full screen background image

சினிமா வியாபாரத்தில் ஒரு புதிய திருப்பம் – ‘ஹிட் பாக்ஸ்’ திட்டம்..!

சினிமா வியாபாரத்தில் ஒரு புதிய திருப்பம் – ‘ஹிட் பாக்ஸ்’ திட்டம்..!

மக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர்.கே. நடிக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் வடபழனி கமலா திரையரங்கில் நேற்று மாலை சிறப்பாக நடந்தது.

ஷாஜி கைலாஷ் இயக்கியிருக்கும் இந்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ராஜரத்தினம்  ஒளிப்பதிவு செய்ய, சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார் கனல் கண்ணன். வசனத்தை கையாண்டிருக்கிறார்  V. பிரபாகர். 

படத்தில் ஆர்.கே., நீதுசந்திரா, இனியா, கோமல் சர்மா, சுஜா வாருணி,  நாசர், ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஸ்ரீரஞ்சனி, காமெடி டைம் அர்ச்சனா,  பவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

vaigai express poster-1 

இந்த நிகழ்ச்சியில் ஹீரோவும், தயாரிப்பாளருமான ஆர்.கே. பேசும்போது, “உலகத்திலேயே சிறந்த தொழில் சினிமா தயாரிப்பு. ஆனால் மார்க்கெட்டிங் செய்ய தெரியாமல் சினிமா உலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 

எல்லாருமே தங்கம் வாங்கினாலும்கூட ‘ஒன்று இலவசம்’ என்கிறார்கள். எந்தப் பொருள் வாங்கினாலும் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்கிறார்கள். இந்திய சினிமா உலகம் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. உயர்ந்திருக்கிறது. ஆனால் வியாபாரம் உயரவில்லையே ஏன்..? எல்லா தியேட்டரின் டிக்கெட்டும் ஏன் ஓரிடத்தில் கிடைப்பதில்லை..?  எங்கோ சினிமா வியாபாரம் பின் தங்கியிருக்கிறது ஏன்…?

IMG-20170309-WA0253

ஒரு சிறந்த தயாரிப்பு என்றால் மக்களிடம் கொண்டு சேர்க்க மார்க்கெட்டிங் சிறப்பாக இருக்கவேண்டும். எந்த தயாரிப்பு நன்றாக இருந்தாலும் மார்க்கெட்டிங் மூலம் இந்தியா முழுக்க கொண்டு செல்ல முடியும். ஏன்.. உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்.  

மார்க்கெட்டிங் மாறினால் எல்லாம் மாறும். இந்த உலகில் இழந்த உயிரைத் தவிர அனைத்தையும் மீட்டுக் கொண்டு வர முடியும். அப்படி சினிமா வியாபாரத்தையும் மீட்டுக் கொண்டு வர முடியும்.

உலகில் மார்கெட்டிங் சிறப்பாக இருந்தால் எதை வேண்டுமானாலும் சந்தைப்படுத்திவிடலாம். கற்றுக் கொடுப்பதுதான் வாழ்க்கை. ‘டேய் நான் உன் தகப்பன்டா’ என்று தந்தை கற்றுக் கொடுக்கிறார். ‘டேய் நான் உன் அம்மாடா..’ என்று அம்மா கற்றுக் கொடுக்கிறாள். நான் திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்யவேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறேன்.

IMG_3709

நல்ல வியாபார முறையை நமக்கு கற்றுக் கொடுத்தால் வெற்றி பெற முடியும். இதுதான் இந்த ஐந்து ஆண்டுகளாக எனக்குள் ஓடிக் கொண்டிருந்த சிந்தனை. சினிமா உலகம் வியாபாரத்தை மாற்றினால் 8 கோடி தமிழ் மக்களும் சினிமா பார்க்க வைக்க முடியும். ஒரு வருடம் கதையைத் தேர்வு செய்கிறோம். படப்பிடிப்பு ஒரு வருடம் செய்கிறோம். ஆனால் மார்க்கெட்டிங் என்ன என்றால் போஸ்டர் ஒட்டுகிறோம் என்கிறார்கள்.

