full screen background image

வீரையன் – சினிமா விமர்சனம்

வீரையன் – சினிமா விமர்சனம்

ஃபாராசரா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளரான பரீத் இந்தப் படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நாயகனாக இனிகோ பிரபாகரும், நாயகியாக புதுமுகம் ஷைனியும் நடித்துள்ளனர்.

மேலும் ‘ஆடுகளம்’  நரேன், வேல ராமமூர்த்தி, ‘கயல்’ வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’  வசந்த்,  யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – S.N.அருணகிரி, ஒளிப்பதிவு – P.V.முருகேஷா, படத் தொகுப்பு – ராஜா முகமது, பாடல்கள்- யுகபாரதி, நடனம்- சரவண ராஜா, சண்டை காட்சி- ராக் பிரபு, கதை,  திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்: S. பரீத்.

படத்தின் கதை 1990-களில் நடப்பதாக உருவாக்கியிருக்கிறார்கள்.

பாசமிக்க அண்ணனான வீரையன் என்னும் ‘ஆடுகளம்’ நரேன், தனது தம்பியை கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார். ஆனால் அதே தம்பி குல தெய்வம் கோவில் கும்பிட்டுக்கு வந்தவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே நரேனின் மகனை ‘படிக்காத முட்டாள்..’, ‘உருப்படாமல் போகப் போகிறான்’ என்றெல்லாம் திட்டுகிறான்.

இதைக் கேட்டு கோபப்படும் நரேன், தனது மகனை தன் தம்பியைவிடவும் அதிகமாக படிக்க வைத்து ஆளாக்கி காட்டுவதாக சவால் விடுகிறார். இதற்கேற்றாற்போல் மகனின் படிப்புக்காக நிறைய அக்கறை எடுத்து செய்து வருகிறார் நரேன்.

நரேனின் மகனான வசந்த் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். அதே பள்ளியில் ஊர் பெரிய மனிதரும், கவுன்சிலருமான வேல ராமமூர்த்தியின் மகளான ஹேமாவும் படித்து வருகிறார். ஹேமா தன் வீட்டில் டிரைவராக இருக்கும் யூகித்தை காதலித்து வருகிறார்.

இந்த நேரத்தில் அதே ஊரில் அனாதைகளான சுடலை என்னும் இனிகோ பிரபாகர், ‘கயல்’ வின்சென்ட், ப்ரீத்திஷா என்னும் திருநங்கை ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். கூட்டாளிகள். சின்னச் சின்னத் திருட்டுக்களை செய்து ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு கோழியை திருடும்போது டிரைவர் யூகித்தின் நண்பர்களுடன் இனிகோ அண்ட் கோ-வுக்கு மோதல் ஏற்படுகிறது. அது தற்காலிகமாக முடிவுக்கு வந்து நின்றிருக்கிறது.

இந்த நேரத்தில் ஹேமாவும், யூகித்தும் ஊரைவிட்டு ஓடிப் போக முயல்கிறார்கள். ஆனால் விதியின் விளையாட்டில் அது முடியாமல் போகிறது. அதே நேரம் அக்கவுண்ட் நோட்டு வாங்கி வரவில்லையென்பதற்காக வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்படுகிறான் வசந்த்,

வீட்டிற்குச் செல்வதற்காக அவன் சாலையில் வரும்போது எதிர்பாராதவிதமாக சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஹேமாவுக்கு உதவி செய்யப் போகிறான். ஆனால் வழியில் பார்த்தவர்கள் வேறு விதமாக பற்ற வைக்க.. வசந்தும், ஹேமாவும் ஊரைவிட்டு ஓடிப் போகப் பார்த்தார்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

இதனால் ஆத்திரப்படும் வேல ராமமூர்த்தி பள்ளிக்கு வந்து சத்தம் போட்டுவிட்டு மகளை அழைத்துப் போகிறார். வசந்திடம் “உன்னுடைய அப்பாவை அழைச்சிட்டு வா…” என்று சொல்லி அவனை வெளியில் அனுப்புகிறார் தலைமை ஆசிரியர்.

அப்பாவிடம் சொன்னால் உயிரையே விட்டுவிடுவார் என்று நினைக்கும் வசந்த், அதைச் சொல்லாமல் மறைத்து தினம்தோறும் பள்ளிக்குச் செல்வதை போன்று கிளம்பி வந்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் மீண்டும் இனிகோ அண்ட் கோ-வின் கண்ணில்படுகிறார் வசந்த். இந்த நேரத்தில் இனிகோவை வசந்த் “அண்ணா” என்று அழைக்க.. இந்த ஒரு வார்த்தைக்காகவே வசந்தை மானசீக தம்பியாக ஏற்றுக் கொள்கிறார் இனிகோ.

