முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக்காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார்.
16-05-1959-ம் ஆண்டு தென்னகமெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்னரே 10-05-1959-ம் நாளன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு களிப்புற்றனர். விழாவிற்கு தலைமை ஏற்றவர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சகோதரியும் நம் நாட்டின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் என்ற சிறப்பு பெற்ற திருமதி. விஜயலட்சுமி பண்டிட் ஆவார்.
1960-ம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை இந்தப் படத்திற்காக சிவாஜி கணேசன் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இரு பெரிய கண்டங்கள் உள்ளடக்கிய விழாவில் விருது வாங்கிய முதல் தமிழ்ப் படமாகவும், முதல் இந்தியப் படமாகவும், முதல ஆசியத் திரைப்படமாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன் திகழ்கிறது.
கெய்ரோவில் 1960-ம் ஆண்டு நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் கலந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவர் இந்தியா வந்தபோது பாரதப் பிரதமர் நேருவின் அனுமதி பெற்று, நடிகர் திலகம் சென்னையிலுள்ள சிறுவர்கள் திரையரங்கத்தில்(கலைவாணர் அரங்கம்) அதிபர் நாசரை வரவழைத்து மிகப் பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான நாசரை சிறப்பித்த பெருமை இந்தியத் திரைப்பட வரலாற்றில் நடிகர் திலகத்தையே சேரும்.
தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு 1970-ம் ஆண்டு அவர் தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாரில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச் சின்னமும் எழுப்பினார். 1999-ம் ஆண்டு இந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடமே ஒப்படைத்தார்.
தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.
இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு நாளை காலை சத்யம் திரையரங்கு வளாகத்தில் நடைபெறவுள்ளது. நடிகர் சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் ராம்குமார், நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றார். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.