பல கோடி வர்த்தகம் நடக்கும் இடம் சினிமாவுலகம். பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இடம். ஆனால், இப்போது நசிந்து கிடக்கிறது. 300 ரூபாய்க்கு விற்கும் டிக்கெட்டை வாங்கி படம் பார்த்துட்டு, ‘குடும்பத்தைக் கூட்டிட்டுப் போக முடியலயே..’ என்கிற ஆதங்கத்தில்… ‘படம் படு மொக்கை’ என்று வீட்டில் வந்து பொய் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆன் லைன்ல புக் பண்ணா எவனோ ஒருத்தன் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் சம்பாதிக்கிறான். கேட்டா சர்வீஸ் சார்ஜுங்கிறான். 10 டிக்கெட் புக் பண்ணாலும் 300 ரூபாய் வாங்கிவிடுகிறான். இதை முதலில் ஒழிக்கவேண்டும்.

600 பேர் அமரும் தியேட்டரில் 100 டிக்கெட்கூட விற்கமாட்டேங்குது… நான் 300 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்க்கு கொடுக்கிறேன். அத்துடன், 3 பேர் டிக்கெட் எடுத்தா 2 பேரை இலவசமா கூட்டிட்டு வா என்கிறேன்… குடும்பம், குழந்தைகளுடன் மக்கள் சந்தோஷமா படம் பார்க்கட்டுமே…?

IMG-20170309-WA0239

அப்படி உருவானதுதான் இந்த ஹிட் பாக்ஸ். இது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுக்கான உத்திரவாதமான முதல் படி… ஆயிரம் விநியோகஸ்தர்களை உருவாக்கியிருக்கிறேன்… ‘ஐயா திருட்டு விசிடி விக்கிறாய்ங்க’ன்னு சொன்னார்கள்.. ‘இது இனிமேல் உங்கள் சினிமா; உங்கள் வியாபாரம்’ என்று ஊக்கப்படுத்தினேன்.. களமிறங்கி ஜெயித்திருக்கிறார்கள்.

எங்க ஹிட் பாக்ஸ்ல டிக்கெட் விற்கிறவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாய்தான் வாங்குகிறார்கள். 1 லட்சம் டிக்கெட் விற்றால் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பார்கள். என் எழைத் தமிழனும் லட்சாதிபதி ஆகட்டுமே…?  ஹிட் பாக்ஸ் மூலமா எட்டு கோடி பேரும் தியேட்டர்ல வந்து படம் பார்ப்பார்கள்…!

IMG_3768

நாங்கள் கடந்த ஆறு மாதங்களாக மார்க்கெட்டிங்கில் தீவிரமாக இருந்தோம். அதனால்தான் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் தாமதம் போல் தெரிகிறது. படமெடுப்பதைவிட வியாபாரம்தானே முக்கியம்..?

‘ஹிட் பாக்ஸ் விநியோகம்’ உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ் சினிமாவுக்கு ‘வைகை எக்ஸ்பிரஸ்’ மூலம் வருகிறது. எதிர்காலத்தில் எங்கள் படங்களையும் ஹிட் பாக்ஸ் மூலம் விநியோகியுங்கள் என்று எல்லோரும் எங்களை தேடி வருவார்கள்.

எல்லா தியேட்டர்களிலும் 4 வாரங்கள் ஹவுஸ்புல்லாகும் தகுதி என் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு இருக்கிறது. அப்படி ஓடும் என்கிற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது..” என்றார்.

விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜரத்னம், தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், ஏ.எம்.ரத்னம், பைவ் ஸ்டார் கதிரேசன், நடிகைகள் நீத்து சந்திரா, கோமல் சர்மா, நடிகர்கள் எம்.எஸ். பாஸ்கர், மதன் பாப், மனோபாலா,  ரமேஷ் கண்ணா மற்றும் இப்படத்தில் நடித்துள்ள  கேரளாவின் மேடைக் கலைஞர் அனுசந்திரன், ஆர்.கே.வின் அடுத்த படத்தின் இயக்குநர் சக்திவேல், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்  ஆகியோரும் கலந்து கொண்டனர் . 

நிகழ்ச்சியில் ஆர்.கே.வின் புதிய விநியோகத் திட்டமான ‘ஹிட் பாக்ஸ்’  அமைப்பின் விநியோகஸ்தர்கள்  ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.

Our Score