சென்ற ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு சென்ற ஆண்டுக்கான சிறந்த வணிகப் படத்திற்கான பி.நாகிரெட்டி நினைவு விருது வழங்கப்பட்டது.
மறைந்த திரையுலக ஜாம்பவானும், விஜயா-வாஹினி ஸ்டூடியோவின் அதிபருமான திரு.நாகிரெட்டியின் பெயரில் ஒரு அறக்கட்டளை அமைத்து வருடந்தோறும் சிறந்த மக்கள் விரும்பிய படத்திற்கு விருது கொடுத்து வருகிறார்கள்.
சென்ற ஆண்டு ‘கும்கி’ படத்திற்கு இந்த விருது கிடைத்திருந்தது. இப்போது எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்து, பொன்ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு விருது கிடைத்தது. பரிசு கோப்பையுடன் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் இந்த விருதுக்கு உண்டு.
இதற்கான விழா நேற்று மாலை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், நடிகர் சிவக்குமார், நடிகை கே.ஆர்.விஜயா, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பழம்பெரும் வசனகர்த்தா வியட்நாம் வீடு சுந்தரம், இயக்குநர் பொன்ராம், தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக லஷ்மண்ஸ்ருதி குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கு தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். நடிகை கே.ஆர்.விஜயாவும், நடிகர் சிவக்குமாரும் இணைந்து பரிசுக்கான காசோலையை வழங்கினார்கள்..!
விழாவில் ஏவி.எம்.சரவணன், நடிகர் சிவக்குமார், நடிகை கே.ஆர்.விஜயா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
நடிகர் சிவக்குமார் பேசும்போது, “சிறுவயதில் நாலரை மணிக்கு எழுந்து மாட்டுத் தொழுவத்தில் உள்ள மாடுகளை இடம் மாற்றிக் கட்டி சாணி அள்ளும் வேலை செய்த நிலையில் இருந்து முன்னேறி, திரைத்துறையில் மாபெரும் சாதனைகள் புரிந்தவர் நாகி ரெட்டியார். நானும் அப்படி ஒரு வாழ்க்கையை ஆரம்பத்தில் வாழ்ந்தவன்தான்.
ஆரம்ப காலத்தில் கோவையில் எம்ஜிஆருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சினிமா எடுக்க ஆசைப்பட்ட தேவர் தனது ஊரில் பலரிடமும் ஆயிரம் ஐநூறு என்று காசு வாங்கி ஒரு லட்ச ரூபாய் திரட்டி, நேராக வந்து நாகிரெட்டியாரை பார்த்து ‘இந்தாங்க. இதை வச்சு ஒரு படம் தயாரிக்க போறேன். மேற்கொண்டு காசுன்னு எதுவும் கேட்கக் கூடாது. நீங்கதான் எல்லாம் பாத்துக்கணும்’ என்று கொடுக்க, அதன்படியே தேவரின் தயாரிப்பில் வந்த படம்தான் ‘தாய்க்குப் பின் தாரம்’. படம் சூப்பர் ஹிட்.
பிறகு எம்ஜிஆருக்கும் தேவருக்கும் மனஸ்தாபம் வந்து பிரிந்து தேவர் எடுத்த பல படங்கள் தோற்றுப் போக, எம்ஜிஆர் நாடகத்தில் நடித்தபோது கால் உடைந்து அவருக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டபோது இருவரும் மீண்டும் சேர்வதற்கும் காரணம் நாகிரெட்டிதான். அதன் பிறகு எம்ஜிஆரும் தேவரும் இணைந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கினார்கள். இப்படி தயாரிப்பாளரையே உருவாக்கிய தயாரிப்பாளர் நாகி ரெட்டி ” என்றார்.
தொடர்ந்து பேச வந்தார் ஏவி.எம். சரவணன். ”சிவக்குமார் பேசி முடிச்ச பின்னாடி எங்களை பேச சொன்னா என்ன பேசுறது..?” என்று கிண்டலுடனேயே தனது பேச்சைத் துவக்கினார். “எங்கள் தந்தையார் இறந்த பிறகு நாங்கள் தயாரித்த ஒரு தெலுங்குப் படத்துக்கு தணிக்கையில் பிரச்னை வந்தது. ஏ சர்டிபிகேட்டுதான் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. நாங்க அதை எதிர்த்தோம். உடனேயே ரீவைஸிங் கமிட்டிக்கு அனுப்பிட்டாங்க. பட ரிலீஸுக்கு கொஞ்ச நாள்தான் இருந்துச்சு.. படத்தை நாங்கள் வெளியிட முடியாத நிலைமை. ஆந்திரால இருந்து எங்களுக்கு போன் மேல போன். அந்த ஊர்த் தியேட்டர்காரங்க ‘நாங்க வேற படம் ரிலீஸ் பண்ணிக்கவா?’ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.
சென்சார் போர்டின் ரீவைஸிங் கமிட்டில நாகிரெட்டியாரும் ஒரு மெம்பர். அப்போ நாகி ரெட்டியாரின் மூத்த மகன் இறந்து நான்கு நாட்களே ஆன நிலையில் அந்த துக்கத்தில் அவர் இருந்தார். எனவே நாங்கள் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால் ‘ஏவி.எம். படம் சென்சார் ஆச்சா?’ என்று அவரே விசாரித்து, ஆகவில்லை என்று தெரிந்ததும் அவரே வந்து படத்தை பார்த்து, பிரச்னையை முடித்துக் கொடுத்தார். நான் நன்றி சொன்னபோது ‘நீயும் என் மகன் மாதிரிதான்’ என்று அன்புடன் கூறினர்.
அதே போல எங்கள் வீட்டில் ஒரு கல்யாண நிகழ்ச்சியின்போது சாப்பாட்டுப் பந்தியில் சாப்பிட்ட இலையை எடுப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டபோது, அவரே தன் கையால் அந்த இலைகளை எடுக்க, அதைப் பார்த்த எல்லோரும் அவற்றை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வளவு எளிய ஆனால் மிக உயர்ந்த மனிதர் நாகி ரெட்டியார்…” என்றார் சரவணன்.
பரிசு பெற்றவர்கள் சார்பில் தயாரிப்பாளர் மதனும் படத்தின் இயக்குநர் பொன்ராமும் நன்றி தெரிவித்தார்கள்.