வசந்தின் பிரச்சினையை அறியும் இனிகோ, தனது கூட்டாளியான ‘கயல்’ வின்சென்ட்டை வசந்தின் அப்பாவை போல செட்டப் செய்து அனுப்பி வைக்க.. தலைமை ஆசிரியரோ வசந்துக்கு டி.சி. கொடுத்து வெளியில் அனுப்புகிறார்.

இப்போது முற்றிலுமாக உடைந்து போகிறான் வசந்த். இப்போதும் நடந்தவைகளை தனது வீட்டுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறான் வசந்த். வசந்துக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்று நினைக்கும் இனிகோ, தாங்கள் கஷ்டப்பட்டு திருடிய பணத்தை வைத்து அவனை டூடோரியல் பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள்.

ஆனாலும் டி.சி. கொடுக்க வைத்தமைக்காக வேல ராமமூர்த்தி வீட்டுக்கே சென்று நியாயம் கேட்கிறார் இனிகோ. அப்போது அங்கே டிரைவராக இருக்கும் யூகித்தை பார்த்துவிடும் இனிகோ, அவன்தான் ஹேமாவை இழுத்துக் கொண்டு ஓட எத்தனித்தவன் என்கிற உண்மையை போட்டுடைக்கிறார்.

இதனால் மனமுடைந்த ஹேமா தூக்கில் தொங்கி உயிரைவிடுகிறாள். மகள் இறந்த அதிர்ச்சியால் பாதிக்கப்படும் வேல ராமமூர்த்தி, தனது மைத்துனர் மற்றும் அடியாட்களை வைத்து டிரைவர் யூகித்தை அடித்து, உதைக்கிறார்.

வேல ராம்மூர்த்தியின் ஆட்கள் தலையில் அடித்ததினால் தலையில் உள்காயம்பட்டு மன நோயாளியாகிறார் யூகித். ஹேமாவின் சாவுக்கு ஒட்டிய போஸ்டரின் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு நகர மறுக்கிறான் யூகித். இவனது நிலைமைக்கு தாங்களும் ஒரு காரணம் என்று நினைக்கும் இனிகோ அண்ட் கோ., யூகித்தைத் தூக்கிச் சென்று கொஞ்சம் அழகுபடுத்தி, ஆசுவாசமாக்கி உணவு கொடுத்து பாதுகாக்கிறார்கள்.

இந்த நேரத்தில் குடும்ப உறவுகளே இல்லாமல் தனிமையில் இருக்கும் ஹீரோயின் ஷைனியை ஒரு நாள் இரவில் பார்த்துவிடும் இனிகோ, மது போதையில் அவளை திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்ல.. இனிகோவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் ஷைனி. பின்னாட்களில் இனிகோவை விரட்டி வந்து தன்னைக் காதலிக்க வைக்கிறார்.

ஒரு பக்கம் தன் மகன் பிளஸ் டூவில் நிறைய மதிப்பெண்கள் எடுத்து நல்ல நிலைமைக்கு வருவான் என்று எதிர்பார்க்கும் அப்பா. இன்னொரு பக்கம் அப்பாவுக்குத் தெரியாமல் டுடோரியலில் படித்து வரும் மகன். காதலி இறந்து போன துக்கத்தில் அவளது போஸ்டர் பக்கத்திலேயே காலம் கழித்துவரும் மன நோயாளியான காதலன்.. தனது காதலியை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கும் இனிகோ.. இனிகோ பிரிந்துவிட்டால் அடுத்து நாம் மட்டும் என்ன செய்வது என்கிற கவலையில் இருக்கும் இனிகோவின் கூட்டாளிகள் இருவர்..!

இப்படி திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கும் இவர்களது வாழ்க்கையில், அடுத்து நடப்பது என்ன என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

குல தெய்வ வழிபாடு என்பது அனைத்து சாதி தமிழ் மக்களிடையேயும் இருக்கிறது. அதிலிருந்து இந்தக் கதையும் தொடங்குவதை போல காட்சியமைத்திருப்பது சிறப்பு.

குல தெய்வக் கோவிலில் ஒரு முடிவெடுத்தால் அது நிச்சயமாக நடந்தேறும்.. சாதித்துக் காட்ட முடியும் என்கிற சிறு தெய்வ வழிபாட்டு முறையை இத்திரைப்படம் முன் நிறுத்தியிருக்கிறது.

