full screen background image

வாழை – சினிமா விமர்சனம்

வாழை – சினிமா விமர்சனம்

Navvi  Studios  நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள திரைப்படம் வாழை.

பொன்வேல், ராகுல் என்ற 13 வயது சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி, தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் மற்றும் ‘கர்ணன்’ ஜானகி அம்மா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – மாரி செல்வராஜ், ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர், இசை சந்தோஷ் நாராயணன், கலை இயக்கம்குமார் கங்கப்பன், படத் தொகுப்பு  சூரிய பிரதமான், சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, பாடல்கள் யுகபாரதி, விவேக், மாரி செல்வராஜ், உடை வடிவமைப்பு ்ரீஸ்வர்ணா, ஒலி வடிவமைப்பு சுரேன் G, ஸ்டில்ஸ் ஜெய்குமார் வைரவன், உடைகள் ரவி தேவராஜ், மேக்கப் R.கணபதி, விளம்பர வடிவமைப்பு கபிலன் செல்லையா, பத்திரிக்கை தொடர்பு சதீஷ் (AIM), எக்ஸிக்யூட்டிவ் புரோடியூசர் வெங்கட் ஆறுமுகம், தயாரிப்பாளர் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்.

பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன் ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இப்படத்தினை இயக்கியுள்ளார்.

திருநெல்வேலி அருகிலிருக்கும் புளியங்குளம், கருங்குளம் ஆகிய கிராமங்கள்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.

புளியங்குளத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனான ‘சிவனணைந்தன்’ அருகில் உள்ள கருங்குளத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறான். இவனது இணை பிரியாத தோழனான ‘சேகரும்’ அதே வகுப்பு மாணவன்தான்.

குடும்பக் கஷ்டத்திற்காக சிவனணைந்தனும், சேகரும் பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். அந்த வாழைத் தார் சுமக்கும் வேலைக்குச் செல்ல சிவனணைந்தனுக்குப் பிடிக்கவே இல்லை.

அதைத் தூக்குவதால் ஏற்படும் கழுத்து வலி, தோள் வலியால் அந்த வேலையை வெறுக்கும் சிவனணைந்தன், தனது அம்மாவின் கட்டாயத்தின்பேரில்தான் சென்று வந்து கொண்டிருக்கிறான்.

குடும்பக் கஷ்டத்திற்காக வாங்கிய முன் பணத்திற்காக வயதுக்கு வந்த தனது மகளான வேம்பு என்னும் திவ்யா துரைசாமியையும் சேர்த்து அந்த வாழைத்தார் தூக்கும் வேலைக்குச் சென்று வருகிறார் சிவனணைந்தனின் தாயான ஜானகி.

படிப்பில் வகுப்பில் முதல் மாணவனாகத் திகழும் சிவனணைந்தனுக்கு அதே பள்ளியின் ஆசிரியையான பூங்கொடி’ என்னும் நிகிலா விமல் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு. அந்த டீச்சருடன் பேசவும், பழகும் மிகுந்த ஆசையுடன் இருக்கிறான். டீச்சரின் கைக்குட்டையைத் திருடி பத்திரப்படுத்தி வைக்கும் அளவுக்கு டீச்சர் மீது அளவு கடந்த அபிமானத்தில் இருக்கிறான் சிவனணைந்தன்.

டீச்சருடன் இன்னமும் நெருக்கமாகும் வாய்ப்பு பள்ளியின் ஆண்டு விழாவில் நடனப் போட்டியில் பங்கேற்க பெயர் கொடுத்ததன் மூலம் சிவனணைந்தனுக்குக் கிடைக்கிறது. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தும் தினத்தன்று வாழைத் தார் தூக்கும் வேலைக்கும் போக வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படுகிறது.

அவனது அக்காவின் கருணையினால் லாரியிலிருந்து இறங்கி பள்ளிக்கு ஓடுகிறான் சிவனணைந்தன். அதன் பிறகு அன்றைய நாளில் நடக்கும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அது என்ன என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான, மண் மணம் கமழும், மனதை உருக வைத்த, உருக்க வைத்த, கண்ணீர் சிந்த வைக்கும் திரைக்கதை.

படத்தைத் தாங்கிப் பிடித்திருப்பதே சிவனணைந்தனாக’ நடித்திருக்கும் பொன்வேலுவும், ‘சேகராக’ நடித்திருக்கும் ராகுலும்தான். துவக்கக் காட்சிகளில் இவர்கள் இருவரின் சேட்டைகளும், பேச்சுக்களும் நம்மை சிரிக்க வைக்கின்றன. குறிப்பாக, அந்த ரஜினி-கமல் பற்றிய வசனங்கள் மொத்தத் தியேட்டரையும் அலற வைத்துவிட்டது.

