‘மாநாடு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷிணி பிரகாஷ் நடிக்கிறார். நாயகி ரித்தா மற்றொரு நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ரவிமரியா, அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, பின்னணி இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள, படத் தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். ஆக்சன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார்.
இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ஆறு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் படம் இது என்பதால், இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
பொதுவாக பாலாவின் திரைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது தமிழ் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் “நம்ம பாலாவின் அதே கதைதான்” என்பது போலவே இந்தப் படம் வந்திருக்கிறது.
‘கோட்டி’ என்கின்ற அருண் விஜய்க்கு கன்னியாகுமரிதான் சொந்த ஊர். ஒரு மீனவர் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய 10-வது வயதில் சுனாமி தாக்குதலின்போது தன்னுடைய பெற்றோரை இழந்தவர். அதே துயரத்தின்போது தன்னை போலவே பெற்றோரை இழந்த 3 வயது ரிதாவைப் பார்த்தவுடன் பிடித்துப் போக அனாதைகள் இருவரும் நெருக்கமாகி கதறுகிறார்கள்.
அந்த இடத்தில் சுனாமி மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இருவரையும் அண்ணன், தங்கை என்று நினைத்து இருவருக்கும் ரெக்கார்ட்ஸ் தயார் செய்து, இருவரையும் இப்போதுவரையிலும் தங்களுடைய பராமரிப்பில் வளர்த்து வந்திருக்கிறார்கள்.
இப்போது இளம் வயதில் இருக்கும் கோட்டி ஒரு மாற்றுத் திறனாளி. வாய் பேசவும் தெரியாது. காதும் கேட்காது. யாரிடம் எப்படி பேசுவது.. பழகுவது.. என்பதே தெரியாத ஒரு ஜீவன்.
ரீதாவும் இப்பொழுது வளர்ந்திருக்கிறார். அருகில் இருக்கும் ஒரு கடையில் பச்சை குத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறாள். இருவரும் ஒரே வீட்டில் அண்ணன், தங்கையாக வசித்து வருகிறார்கள்.
கோட்டி தன் முன் கோபத்தால் பலரையும் தாக்கி அடிதடியில் இறங்கி, நிறைய பிரச்சனைகளை இழுத்துக் கொண்டிருப்பதால் இவனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்தால் நிம்மதியாக பொழப்பை ஓட்டுவான் என்று நினைத்து அருகில் இருக்கும் பார்வை திறன் இல்லாதவர்களின் ஹோமில் வாட்ச்மேன் வேலையை வாங்கித் தருகிறார்கள்.
அந்த ஹோமில் வேலை செய்யும் மூன்று ஆண்கள், பார்வையற்ற பெண்களின் குளியல் அறைக்குள் நுழைந்து அவர்கள் குளிப்பதை வேடிக்கை பார்ப்பதை ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள்.
இதை தற்செயலாக கண்டறியும் கோட்டி, மிகுந்த கோபம் கொண்டு அதில் இரண்டு பேரை படுகொலை செய்கிறான். “அந்த கொலைகளை செய்ததும் நான்தான்” என்று சொல்லி போலீசிலும் சரணடைகிறான். போலீஸ் “எதற்காக கொலை செய்தாய்?” என்று கேட்டபொழுது அவன் பதில் சொல்ல மறுக்கிறான்.
ஆனால் நீதிமன்றமோ ஒரு ஆதாரமும் இல்லாமல் எப்படி இவனை சிறையில் வைப்பது? எப்படி வழக்கை நடத்துவது? என்று கேள்வி எழுப்புகிறது.
இப்பொழுது போலீஸ் உயர் அதிகாரியான சமுத்திரக்கனி இந்த வழக்கை விசாரிக்க வருகிறார். இந்த வழக்கினை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் விசாரிக்கத் தொடங்குகிறார் சமுத்திரக்கனி.
ஆனால் கோட்டியோ பதில் சொல்ல மறுக்கிறான். அவனுடைய சிந்தனையில் தப்பியிருக்கும் அந்த மூன்றாவது நபரை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்பதுதான் இருக்கிறது.
