கடந்த 23-ம் தேதி வெளியான ஜெயம் ரவியின் ‘வனமகன்’ திரைப்படமும், 30-ம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் ‘இவன் தந்திரன்’ படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி அல்லாமல் மாநில அரசு தனியாக 30 சதவீத கேளிக்கை வரியை தமிழ் சினிமா மீது விதித்தது. இதனால் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்குகள் ஜூலை 3-ம் தேதி முதல் காலவரையரைன்றி மூடப்பட்டன.
கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி அனைத்து தமிழ் சினிமா சங்கங்களும் தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் திரையரங்குகள் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று நாளை திரையரங்குகளை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து பேச ‘வனமகன்’ மற்றும் ‘இவன் தந்திரன்’ படக் குழுவும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் ஜெயம் ரவி, இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் அழகப்பன், கௌதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் கண்ணன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் பேசும்போது, “இதற்கு முன்பு இப்படி ஒரு மாபெரும் ஸ்ட்ரைக்கை நான் பார்த்தது இல்லை. திடீரென இந்த ஸ்ட்ரைக் அறிவித்து விட்டார்கள். இதற்காக திரையரங்குகள் மீது பழி சுமத்த முடியாது, ஏனெனில், தமிழ்நாடு அரசு திடீரென கேளிக்கை வரியை கொண்டு வந்துவிட்டது…” என்றார்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “நான் இந்த படம் இல்லைனா வேற படத்தில் நடிக்க போய் விடுவேன், ஆனால் இயக்குநர் கண்ணனுக்கு அப்படி இல்லை. ரொம்ப கஷ்டத்தில்தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார். ‘ரங்கூன்’ ஏதோ ஒரு படம் ஓடிருச்சுனு இல்லாம, அடுத்தடுத்து ஹிட் என்றாகியிருக்க வேண்டியது. கடவுள் புண்ணியத்தால் நாளை மீண்டும் ரிலீஸாகிறது.
தமிழ் சினிமாவில் பல தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களை குறைத்தால் சினிமா இன்னும் சூப்பராக இருக்கும். மக்கள் எப்போதுமே கோடிகளில் புரளும் சினிமாக்காரர்களுக்கு என்ன பிரச்சினை என்ற கோணத்திலேயே பார்க்கிறார்கள். இங்கும் பல பிரச்சினகள் இருக்கு.
திரையரங்குகளின் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை முதல் மீண்டும் படங்கள் திரையிடப்படும்.. எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள்…” என்றார்.
“வனமகன்’ படம் இயக்குநர் விஜயின் கனவுப் படம். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. அது மீண்டும் தொடர வேண்டும். படத்தை விளம்பரப்படுத்திய பல ஊடக நண்பர்களும் நீங்கள் கஷ்டப்படும் இந்த சூழலில் எங்களுக்கு பணம் வேண்டாம் என்று சொல்லி எங்களுக்கு ஆதரவு தந்தனர்…” என்று கூறினார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
இயக்குநர் விஜய் பேசுகையில், “வனமகன் படத்திற்கு இரண்டாவது வாரத்தில் 30 திரையரங்குகள் அதிகமாகி, வினியோகஸ்தர்களும் சந்தோஷப்பட்டு, வணிக ரீதியாக பெரும் வெற்றி பெறும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில்தான், இந்த ஸ்ட்ரைக் ஆரம்பித்தது.
இதற்கிடையில் சிடியில் நிறைய பேர் பார்த்துவிட்டு என்னிடம் பேசினார்கள். இதே மாதிரி ஒரு அனுபவம்தான் தலைவா படத்தின் போதும் எனக்கு ஏற்பட்டது. எனக்கேகூட தெலுங்கு சினிமா அல்லது விளம்பரப் படம் எடுக்க போய் விடலாமா என்று தோன்றியது. இந்த சினிமாவை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. நீங்கள்தான் எங்களது படங்களுக்கு ஆதரவு தர வேண்டும்…” என்றார் இயக்குநர் விஜய்.
இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.கண்ணன் பேசுகையில், “வாட்ஸ்அப்பில் நான் வெளியிட்ட ஆடியோ ஒரு தனிப்பட்ட மனிதனின் வலி இல்லை. ஒட்டு மொத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்களும் இன்று அந்த வலியை அனுபவித்து வருகிறார்கள். இரண்டு வருடம் கஷ்டப்பட்டு ஸ்க்ரிப்ட் எழுதி எடுத்த படம். வேறு ஒரு தயாரிப்பாளர் கடைசி நேரத்தில் விலகியதால் நான் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கஷ்ட காலத்தில் உடன் நின்ற எல்லாருக்கும் நன்றி…” என்றார்.
‘இவன் தந்திரன்’ படத்தின் ஹீரோவான கெளதம் கார்த்திக் பேசும்போது, “பல ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை பார்த்து மிகவும் மனம் உடைந்து போனேன். நடிகர்கள் வெளியில்தான் தன்னம்பிக்கையோடு தெரிவோம். உள்ளுக்குள் பாதுகாப்பற்ற நிலையைத்தான் உணர்கிறோம். அந்த சமயத்தில் ரசிகர்களின் ஆதரவுதான் எங்களுக்கு பூஸ்ட். நிறைய இடங்களில் நாங்கள் கேட்காமலேயே திருட்டு விசிடியை ரசிகர்கள் தடுத்திருக்கிறார்கள். முழு அனுபவம் தியேட்டரில்தான் கிடைக்கும். என்னை பிடிக்கலைனா என்னை பார்க்காதீங்க.. ஆனால், மற்றவர்களின் உழைப்பை மதித்து படத்தை பாருங்க..” என்றார்.
நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, “கடந்த மே மாதமே ‘வனமகன்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தும் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்னு சொன்னதை மதித்து படத்தை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தோம்.
பல தடங்கல்களை தாண்டித்தான் இப்போது ரிலீஸ் செய்திருக்கிறோம். சினிமா துறையினருக்கும் கஷ்டம் இருக்கும் என்பது ஏன் எல்லோருக்கும் புரிவதில்லை. நம் தமிழ்நாட்டுக்கு சினிமாதான் ஒரே கொண்டாட்டம். பல நல்ல விஷயங்களும் சினிமாவில்தான் சொல்லப்படுகின்றன. அதை அழியவிடக் கூடாது…” என்றார் ஜெயம் ரவி.
















