full screen background image

வீராயி மக்கள் – சினிமா விமர்சனம்

வீராயி மக்கள் – சினிமா விமர்சனம்

ஏவைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என்.சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம்தான் இந்த வீராயி மக்கள்’.

இப்படத்தில் வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்திகுமாரி, பாண்டியம்மாள், ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கு.சீனிவாசன், இசை – தீபன் சக்கரவர்த்தி, படத் தொகுப்புமுகன்வேல், பாடல்கள்நாகராஜ் கருப்பையா, மதுரகவி, எழுத்து, இயக்கம்நாகராஜ் கருப்பையா.

தமிழ்ச் சினிமாவில் சமீப காலமாக குடும்பக் கதைகள் வரவில்லையே.. அடிதடி, வெட்டுக் குத்துப் படங்களாக வருகிறதே என்ற கவலையில் இருக்கும் குடும்பப் பட ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் வந்திருக்கும் படம்தான் இந்த ‘வீராயி மக்கள்’..!

குடும்பங்கள் பிரியக் கூடாது. அடுத்தடுத்தத் தலைமுறைகளும் ஒருவருக்கொருவர் உறவு கொண்டு, அன்பு கொண்டு, நேசித்து ஒரே குடும்பமாய் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து வந்துள்ளது இந்த ‘வீராயி மக்கள்’ திரைப்படம்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயிருக்கும் தீயத்தூர் கிராமம்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.  

ஒரே குடும்பத்தில் உடன் பிறந்த அண்ணன், தம்பிகளாக பிறந்து வளர்ந்த வேல ராமமூர்த்தியும், மாரிமுத்துவும் அவரவர் திருமணம், குடும்பம், குழந்தை என்றான பின்பு சந்தர்ப்ப சூழலால் பிரிகின்றனர்.

ஒரே தெருவில், எதிரெதிர் வீட்டில் இருந்தாலும் இரு குடும்பத்தாருக்கும் இடையில் நீறு பூத்த நெருப்பாக பகையுணர்வு வளர்ந்து கொண்டே வந்துள்ளதால் இப்போதுவரையிலும் தினமும் ஏதாவது ஒரு சண்டை, வாக்குவாதம், கை கலப்பு என்று இரு தரப்புக்கும் இடையில் நடந்து கொண்டேயிருக்கிறது.

இவர்களின் கடைசி தம்பியும் காதல் திருமணம் செய்த ஒரே குற்றத்திற்காக வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு சென்னையில் தனித்து வாழ்கிறார். இவர்களுடன் பிறந்த ஒரே தங்கையான தீபா ஷங்கரும் பக்கத்து ஊரில் வாழ்க்கைப்பட்டு போய் இப்போது யாருக்குமே பிடிக்காத தங்கையாக அந்நியப்பட்டு நிற்கிறார்.

அதே கிராமத்தில் 4 குழந்தைகளுடன் தவிக்கவிட்டுவிட்டு கணவர் மறைந்தவுடன் இந்த நால்வரையும் வளர்த்து ஆளாக்கி பெரியவர்களாக்கி, திருமணம் செய்து வைத்து பேரப் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு, அதன் பின்பு இவர்களின் மோதலை நேருக்கு நேராய்ப் பார்த்து, அந்த வேதனையிலேயே உயிரை விட்டிருக்கிறார் இவர்களின் தாயான வீராயி.

தற்போது இந்தக் குடும்பத்தின் பேரப் பிள்ளைகளில் ஒருவரும், வேல ராமமூர்த்தியின் இரண்டாவது மகனுமான படத்தின் ஹீரோவுமான சுரேஷ் நந்தா, இப்படி சண்டை கோழியாக தனித்தனியாக பிரிந்து வாழும் தன் குடும்பத்தைச் சேர்த்து வைக்க பெரும் முயற்சியெடுக்கிறார். அவரது அந்த முயற்சி வெற்றி பெற்றதா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘வீராயி மக்கள்’ படத்தின் சுவையான திரைக்கதை.

படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் நந்தா கதையின் நாயகனாக நடித்துள்ளார். ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல், சீரியஸ்தனம் இல்லாமல் மென்மையான ஹீரோவாக, வசனத்தைக்கூட அதிகம் கோபப்படாமலேயே பேசி நடித்திருக்கிறார்.

தன்னுடைய அத்தையை முதன்முறையாகச் சந்திக்கும்போதும், அது பற்றித் தன் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும்போது மிக இயல்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். காதல் காட்சிகளில்கூட இயல்பு மாறாமல் தனக்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்திருக்கிறார்.

படத்திற்கு டர்னிங் பாயிண்ட்டான ஒரேயொரு சண்டை காட்சியிலும் சிறப்பாக நடித்து கதையை நகர்த்தியிருக்கிறார். பாராட்டுக்கள். ஆனால் இது மட்டுமே ஒரு ஹீரோவாக தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்து நிற்க உதவாது. தனக்கென்று ஒரு பாணியை வரவழைத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தின் மூத்த அண்ணனாக வேல ராம்மூர்த்தி வழக்கம்போல அதே கம்பீரம், மிடுக்கு, கோபக்கார பார்வையுடன் படம் நெடுகிலும் வலம் வந்து தன் கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

டீக்கடையில் அமர்ந்திருக்கும்போது தங்கை வந்து பேசும்போது நிலை கொள்ளாமல் தவிப்பதும், பஞ்சாயத்தில் அவமானத்தை உணர்வதும், தாயின் இறுதிச் சடங்கின்போது தங்கை, தம்பி தலை முழுகுவதாகச் சொல்லி சீறும்போதும் அந்தக் கதாப்பாத்திரமாகவே மாறியிருக்கிறார். அசத்தலான நடிப்புதான்.

தம்பியாக, மனைவியின் ஊதுகுழலாக நடித்திருக்கும் மாரிமுத்துவின் நடிப்பும் படத்திற்குக் கிடைத்த ‘ஜாக்பாட்’ என்றே சொல்லலாம். இறுதியில் மரணத்தைத் தொட்டுவிட்டு வந்த நிலையில் உண்மையை அறிந்து, தனது அம்மாவின் சமாதியில் குமுறி, குமுறி அழுகும்போது நமது பரிதாபத்தை சம்பாதித்துவிட்டார். மாரிமுத்துவின் மரணம் தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதை இந்தப் படத்தின் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ளலாம்.

அத்தையாக நடித்திருக்கும் தீபா ஷங்கரின் நடிப்பு இந்தப் படத்தில் வேற லெவல்தான். அப்படியே கிராமத்து பெண்மணியாக, குடும்பத் தலைவியாக.. பிறந்த வீட்டையும் விட்டுக் கொடுக்காமல், வீட்டுக்காரரையும் சமாளித்துப் பேசும் அந்தக் காட்சியில் இந்த நாட்டின் பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் தீபா.

அம்மாவின் இறுதிச் சடங்கில் கதறி அழும்போதும், தன்னிடம் பேசும்படி தன் அண்ணனிடம் கெஞ்சும் காட்சியிலும் நம் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துவிட்டார் தீபா. பாராட்டுக்கள்.

இந்தக் குடும்பத்தின் அம்மாவாக நடித்திருக்கும் பாண்டியம்மாளின் நடிப்பு மில்லி மீட்டர், சென்டிமீட்டர் கணக்கில்கூட வழுவாமல் ஒரு தாயை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். மருமகள் செந்திகுமாரியுடன் பார்த்து, பார்த்துப் பேசும்போதும், பஞ்சாயத்துவரைக்கும் வீட்டு விவகாரம் வந்துவிட்டதே என்றெண்ணி மருகும்போதும் கண்களை குளமாக்குகிறது இவரது நடிப்பு.

நாயகியாக நடித்திருக்கும் நந்தனா சிறிய பெண்ணாக இருந்தாலும் களையான முகத்தினாலும், கவர்ச்சிகரமான சிரிப்பினாலும் அனைவரையும் கவர்கிறார். காதல் உணர்வைவிட யதார்த்தமாக குடும்பத்தின் நிலைமையை உணர்ந்து அவர் பேசும் பேச்சுக்கள் பாராட்டக் கூடியவை.