கடைசியில் சமுத்திரகனி இதைக் கண்டுபிடித்தாரா..? கோட்டி அந்த கடைசி மூன்றாவது நபரை கொலை செய்தானா?. கடைசியில் என்ன ஆனது..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
பாலாவின் பாத்திரத் தேர்வு, பாத்திரப் படைப்பு அனைத்துமே மனம் பிறழ்ந்தவர்களின் வாழ்க்கையைச் சொல்லும். அந்த மன நோயாளிக்கான நிலையில் இருப்பவர்களின் தற்போதைய வாழ்க்கையைச் சொல்லும் வகையில்தான் தனது படங்களின் நாயகர்களை படைத்திருக்கிறார்கள்.
இந்த வகையான கதாப்பாத்திரத்தில் நடித்துதான் விக்ரமும், சூர்யாவும் மிகப் பெரிய உச்சத்தை தொட்டார்கள்.
அப்படி ஒரு உச்சத்தைத் தொட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அருண் விஜய். மிக சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். காது கேட்காது. வாய் பேச முடியாது என்கின்ற அந்த நிலைமையில் சைகை பாஷையில் தன்னுடைய ஒட்டு மொத்த உணர்வுகளையும் கொட்டி இருக்கிறார் அருண் விஜய்.
அருண் விஜய் கொட்டிய உணர்வுகள் அத்தனையும் பாலாவின் சிந்தனையில் உதிர்த்த வசனங்களின் வெளிப்பாடு. அந்த வசனங்களில் உண்மையை அமைத்து போலித்தனம் இல்லாமல் நம் மனதில் இடம் பிடிக்கும் வகையில், நம் மனதை கரைக்கும் வகையில் நம்மையும் சேர்த்தே சித்தப் பிரமை பிடிக்க வைத்திருக்கிறார் பாலா.
அருண் விஜய்யின் அந்த ஆக்ரோஷமும், கோபமும், ஆத்திரமும், வெறியும் நமக்கே பயத்தை தருகிறது. எப்படி இப்படியெல்லாம் ஒரு கேரக்டர்ஸ் ஸ்கெட்ச்சை வடிவமைத்து அவர்களை அந்த கேரக்டராகவே வாழ வைப்பது என்பது ஒரு மிகச் சிறந்த இயக்குநரால் மட்டும்தான் முடியும். அது பாலாவால் சாத்தியமாய் இருக்கிறது.
நிச்சயம் அருண் விஜய்க்கு இந்தப் படம் ஒரு மிகப் பெரிய ஒரு வெற்றிப் படம்தான். அதோடு அவருடைய நடிப்புக்கு மிகச் சிறந்த விருதுகளை இத்திரைப்படம் நிச்சயமாக பெற்றுக் கொடுக்கும் என்பதை சந்தேகம் இல்லை.
பாலாவுக்கு எள்ளளவும் குறையாத அளவுக்கு சவால் விடும் வகையிலும் நடித்திருக்கிறார் அவருடைய தங்கையாக நடித்த ரிதா என்ற அந்த இளம் பெண். அட்டகாசமான நடிப்பு. அறிமுக நடிகை இல்லையோ என்று சந்தேகிக்கவும் வைக்கிறது. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.
தன்னுடைய அண்ணன் மீதான அளவு கடந்த பாசத்தில் அண்ணன் கொலை செய்திருக்க மாட்டான் என்று சொல்லி கதறு அழும்போதும், சிறைச்சாலைக்கு வந்து அண்ணனின் காலில் விழுந்து கதறும் பொழுதும் நம் கண்களில் நீரை வரவழைத்து விட்டது. ஒரு மிகச் சிறந்த நடிகை தமிழ் சினிமாவுக்கு இத்திரைப்படத்தின் மூலம் கிடைத்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
பாலாவின் இயக்கத்தில் களி மண்ணும் நடிக்கும் என்பார்கள். அதுபோல இன்னொரு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறார் படத்தின் நாயகியாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷ். அவருடைய முதல் அறிமுகக் காட்சிகள் இருந்து கடைசிவரையிலும் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் தெனாவெட்டு என்கின்ற லெவலில் இருந்தாலும், அவருடைய அழகான நடிப்பை அதிலேயே வெளிக் கொண்டிருந்திருக்கிறார்.