அனைத்து நடிகர்களிலும் வீரையனாக நடித்திருக்கும் ‘ஆடுகளம்’ நரேன்தான் தனியாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

அவருடைய உடல் மொழியே தனித்த அடையாளமாகத் தெரிகிறது. இப்படியொரு அப்பனாக இருக்க அவர் என்ன கஷ்டப்படுகிறார் என்பதை பிள்ளையை அழைத்து வந்து காட்டுவதும், புத்தகக் கடையில் கடன் கேட்க வந்து நொடிப் பொழுதில் அவமானப்பட்டு நிற்பதும், நமது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

அண்டை, அசலார், தெரிந்தவர், நெருங்கியவர், உடன் பிறந்த தம்பி அனைவரிடத்திலும் தன் மகனைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிவிட்டு கடைசியாக அது உடைந்து போய் நொக்குருகிப் போகும் காட்சியில் உருக்கத்தைக் காட்டியிருக்கிறார் நரேன். பிரமாதம் ஸாரே..!

‘ஆரண்ய காண்ட’த்தில் சிறுவனாக நடித்திருந்த வசந்த் இதில் கொஞ்சம் பெரியவனாக பிரமோஷன் வாங்கியிருக்கிறார். சாந்தமான கேரக்டர் ஸ்கெட்ச். அதற்கேற்றாற்போல் வசனங்களை பேசி, முக பாவனைகளைக் காட்டி ‘ஐயோ பாவம்’ என்கிற உணர்வை பார்வையாளர்களுக்கு வரவழைத்திருக்கிறார்.

சுடலை என்னும் கேரக்டரில் இனிகோ பிரபாகர் ரொம்பக் கஷ்டப்படாமல் நடித்திருக்கிறார். வெகு இயல்பான கேரக்டர். அதற்கேற்றாற் போன்ற தோற்றப் பொலிவோடு இருப்பதால் ‘முட்டாள் ரவுடி’ என்பதை ஏற்க முடிகிறது. ‘அண்ணன்’ என்கிற ஒரு வார்த்தையைக் கேட்டவுடன் அவருக்குள் ஏற்படும் மாற்றத்தை அவர் சொல்லும் இடமும், காட்டும் முகபாவனையும் அசலானது. இதேபோல் இவரது கூட்டணியில் திருநங்கையாக நடித்திருக்கும் பிரித்தீஷாவின் நடிப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

கதாநாயகி ஷைனியின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் தவறிருந்தாலும் நடிப்பில் குறைவில்லை. பாடல் காட்சிகளிலேயே கதையை நகர்த்தியிருப்பதால் அதற்கேற்றாற்போல் நடித்திருக்கிறார் ஷைனி. கொஞ்சம் சினிமாட்டிக் அழகைக் காட்டியிருக்கிறார். நன்று..! 

இனிகோவின் கூட்டாளியான ‘கயல்’ வின்சென்ட், நரேனின் அம்மா, தம்பி, மனைவி, பக்கத்து வீட்டு மாணவி, ‘ஒய்ஜா’ முறையில் பேய்களிடம் பேச வைக்கும் ஒச்சாத் தேவர், தனது மகளுக்காக உருகும் வேல ராமமூர்த்தி, இரண்டு காட்சிகள் என்றாலும் மெளனத்தாலேயே பேச வைக்கும் அவருடைய மைத்துனர், மன நோயாளியான டிரைவர் யூகித், சில காட்சிகளே ஆனாலும் மனதில் நிற்கும் ஹேமா என்று பலரும் இந்தப் படத்தில் சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

படத்தில் வரும் அனைத்துக் கேரக்டர்களும் ஒருவருக்கொருவர் இணையும் காட்சியமைப்பு கச்சிதமாக தொகுக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதையில் எந்தவித நெருடலும் இல்லாமல் இருக்கிறது இவர்களது பிணைப்பு.

முழுக்க, முழுக்க தஞ்சாவூர் பக்கத்திலேயே படமாக்கியிருக்கிறார்கள். தஞ்சையைச் சுற்றியிருக்கும் தற்போது அழிவின் நிலையில் இருக்கும் ராஜா காலத்து கட்டிடங்களிலேயே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். அரச குடும்பத்தினர் வாழ்ந்து ஓய்ந்த இடங்களில் இப்போதைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டும்விதமாக அதனை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஆவிகளுடன் பேச ‘ஆவி அமுதா’ பாணியில் மன ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி பேசாமல், ‘ஓய்ஜா’ போர்டு முறையில் பேச வைக்கும் ஒரு வித்தையை இந்தப் படத்தில் மிக அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இந்தக் காட்சியும் இதனையொட்டி அடுத்தடுத்து திரைக்கதை நகர்ந்து தொடர்புகளுக்கு முடிச்சு போட்டுவிடுவதும் இயக்குநரின் திறமைக்கு ஒரு சான்று..!

