இயக்குநர் திலகம் கே.பாக்யராஜின் கதையைச் சுட்டு டி.பி.கஜேந்திரனின் இயக்கத்தில் ஒரு படம் உருவாகிவிட்ட கதையை இந்தச் செய்தியில் பார்த்தோம்.
இப்போது அடுத்தது.. கதை போய் சில காட்சிகள்.
கே.பாக்யராஜ் தற்போது எழுதி, இயக்கி வரும் ‘துணை முதல்வர்’ படம் ஒரு அரசியல் நையாண்டி படம். இதில் இடம் பெற வேண்டிய தேர்தல் காட்சிகளுக்காக குரூப் டிஸ்கஷனில் சில காட்சிகளை பேசி வைத்திருந்தாராம் இயக்குநர் பாக்யராஜ்.
ஒரு காட்சி :
தனக்குத்தான் ஓட்டுப் போடணும்னு சொல்லி பணம் கொடுத்திருப்பார் வேட்பாளர். வாக்காளர் சரியாக தனது சின்னத்தில்தான் வாக்களித்தாரா என்று கேட்பார் வேட்பாளர். “சரியா உங்க சின்னத்துலதான் ஒரு ஓட்டு போட்டேன்..” என்று சொல்வார் வாக்காளர். “ஒரு ஓட்டுன்னா..?” என்று வேட்பாளர் திருப்பிக் கேட்க.. இவர் மட்டுமில்லாமல்.. அதே தொகுதியில் நிற்கும் வேறு சில வேட்பாளர்களிடத்திலும் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கும் அடுத்தடுத்து ஓட்டுப் போட்டதை அப்பாவியாய் சொல்வார் அந்த வாக்காளர்.
இரண்டாவது காட்சி :
“எனக்குத்தான் ஓட்டுப் போட்டியா..?” என்று வேட்பாளர் வாக்காளரை வாக்குச் சாவடியின் வாசலில் வைத்தே கேட்பார். “நீங்க இப்படியெல்லாம் கேட்பீங்கன்னு நினைச்சுத்தான் பாருங்க கையோட கொண்டு வந்திருக்கேன்..”னு சொல்லி வாக்குச் சீட்டை எடுத்துக் காட்டுவார் அந்த வாக்காளர்.
இந்த இரண்டு காட்சிகளுமே சில ஆண்டுகளுக்கு முன்பாகவே வடிவேலு நடித்த ஒரு படத்தில் நகைச்சுவை பகுதியில் இடம் பெற்றுவிட்டது.
இதெல்லாம் ‘துணை முதல்வர்’ படத்துக்காக பாக்யராஜ் தயார் செய்து வைத்திருந்ததாம்..
“சரி.. பரவாயில்லை.. அது போனா போகுதுன்னு நினைச்சு சட்டுன்னு இன்னொரு தடவை உக்காந்து பேசி.. இன்னொரு சீன்களைப் பிடிச்சு படத்தை எடுத்திட்டோம்..” என்று சந்தோஷமாகவே சொல்கிறார் பாக்யராஜ்.
இவர்தான்யா திரைக்கதை ஆசிரியர்..! ஒரு கதை போனா அவ்ளோதானா..? எத்தனையோ கதைகள் இருக்கே..? அடிச்சு விளையாடுங்க ஸார்..!