விவேகானந்தர் பாறை முன்பாக வெளிநாட்டு டூரிஸ்ட்டுகளிடம் அனைத்து பாஷைகளிடமும் பேசி சமாளிக்கும்விதமும், கப்பலில் அவர்களிடம் அருண் விஜய் ஒரு சாமியார் என்று பொய் சொல்லி ஏமாற்றுவதும்.. அருண் விஜய்யை விரட்டி விரட்டி காதலிக்கும் ஒரு பெண்ணாகவும், அருண் விஜய் பலவாறு அவரை தாக்கிய போதும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டால் தான் அவனை மன்னித்துவிடுவதாகச் சொல்லும்போதும் நம்மைச் சொக்க வைத்திருக்கிறார் ரோஷிணி. அவருடைய முக அழகும், உடை வடிவமைப்பும் இந்தப் படத்தில் மிக சிறப்பு என்றே சொல்லலாம்.
அடுத்து படத்தில் நடித்த மற்றவர்களும் குறிப்பிடத்தக்க நடிப்பை கொட்டி இருக்கிறார்கள். ஒரு நேர்மையான நீதிபதியாக நடித்திருக்கும் மிஷ்கின் ஒரு வழக்கில் இரண்டு நிமிடத்தில் உண்மையைக் கண்டறிந்து மாமனார் மீது பாலியல் வழக்கைத் திணிக்க நினைக்கும் மருமகளிடம் கோபத்தைக் காட்டுகின்ற பொழுது நமக்கு மிகவும் பிடித்து போகிறது.
மிஷ்கின் கடைசியாக தன்னுடைய தீர்ப்பை அழுத்தமான குரலில் இறுக்கமான முகத்தோடு சொல்கின்றபொழுது “ஐ லவ் யூ மிஷ்கின்” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
போலீஸ் டிஎஸ்பியான சமுத்திரக்கனி இடைவேளைக்கு பின்பு விசாரணை அதிகாரியாக வருகிறார். விசாரணை நடத்துகின்றபொழுது ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருப்பாரோ.. அவருக்கு வழக்கு புலப்பட வேண்டும்…? யார் குற்றவாளி என்பது தெரிய வேண்டும்..? அவர் கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற அந்த ஒற்றை நோக்கத்திற்காக நடத்தப்படும் விசாரணை காட்சிகளில் தன் நடிப்பை மிக இயல்பாக காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி.
மற்றும் இந்தப் படத்தில் பாதிரியாராக நடித்தவர், ஹோம் தலைவியாக நடித்திருக்கும் சாயாதேவி, இன்ஸ்பெக்டர்களாக நடித்திருக்கும் வேல்ராஜ், சேரன்ராஜ், மற்றும் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் மிகச் சிறப்பாக தங்களுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்பத்தைப் பொறுத்தவரையிலும் இத்திரைப்படம் கலை வித்தகர் ஒருவரின் திரைப்படம்தான் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
முதல் கட்சியிலிருந்து கடைசிவரையிலும் ஒரே வகையான ஒளிப்பதிவினை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவு கோணத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முகமும் மிகத் தெளிவாகவும் அவருடைய நடிப்பு துல்லியமாகவும் பதிவாகி நம்முடைய மனதை இந்தப் படத்தின் கதையுடனேயே பயணம் செய்யும் அளவுக்கு மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் மிக, மிக முக்கியமானது சண்டைக் காட்சிகள்தான். அதை ஒளிப்பதிவு செய்தவிதமும் அதை வடிவமைத்த சண்டை காட்சி இயக்குநரையும் மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்.
ஆனால் இவ்வளவு ஆக்ரோஷம், கோபம், ரௌத்திரம் தேவையா பாலா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், இது பாலாவின் படம் என்பதால் “மூடிட்டு பாருடா” என்ற நம்முடைய மனம் சொல்வதையும் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டி இருக்கிறது.
ஸ்டண்ட் செல்வாவின் இயக்கத்தில் படத்தில் இடம் பெற்றிருக்கும் அத்தனை சண்டை காட்சிகளும் அபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அடி, உதைகளுக்குப் பின்னணியில் ஒலிக்கும் இசையை வைத்து, அந்த ஒவ்வொரு அடியையும் நம் தலையில் விழுவதைப் போலவே மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் ஒலிப்பதிவு இயக்குநர்.
