full screen background image

வடிவேலுவின் தெனாலிராமன் படத்திற்கு தமிழகத் தெலுங்கர்கள் எதிர்ப்பு..!

வடிவேலுவின் தெனாலிராமன் படத்திற்கு தமிழகத் தெலுங்கர்கள் எதிர்ப்பு..!

என்னடா கோடம்பாக்கத்தை புரட்டியெடு்கக புதுப் படைகள் எதையும் காணோமேன்னு நினைச்சிட்டிருந்தோம். இன்னிக்கு ஒரு டீம் கிளம்பிட்டாங்க..!

சென்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் அஞ்ஞாதவாசம் சென்று இப்போதுதான் பெரிய பட்ஜெட் படத்தில் தனது முகத்தைக் காட்டி அசத்தலாம் என்ற நினைப்போடு ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடத்தி வருகிறார் வடிவேலு. அவருக்கும் ஒரு எதிர்ப்பு வந்துள்ளது. வந்தது அரசியல்வாதிகளால் அல்ல.. மொழியால் நம்மிடிமிருந்து பிரிந்திருக்கும் திராவிடர்களால்..!

‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய இரு வேடங்களில் வடிவேலு நடித்திருக்கிறார்.  இந்தப் படத்தில் கிருஷ்ண தேவராயரை அவமானப்படுத்தும்வகையில் காட்சிகள் இருப்பதாக தமிழ்நாட்டில் வசித்து வரும் சில தெலுங்கு பேசும் மக்களுக்கு தகவல் போனதாம். அதனால் அவர்கள் இன்று கொதித்தெழுந்துவிட்டனர்.

சென்னையில் தெலுங்கு பேசும் மக்களுக்காக தமிழக தெலுகு மக்கள் பேரவை என்ற அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்புதான் வடிவேலுவை எதிர்த்து களமிறங்கியிருக்கிறது.

இது குறித்து அந்தப் பேரவையின் மாநில தலைவர் பாலகுருசுவாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் வடிவேலு சில காட்சிகளில் நடித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

வடிவேலுவின் இந்த செயல் கிருஷ்ண தேவராயரையும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தெலுங்கு மக்களையும் இழிவுபடுத்துவதாக உள்ளது.   இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வடிவேலு மற்றும் படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் போன்றோருக்கு கடிதம் எழுதி உள்ளோம்.  

இந்தப் படத்தில் கிருஷ்ண தேவராயரை பற்றி அவதூறான காட்சிகள் இருந்தால் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று தணிக்கை குழுவுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம்.  இதையும் மீறி படத்தை வெளியிட முயன்றால் வடிவேலு வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ண தேவராயர் ஆந்திர மாநிலத்தின் சூப்பர் ஸ்டாரான அரசர். அந்த மாநிலத்தின் தற்போதைய செழிப்புக்கு மிக முக்கியக் காரணம் அவரேதான். நமது ராஜராஜசோழனை போல.. கிருஷ்ண தேவராயர்-தெனாலிராமன் கதைகள் நமது பாடப்புத்தகங்களில் மிகப் பிரபலமானது. கிருஷ்ண தேவராயர் அமைச்சரவையில் புத்திசாலி அமைச்சராக இடம் பிடித்திருந்த தெனாலிராமன், பல விஷயங்களில் கிருஷ்ண தேவராயருக்கே புத்திமதி சொல்லி… அறிவைப் புகட்டி அவரது சக அமைச்சர்களின் பொறாமை கண்களையும் தாண்டி தெலுங்கு தேசத்தைக் காத்தவர்.. அவர்கள் இருவருக்குமிடையில் நடக்கும் சில சுவாரஸ்ய சம்பவங்களே இந்தப் படத்தின் கதை என்கிறார்கள்.

ஒருவர் மாற்றி ஒருவர் காலை வாரிவிடும் காட்சிகளில் சிரிப்புக்குப் பஞ்சமில்லை என்கிறார்கள் படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள். இதனைத்தான் தெலுங்கு அமைப்பினர் வேறு மாதிரியாக நினைத்துவிட்டார்களோ என்னவோ..? ஆகவே தெலுங்கு மக்கள் இப்படி பொங்குவது இயல்புதான். ஆனால் சென்னையில் இருந்து கொண்டு இப்படி பொங்குகிறார்கள் பாருங்கள்.. அதுதான் ஆச்சரியப்பட வைக்கிறது.. என்ன தைரியம்..?

பாவம் வடிவேலு.. இந்தப் படத்தை வெற்றிப் படமாக ஆக்கிக் காட்டி மீண்டும் பழைய வடிவேலுவா கோடம்பாக்கத்தில் வலம் வருவேன் என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் பிரச்சினை அவருக்கு.. 

“ஏண்டா. எனக்கு மட்டும்.. உனக்குத் தேவையா..? இது உனக்குத் தேவையா..?” என்று எத்தனையோ படங்களில் தன்னைத்தானே கேட்டு ரசிகப் பெருமக்களை சிரிக்க வைத்திருக்கிறார் வடிவேலு.

இந்த விஷயத்தில் சிந்தினையுடனும், உறுதியுடனும் செயல்பட்டு அதே சமயம் இயக்குநரின் படைப்புத் திறனும் பாதிக்காமல் இந்தப் பிரச்சினை முடிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

Our Score