படத்தில் இருக்கும் ஒரேயொரு வில்லன் / வில்லியாக நடித்திருக்கும் செந்திகுமாரியின் வாய்ப் பேச்சுதான் படத்தின் கதையைச் சொல்லும் புத்தகம். திரைக்கதையை நகர்த்த அவ்வப்போது செந்தி மூச்சுவிடாமல் பேசும் எதிர் பேச்சுக்களும், வசவுகளும், சண்டை காட்சிகளும் படு ஜோர். இவருடைய கதாப்பாத்திரத்திலிருந்து இனிமேல் தமிழ் சீரியல்கள் சிலவைகள் பிறக்க வாய்ப்புண்டு என்றே சொல்லலாம்.

கிராமத்துக் கதை என்பதால் இசையில் பிறந்திருக்கும் பாடல்களும் அந்த மண் மணம் மாறாமல் அசத்தலாக ஒலிக்கின்றன. காதல் பாடலும், சோகப் பாடலும் நம்மைத் தூண்டிவிடும் அளவுக்கு சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

முழுக்க, முழுக்க கிராமத்து அழகையும், வீடுகளையும், வயல் வரப்புகளையும், கிராமத்து எளிய மனிதர்களையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நாகராஜ் கருப்பையா. பஞ்சம் வந்த காலத்தை பதிவு செய்திருக்கும்விதமும் நம்மைக் கவர்கிறது.

படத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை சஸ்பென்ஸூடன் கடைசிவரையிலும் கொண்டு போயிருப்பது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது. இத்தனை கோபத்துடன் உடைந்துபோன அந்தக் குடும்பம் சேரும் கதையை இன்னமும் கொஞ்சமும் உண்மைத்தனமாக, யதார்த்தமாகக் காட்டியிருக்கலாம்.

மாரிமுத்தவின் மனம் மாறுதல் அவரது உடல் நலம் மற்றும் யார் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியது என்பதையெல்லாம் வசனத்தின் மூலமாகச் சொல்லி குடும்பம் இணைய வேண்டிய அவசியத்தைச் சொல்லியிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

படத்தில் இருக்கும் ஒரேயொரு நெருடல்.. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அல்லது படிப்பை முடித்துவிட்ட 18 வயது நாயகிக்கு உடனடியாகத் திருமணம் செய்து வைப்பதுதான்.

இந்தத் திருமணத்தால் குடும்பங்கள் சேர்ந்ததால் நமக்கும் சந்தோஷம்தான். ஆனால் அதேசமயம், பெண்களுக்கு பட்டப் படிப்பும் மிக முக்கியம் என்பதை வசனத்தின் மூலமாய் சொல்லி.. “3 வருஷம் மாப்பிள்ளை காத்திருப்பாப்புல…” என்று சொல்லி படத்தை முடித்திருந்தால் இன்னும் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

“இருப்பது ஒரு பிறவி. இந்தப் பிறவியில் நாம் ஒரு குடும்பமாய் பிறந்துவிட்டோம். அடுத்தப் பிறவியில் யார், யார் என்னவாய்.. எங்கே பிறப்போம் என்று யாருக்குத் தெரியும்..? இருக்கும்வரையிலும் ஒற்றுமையாய் இருந்து நம் பிள்ளைகளுக்குத் தோள் கொடுப்போம். அவர்களுக்கு உறுதுணையாய் இருப்போம்..” என்ற உலகம் முழுமைக்குமான ஒரு உண்மைக் கருத்தை முன் வைத்திருக்கும் இந்தப் படம் தியேட்டரில் குடும்பம், குடும்பமாய் பார்க்க வேண்டிய திரைப்படம்.

மிஸ் பண்ணிராதீங்க..!

வீராயி மக்கள் – குடும்பங்களை ஒன்று சேர்..!

RATING : 4 / 5

Our Score