மக்கள் பாசறை பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம், ‘வைகை எக்ஸ்பிரஸ்’. இதில் ஆர்.கே. ஹீரோவாக நடிக்கிறார். நீது சந்திரா, இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலரும் நடிக்கின்றனர். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் இடம் பெறவிருக்கும் ஒரு சேஸிங் காட்சிக்காக அமெரிக்காவரையிலும் சென்று பயிற்சி எடுத்து வந்தாராம் இந்தப் படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஆர்.கே.
இது பற்றி அவர் பேசும்போது, “இந்தப் படத்தில் சேஸிங் காட்சி ஒன்று இடம் பெறுகிறது. அதனை ஹாலிவுட் தரத்தில் எடுக்க திட்டமிட்டோம். அப்படி படமாக்க வேண்டுமென்றால் இந்தந்த பயிற்சிகள் தேவை என்று கனல் கண்ணன் மாஸ்டர் என்னிடம் சொன்னார்.
அவர் சொன்னதை அடுத்து, இதற்காகவே நான் அமெரிக்கா சென்றேன். அங்கு நியூயார்க் அருகில் க்ரீன் பாயிண்ட், ப்ருக்லீன் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் புரொபஷனல் மையத்துக்கு சென்றேன். அங்கு பாப் கார்ட்டர் என்பவரிடம் சேஸிங் காட்சிக்காகச் சிறப்புப் பயிற்சி எடுத்தேன். 15 நாட்கள் நடந்த இந்தப் பயிற்சியில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அது மட்டுமல்லாமல் அந்த சேசிங் காட்சிக்கான பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி வந்தேன்.
படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இந்த சேஸிங் காட்சியும் ஒன்றாக இருக்கும். விரைவில் அந்த காட்சிப் படமாக்கப்பட இருக்கிறது. அத்துடன் படத்தின் ஷுட்டிங் முடிவடைகிறது. இந்த வருட இறுதிக்குள் படம் ரிலீஸாகும்…” என்றார்.