதிக வசூல் இருக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் கணித்துள்ளனர். அதுபோல, நம் மண்ணின் தொன்மையை சொல்லும் இந்தப் படத்தையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்”. என்றார்.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, “இந்தப் படத்திற்காக இத்தனை திரையுலகப் பிரபலங்கள் கூடியிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இதில் கதாநாயகனாக நடித்திருக்கக் கூடிய சூப்பர் குட் சுப்ரமணி. அத்தனை வருடங்கள் அவர் சினிமாவில் போராடினார். அத்தனைக்கும் சேர்த்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அவரது வாழ்க்கையில் இந்தப் படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையப் போகிறது.
இந்தப் படத்தை தயாரிப்பாளர் பார்த்ததைவிட அதிக முறை நான்தான் பார்த்திருக்கிறேன். அதற்குக் காரணம் இதன் இயக்குநர் ஓம் விஜய். அவர் கடுமையான உழைப்பாளி. அவருக்குச் சரியான நேரத்தில் வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவரும் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “சூப்பர் குட் சுப்ரமணியத்துக்காகதான் நான் வந்தேன். சூப்பர் குட் மூலமாகதான் நானும் இயக்குநராக அறிமுகமானேன். சூப்பர் குட் என்றாலே விஸ்வாசம்தான்.
இந்தப் படத்தில் திண்டுக்கல் லியோனி அய்யா ஒரு பாடலும் பாடியிருக்கிறார். பல சினிமா படங்களின் பாடல்களை இவர் சாடியிருக்கிறார். என்னுடைய பாட்டை கிண்டல் செய்து பட்டிமன்றத்திலும் பேசியிருக்கிறார் லியோனி. இப்போது இவரே பாடல் எழுதி இருக்கிறார்.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை மலை என்றாலே வெற்றிதான். ‘வெள்ளிமலை’ படமும் இதில் சேரும். இந்தப் படத்தின் கதை நாட்டு மருத்துவர்கள், மருந்து அதைப் பற்றின கதையாக இருக்கும். நாட்டு மருத்துவம், விவசாயம் இதை அடுத்து தமிழ் அழிந்து வருகிறது. இதைத்தான் சீமானும் சொல்லி வருகிறார்.
தமிழ் பெற்றோருக்கு பிறந்தால் மட்டுமே தமிழனாகி விட முடியாது. தமிழ் பேசி, எழுதினால்தான் நீ தமிழன். தனியார் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாக்க வேண்டும். தமிழ் மொழி அழித்து விடாமல் காக்க வேண்டும். கொரோனாவில் நிறைய பேரைக் காப்பாற்றியது நாட்டு மருத்துவம்தான். ஆங்கில மருத்துவம் நம்மை அடிமைப்படுத்துகிறது. இதனாலேயே, ‘வெள்ளிமலை’ வெற்றியடைய வேண்டும்”. என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “இங்கு நான் வந்ததற்கு முக்கியக் காரணம் சூப்பர் குட் சுப்ரமணிதான். நான் சூப்பர் குட் பிலிம்ஸில் உதவி இயக்குநராகதான் உள்ளே நுழைந்தேன். அப்போதிருந்தே சுப்ரமணி அங்கு இருப்பார். என்னிடமும் நிறைய கதைகள் சொல்லி இருப்பார். அரைமணி நேரத்தில் ஐந்தாறு கதைகளை கமல் சாருக்கு அடுத்து சொல்லக் கூடியவர் இவர்தான். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக படங்களில் நடிக்க வந்திருக்கிறார். இப்போது படங்களில் அவர் ஸ்டில்லை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ‘வெள்ளிமலை’ தங்க மலையாக உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்”. என்றார்.
திண்டுக்கல் ஐ.லியோனி பேசும்போது, “’வெள்ளிமலை’ படத்தின் தயாரிப்பாளரின் வயதுக்கும், ஸ்டைலுக்கும் சூப்பர் குட் சுப்ரமணியை எப்படி கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எளிமையான இயக்குநர், கதாநாயகன், தயாரிப்பாளர் என அனைத்தும் அமைந்த படம் ‘வெள்ளிமலை’தான். இன்று நிகழ்விற்கு அழைத்திருக்கும் விருந்தினர்களும் எளிமை விரும்பிகள்தான்.
என்னை இந்தப் படத்தில் பின்னணிப் பாடகராக மாற்றிய ரகுநந்தன் சாருக்கும் நன்றி. இந்தப் பாடலை அரை மணி நேரத்தில் பாட வைத்தார். இந்தப் படம் தேசிய விருது பெறும் படமாக மாறட்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான் பேசும்போது, “கல்வி என்பது மானுட உரிமை. அதைக் கொடுக்க வேண்டியது அரசின் உரிமை. கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை. அறிவை வளர்க்கும் கல்வி நம் அனைவருக்கும் கிடைக்காமல் இருப்பது மாபெரும் அவலம்.
நம் தாய் மொழியை நாம்தான் பேச வேண்டும் என்ற உறுதி மொழியை ஏற்க வேண்டும். என் தம்பி, இயக்குநர் வினோத்திடம்கூட, ஹெச்.வினோத் என்று பெயரைப் போடக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன். ஒரு எழுத்தைக் கூட தமிழில் மாற்ற முடியாத தமிழன், எப்படி நாட்டை மாற்ற முடியும்..? உலகில் உள்ள எந்தவொரு மொழிகளைக் காட்டிலும் தனித்து இயங்கக் கூடிய ஒரே மொழி தமிழ் மொழிதான்.
அனைத்து மருத்துவத்தையும் மிஞ்சியது நம் இயற்கை மருத்துவம்தான். புற்று நோய், எய்ட்ஸ் போன்றவற்றிற்கு மருந்து இல்லை. அப்படி இருக்கும்போது கொரோனாவிற்கு மட்டும் மருந்து கண்டுபிடித்தார்கள் என்பதை எப்படி நம்பினீர்கள்..?
டெலிஃபோனை கிராஹாம்பெல் கண்டு பிடித்தபோது யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுபோல பல உதாரணங்கள் சொல்லலாம். எதையும் பழமை என்று ஒதுக்க முடியாது. அதுபோல, நாட்டு மருந்துகளையும் மக்கள் ஏற்பார்கள்..” என்றார்.














