சர்ச்சை நாயகனாகவே வலம் வரும் பிரபல இயக்குநர் ராம்கோபால்வர்மா அடுத்து இயக்கி வரும் கசமுசா படமான ‘ஸ்ரீதேவி’ என்ற டைட்டிலை மாற்ற முடியாது என்று நடிகை ஸ்ரீதேவிக்கு பதிலளித்துள்ளார்.
சென்ற மாதம்தான் ‘ஐஸ்கிரீம்-2’ என்ற கில்மா படத்தை எடுத்து ரிலீஸ் செய்த ராம்கோபால்வர்மா அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் ஒரு படத்தில் ‘வல்லினம்’ படத்தில் நடித்த மிருதுளாவை உரித்த கோழியாக்கி கவர்ச்சிக் கடலில் மிதக்கவிட்டுள்ளார்.
இன்னொரு படம் அவருடைய பால்ய கால வயதில் அவருக்குள் ஏற்பட்டிருந்த ஒரு இனக்கவர்ச்சியை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். இதற்கு முதலில் ‘சாவித்ரி’ என்று பெயர் வைத்திருந்தார். இந்தப் படத்தின் போஸ்டரை பார்த்தவுடன் கொதித்தெழுந்த ஆந்திர மகிளா சபாவை சேர்ந்த மகளிரணியினர் வர்மாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க சட்டென்று பெயரை மட்டும் ‘ஸ்ரீதேவி’ என்று மாற்றிவிட்டார்.
ஏற்கெனவே நடிகை ஸ்ரீதேவி மீது தீராத காதல் கொண்டவர் இந்த வர்மா. நடிகை ஸ்ரீதேவிதான் தனது வாலிபப் பருவத்து காதலி என்பதைக்கூட வெளிப்படையாகச் சொன்னவர். நடிகை ஸ்ரீதேவிக்கும் மிக நெருங்கிய நண்பர்தான். இந்தத் தகவல் நடிகை ஸ்ரீதேவியின் காதுகளுக்கு போக அவரும் டென்ஷனாகிவிட்டார். படத்தின் போஸ்டர்களை பார்த்து சூடாகி வர்மாவு்ககு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.
“தன்னுடைய பெயரை இந்தப் படத்துக்கு வைக்கக் கூடாது. வைத்தால் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்…” என்று அந்த நோட்டீஸில் சொல்லியிருந்தார் நடிகை ஸ்ரீதேவி.
இதற்கு வர்மா இப்போது பதில் சொல்லியிருக்கிறார். “எக்காரணம் கொண்டும் ஸ்ரீதேவி என்ற பெயர் மாற்றப்பட மாட்டாது. சட்டப்படி எந்த வழக்கையும் சந்திக்கவும் நான் தயார்” என்று சொல்லியிருக்கிறார் வர்மா.
மேலும் இது பற்றி கூறியிருக்கும் வர்மா, “இந்தப் படத்தில் உள்ள கேரக்டர்களுக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படத்தில் ஸ்ரீதேவியாக நடித்திருக்கும் நடிகையின் வயதிற்கும், ஒரிஜினல் ஸ்ரீதேவியின் வயதிற்கும் பெரிய இடைவெளி உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஆசிரியை மற்றும் மாணவர் ஆகிய இரு கதாபாத்திரங்களும் தன்னையும் நடிகை ஸ்ரீதேவியையும் ஒத்திருக்காது. அந்தச் சிறுவன் ஒரு இயக்குனராகவோ, அல்லது அந்தப் பெண்மணி ஒரு நடிகையாகவோ இந்தக் கதையில் வரவில்லை…” என்று கூறியுள்ளார்.
“நடிகை ஸ்ரீதேவியை யாரோ தூண்டிவிட்டுள்ளனர். உள்நோக்கத்துடன் செயல்படும் அவர்களின் பேச்சைக் கேட்டு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நான் சந்தேகப்படுகிறேன். எக்காரணம் கொண்டும் நடிகை ஸ்ரீதேவியின் புகழுக்குக் களங்கம் வரும் வகையில் செயல்படமாட்டேன்.. அதை இந்தப் படம் எடுத்துக் காட்டும்..” என்றும் கூறியுள்ளார் ராம்கோபால் வர்மா.
‘ஸ்ரீதேவி’ என்பதே ஒரு பொதுவான பெயர்தான்.. இதற்காகவெல்லாம் வழக்கு போட முடியாது என்பது நடிகை ஸ்ரீதேவிக்கு தெரியாதா..?