முருகேஷாவின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகளில்தான் கேமிராவின் உழைப்பு தெரிகிறது. அதிலும் ஷைனியின் வீடு இருக்கும் பகுதியைக் காட்டும்போதுதான் ஒளிப்பதிவாளரின் திறமை புரிகிறது.

இனிகோ அண்ட் கோ தப்பித்து ஓடும் காட்சியிலும், காதலர்கள் தப்பித்து ஓடி, கடைசியாக மாட்டிக் கொண்டு அடி வாங்கும் காட்சியிலும் கேமிராவின் உழைப்புக்கு ஒரு சல்யூட்..!

இசையமைப்பாளர் அருணகிரி இதற்கு முன்பு நல்ல நல்ல பாடல்களைக் கொடுத்தவர்தான். ஆனால் இந்தப் படத்தில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார். பாடல்கள் காதில் விழுந்தாலும், இசை ரசிப்பதுபோல இல்லை என்பதுதான் உண்மை.

படத்தில் நிறைய காட்சிகளை சுருக்கியிருக்க வேண்டும். இனிகோ அண்ட் கோ, கோழியைத் தூக்கிக் கொண்டு ஓடும் காட்சியை அத்தனை நீளத்திற்கு படமாக்கியிருந்தாலும், படத் தொகுப்பில் பாதியாக குறைத்திருக்கலாம். இதேபோல் ஹேமா, டிரைவர் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும், ஷைனி-இனிகோ காதல் காட்சிகளிலும் கொஞ்சம் நறுக்கியிருந்தால்கூட படத்திற்கு ஒரு கிரிப் கிடைத்திருக்கும்.

பக்கத்து வீட்டில் அதே பள்ளியில் படிக்கும் பெண்ணை வைத்துக் கொண்டு பள்ளிக்கே போகாமல் இருப்பதை வசந்த் எப்படி செய்திருக்க முடியும்..?

ஆறு மாத காலமாக பையனை அப்பா கண்காணிக்காமலா இருந்திருப்பார்..? இல்லை.. வசந்தே அப்பாவிடம் இதைச் சொல்லாமல் இருப்பது சாத்தியமா என்பது பற்றியெல்லாம் இயக்குநர் சற்று யோசித்திருக்க வேண்டும்.

பார்த்தவுடன்.. அதிலும் நள்ளிரவு நேரத்தில் தன் வீட்டு வாசலில் குடி போதையில் படுத்திருந்தவன்.. குடியால் உளறுவதையெல்லாம் உண்மை என்று நம்பி நாயகி ஷைனி அவனை சட்டென்று அடுத்த நொடியிலேயே காதலிக்கத் துவங்குவதெல்லாம் ரொம்பவே சினிமாட்டிக் காதல் இயக்குநரே..!

கிளைமாக்ஸ் காட்சி இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்ததுதான். ஆனால் அதனை படமாக்கியிருக்கும்விதம் அருமைதான். ஆனால் அந்தச் சோக நிகழ்வு ரசிகர்களின் மனதில் நிற்கவில்லை என்பதும் பெரும் சோகம். இது சரியாக இருந்திருந்தால், இந்நேரம் இந்தப் படம் ‘மெளத் டாக்’ எனப்படும் பேச்சிலேயே பிரபலமாகியிருக்கும்.

இந்தப் படத்தின் மிகப் பெரிய பலவீனமே, படம் பற்றிய தெளிவான ஒரு கருத்தை வெளியில் சொல்ல முடியாத வகையில் படத்தை உருவாக்கியிருப்பதுதான்.

“பிரமாதமா இருக்கு” என்றும் சொல்ல முடியவில்லை. “இல்லை…” என்றும் சொல்ல இயலவில்லை. இப்படியொரு நிலைமை எந்தவொரு சினிமா விமர்சகனுக்கும் வந்திருக்கக் கூடாதுதான். ஆனால் இந்தப் படத்தினால் வந்திருக்கிறது…!

திரைக்கதையை இன்னும் அழகாக செப்பனிட்டிருந்தால் நிஜமாகவே ‘வீரையன்’ என்னும் அந்தக் குல தெய்வத்தை வணங்கியது போலிருந்திருக்கும்..!

Our Score