படத்தின் மொத்தமாக பல்வேறு காட்சிகளையும் நறுக்கித் தந்திருக்கும் எடிட்டர் சூர்யாவையும் மனதார பாராட்டுகிறோம். அவருடைய கத்தரி வித்தையில் சண்டை காட்சிகளை மிக அழகாக தொகுத்திருக்கும் நேர்த்தியும், ஒவ்வொரு காட்சிகளிலும் அடுத்தவரின் ரெஸ்பான்ஸ் உடனடியாக தெரியும்படி கத்திரி போட்டு எடிட் செய்திருக்கும் எடிட்டருக்கு நமது பாராட்டுக்கள்.
படத்தின் துவக்கத்தில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையும், ஒரு கையில் விநாயகர் சிலையையும் எடுத்து வரும் அறிமுகக் காட்சி எதையோ சொல்லப் போவதாக நினைத்தாலும், அடுத்த நொடியே பெரியார் சிலையை மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு பிள்ளையார் சிலையை மட்டும் துடைத்துக் கொண்டிருக்கும் காட்சியை வைத்திருப்பதன் மூலம் பாலா என்ன சொல்ல வருகிறார்..? தான் நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு மாறிவிட்டேன் என்று பாலா நமக்குச் சொல்வதுபோல குறியீடாகத் தெரிகிறது.
அதேபோல் படத்தின் இறுதியிலும் இதே கிணற்றுக் காட்சி வரும்போது நமக்கும் வயிற்றில் ஒரு பிரளயத்தையே உண்டு செய்கிறது அந்தக் காட்சி. இதற்கு கனெக்சன் கொடுத்த தந்திரமான திரைக்கதைக்கு நமது பாராட்டுக்கள்.
பாலா திரைப்படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்பது போல, இந்தப் படமும் கட்டியம் கூறும் அளவுக்கு அருண் விஜய்யின் கேரக்டர்ஸ் ஸ்கெட்ச் வடிவம் வைக்கப்பட்டுள்ளது.
வாய் பேச முடியாதவன் என்பதால் மற்றவர்களிடத்தில் எப்படி பேசி பழக வேண்டும் என்பதே தெரியாதவனாகவும் இருக்கிறான் என்பதை வசனத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். ஆனால் படத்தின் கதை நகர்வுக்காக பாதிரியார் தயங்கித் தயங்கிப் பேசுவதெல்லாம் ஒரு கேரக்டருக்காக சில விட்டுக் கொடுத்தல்களை பாலா செய்துள்ளார் என்பதாகவே நம்மால் யூகிக்க முடிகிறது.
லாஜிக் எல்லை மீறல்கள் பாலாவின் படத்தில் வரலாமா..? விசாரணைக் கைதிக்கு எந்த சிறையில் யூனிபார்ம் கொடுக்கிறார்கள்..? அதேபோல் சிறைக்குள் வந்து அருண் விஜய்யை சமுத்திரக்கனி அடித்து உதைப்பதெல்லாம் டூ மச்சான திரைக்கதை. வாய் பேச முடியாதவன் என்பதுகூட தெரியாமலா எஃப்.ஐ.ஆர். போட்டு நீதிபதியிடம் அழைத்துச் செல்வார்கள்..? இப்படி பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன.
இதற்கு முன்பாக ‘பிதாமகன்’ படத்தில் சூர்யா, விக்ரம் செய்த கலவையாக இந்தப் படத்தில் அருண் விஜய்யை நடிக்க வைத்திருக்கிறார் பாலா. இது மாதிரியான மனப்பிறழ்வு கொண்டவர்கள் அல்லது மனம் நன்றாக இருந்தாலும் எப்படி ஒரு விஷயத்தை அணுக வேண்டும் என்று தெரியாதவர்கள்.. இவர்களை வைத்துக் கொண்டு பாலா, இன்னமும் எத்தனை கதைகளைத்தான் கொடுப்பார் என்று தெரியவில்லை.
