full screen background image

“கலைஞர்களைப் பற்றி அநாகரீகமாக பேசி வருபவர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும்” – நடிகர் வடிவேலு பேச்சு!

“கலைஞர்களைப் பற்றி அநாகரீகமாக பேசி வருபவர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும்” – நடிகர் வடிவேலு பேச்சு!

இன்று காலை சென்னையில் காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69-வது பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசும்போது, “தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களான எம்.என்.ராஜம், சச்சு, லதா, இந்த சினிமாவில் எனக்கு ஒரு தாய் தந்தையைப் போல இருந்து தக்க சமயங்களில் அறிவுரை ஆலோசனை சொல்லி வழி நடத்திய அண்ணன் சிவக்குமார் இவர்களுக்கு முன்னால் இங்கே நிற்பது பெருமையாக இருக்கிறது.

சிவக்குமார் அண்ணன் சச்சும்மாவாச்சும் எனக்கு போன் பண்ணி, “என்ன பண்ற வடிவேலு..?” என அடிக்கடி விசாரிப்பார். சிவகுமார் அண்ணன் என்னுடைய படம் பார்த்துவிட்டு “சிறப்பா நடிச்சிருக்க.. நேரில் வந்து இரண்டு முத்தம் வாங்கிட்டு போடா..” என்ற வாஞ்சையுடன் கூறுவார்.

ஆனாலும் நாம் ஒரு விஷயத்தில் கொஞ்சம் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறோம். இதை இந்த நேரத்தில் நான் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என பார்க்காமல் யூடியூபில் சில பேர் நம் கலைஞர்களைப் பற்றி அசிங்க அசிங்கமாக, அநாகரிகமாக, தப்பு தப்பாக தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

நடிகர் சங்கம் என்பது நடிகர்களை பாதுகாப்பதற்குத்தான். அதற்காக நடிகர் சங்கம் செயல்படாமல் இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. கலைஞர்களுக்குள் லேசாக சின்ன விரிசல் விழுந்தால்கூட அதை ஊதி கிணறு வெட்டுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.

தற்போது அப்படித்தான் அநாகரிகமாக பேசிய இரண்டு, மூன்று பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பல முறை நான் பூச்சி முருகன் அண்ணனிடம் பேசி இருக்கிறேன்.

இன்னும் நாலைந்து பேர் அப்படி திரிகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஆப்பு வைத்தால்தான் இந்தத் திரையுலகம் விளங்கும். அதே சமயம் நடிகர்களிலேயே சிலர் இது போன்ற ஆட்களை பணம் கொடுத்து தங்களுக்கு பிடிக்கதவர்களுக்கு எதிராக பேச வைக்கிறார்கள்.

தன்னுடைய படம் ஓட வேண்டும் என்பதற்காக மற்றவர்களுக்கு எதிராக ஆட்களுக்கு பணம் கொடுத்து திட்ட வைக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி தரக் கூடிய விஷயம். தயாரிப்பாளர் சங்கத்திலும் இதே போன்ற வேலை நடக்கத்தான் செய்கிறது.

இதற்கு உடந்தையாக நம் சங்கத்தில் இருப்பவர்கள் சில நடிகர்களே உடந்தையாக இருக்கிறார்கள். இதுவே கேரளாவாக இருந்திருந்தால் இப்படி பேசுபவர்களை பிதுக்கி எடுத்து மசாலா தடவி இருப்பார்கள். ஆனால் இங்கே யாரும் அப்படி செய்வதில்லை.

இப்போதைய தலைவர் நாசர் உள்ளிட்ட இந்த நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்கள் போர்க்கால நடவடிக்கையாக இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உண்டு இல்லை என பண்ண வேண்டும். அப்படி செய்தால்தான் நடிகர் சங்கம் என்றால் என்ன என்று அவர்களுக்கு புரியும்.

அந்த நபர்களை தூங்கவிடாமல் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் நாம் நிம்மதியாக தூங்க முடியும். எல்லா கலைஞர்களும் சேர்ந்து மக்களை மகிழ்விக்கும் பணியை செய்து வருகிறோம்.

இப்போது தியேட்டர்களுக்கு உள்ளே சென்று படம் பார்த்து விட்டு வருபவர்களிடம் படம் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை கேட்டு வாங்குகிறார்கள். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு பணம் தராமல் போனால், இப்படி சினிமாவை கிட்டத்தட்ட ஒரு பத்து பேர் சேர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் இவர்களை என்ன செய்கிறதோ இல்லையோ இவர்களுக்கு நடிகர் சங்கம் ஒரு முடிவு கட்ட வேண்டும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்..” என்று பேசினார்.

 

Our Score