அதேபோல் பாலாவின் அனைத்து படங்களிலும் வருகின்ற பெண் அடிமைத்தனம் இந்தப் படத்திலும் அப்படியே இருக்கிறது. மற்ற ஆண்களை அடிப்பதை போலவே ஹீரோயின் ரோஷிணியை அந்தத் தாக்கு தாக்குகிறான் கோட்டா. அதுவே நம் மனதை ரொம்பவும் கஷ்டப்படுத்துகிறது. சங்கடப்படுத்துகிறது. அதை பற்றி பாலா ஏன் நினைக்கவில்லை என்று தெரியவில்லை.
ஒரு சக மனுஷியை மனிதராக பார்க்க முடியாத, தெரியாத அந்த ஹீரோ, இன்னொரு பெண்ணுக்கு நடப்பதையெல்லாம் கொடுமை என்று நினைத்து அவர்களை கொலை செய்வது எந்த வகையில் நியாயம்? அருண் விஜய்யின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் மிகப் பெரிய சறுக்கல் இந்த இடத்தில்தான் என்பதை கண்டிப்பாக சொல்ல வேண்டும்.
பெண்ணடிமைத்தனம் மட்டுமல்ல… சாதிய பாகுபாடு.. பிராமணர்களை கிண்டல் செய்வது.. மாமி என்று ஹீரோயின் கிண்டல் செய்வது.. நாய்க்கறி சாப்பிடுதல் பற்றிச் சொல்லிக் காட்டுவது.. இதெல்லாம் தேவையில்லாத ஆணி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அதேபோல் கிறிஸ்தவ பாதிரியார்களை கிண்டல் செய்திருப்பது.. கிறிஸ்தவ மத அமைப்புகளை, கிறிஸ்துவ சடங்குகளை விமர்சிப்பதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது..? இப்படி அடுத்த மதத்துக்காரர்களை கிண்டல் செய்து பாலா என்ன சாதிக்கப் போகிறார்..?
பெண்களுக்கெதிரான வன்முறையை குறைக்க வேண்டும் அல்லது அடியோடு நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்வதோடு ஒரு மனிதனுக்கு சமூக பொறுப்புணர்வு போய்விடாது.
அதே மனிதன் சமூக நல்லிணக்கத்தையும், மதச்சார்பற்ற ஒரு நிலையையும் அனைத்து மதங்களையும் ஒரே பார்வையில் பார்க்கும் தன்மையையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதுதான் ஒரு சிறந்த இயக்குநரின் பணி.
பாலா இந்தப் படத்தின் கதை மாந்தர்களின் கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக சொல்லுகின்ற திரைக்கதைகள், சமூக நல்லிணக்கத்தையும் மதச்சார்பற்ற தன்மையையும் தூக்கிப் போட்டு மிதிக்கிறது. இது அர்த்தமற்ற செயல் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
அதே.சமயம், பாலாவின் இயக்கம் என்பது அனைத்து புதுமுக இயக்குநர்களுக்கு ஒரு மிகச் சிறந்த ஒரு பாடம் எடுத்துக்காட்டு. அந்த வகையில் இந்த படம் இயக்குதல் என்கின்ற பிரிவில் ஒரு பாடமாக வைக்க வேண்டிய ஒரு படம். ஒவ்வொரு கேரக்டரும் அந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தப் படத்தை பார்த்தாவது புதிய இயக்குநர்கள்… ஏன் பல படங்களை இயக்கிய இயக்குநர்கள்கூட இயக்குதலின் நீள, அகல, உயர வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு இயக்குதலில் ஒரு பாடத்தை இந்தப் படம் வைத்திருக்கிறது என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.
பாலாவுக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு வணிக ரீதியாக வெற்றிப் படம்தான். ஆனால் இது உண்மையான வெற்றியா என்பதை பாலா கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எத்தனையோ இயக்குநர்கள் எத்தனையோவிதமான கதைகளை வைத்து வேறு வேறு ஜானரில் படங்களை செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரே மாதிரியான ஜானரில், ஒரே மாதிரியான கேரக்டர்ஸ்களை வைத்து மட்டுமே நான் படமெடுப்பேன் என்று பாலா பிடிவாதமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
இனி பாலாவின் அடுத்தடுத்த படங்களில் வேறு வகையான ஒரு கதையை வேறு வகையான ஒரு கேரக்டர்ஸ்களுடன் ரசிகர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
RATING : 4 / 5