அடுத்தடுத்த திரைக்கதைகளில் சிவனணைந்தனின் நடிப்புதான் படத்தின் மிகப் பெரிய பலம். டீச்சர் மீதான காதலைச் சொல்லத் தெரியாமல் படம் வரைந்து பாகம் குறித்து பாடல்களால் சொல்ல முனைவதிலேயே, ஒரு கவிதை போல நம் மனதைக் கரைத்துவிடுகிறான் சிறுவன் பொன்வேல்.

“ம்பா” என்று எதையோ தேடுவதைப் போல காடு, கரை, கம்மா, வயக்காடு, தோப்பு, தோட்டம், வாழைத் தோட்டம் என்று அத்தனையிலும் தொண்டை கிழிய குரல் கொடுக்கும்போது பொன்வேல் காட்டியிருக்கும் தீவிரமான நடிப்பு நம்மை அசர வைக்கிறது.

சேகருடன் சட்டை கிழிந்த விவகாரத்தில் சண்டையிடுவதும், அம்மாவிடம் மென்மையாக தனக்கு வாழை தூக்கும் வேலை வேண்டாம் என்று சொல்வதிலும், “கனி அண்ணனை நீ கல்யாணம் செஞ்சுக்க” என்று தன் அக்காவிடம் வெள்ளந்தியாக பேசும்போதும் “நடிக்கவேயில்லை. வாழ்ந்திருக்கிறான் பொன்வேல்” என்று வாழ்த்த வேண்டியுள்ளது.

கிளைமாக்ஸ் காட்சியில் படம் பார்க்கும் அத்தனை ரசிகர்களின் எமோஷன்ஸையும் தனக்குள் வாங்கிக் கொண்டு நமக்குப் பதிலாக திரையில் கண் கலங்கி, அழுது, பசியினால் வாடி, அம்மாவைப் பார்த்தவுடன் பயந்துபோய் ஓடுவதுடன் நம்மையும் சேர்த்துக் கைப்பிடித்து இழுத்தபடியே ஓடுவது போலத்தான் நமக்குத் தோன்றியது. வெல்டன் பொன்வேல். உனக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. பட்டப்படிப்பை முடித்துவிட்டு வாப்பா..! தமிழ்த் திரையுலகம் காத்திருக்கிறது.

சேகராக நடித்திருக்கும் ராகுல், பொன்வேலுவுக்குப் பல வழிகளில் உதவி செய்தும், கமல்ஹாசனின் வெள்ளந்தி ரசிகனாகப் பேசும் பேச்சுக்களும் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. சினிமாவுக்கு எதற்கு அழகு முகம். எந்த முகமாக இருந்தாலென்ன அந்த முகம் காட்டும் நவரசமே நடிப்பு. இந்தப் பையனின் நடிப்பும் அளவிட முடியாதது. ஆனால் அனுபவிக்கலாம். பாராட்டுக்கள் ராகுல்.

டீச்சராக நடித்திருக்கும் நிகிலா விமல் மிகப் பொருத்தம். பார்த்தவுடன் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு, அதே நேரம் கனிவான பேச்சு, பணிவு காட்டும் பேச்சு, நேசம் காட்டும் நட்பு, ஆசிரியை என்ற தோரணையில்லாமல் பழகும் தன்மை.. இதை தனது அழகான முகத்தில் தான் வரும் காட்சிகளிலெல்லாம் கொடுத்து அந்தச் சிறுவர்களை மட்டுமேயில்லாமல், தியேட்டருக்கு வந்த அத்தனை ரசிகர்களையும் ஏங்க வைத்திருக்கிறார்.

படம் பார்க்கும் பெண்களுக்குப் பொறாமை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கும் இவரது ஸ்கிரீன் பிரசன்ஸ்தான் படத்தின் முற்பாதியை பெரிதும் ஈர்த்துள்ளது. பஞ்சு மிட்டாய் சீலை கட்டி’ பாடலுக்கு நிகிலா விமல் ஆடும் நளினமானஆட்டமும், மொத்த ரசிகர் கூட்டத்தையும் கட்டிப் போடுகிறது.

கணவன் இறந்த பிறகு தனியொரு மனுஷியாக அந்தக் குடும்பத்தை வளர்த்தெடுக்கப் பாடுபடும் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகியின் நடிப்பு தத்ரூபம். “அவனைக் கஷ்டப்படுத்தணும்ன்னு செய்யலை. உழைச்சு சம்பாதிக்கிறது எப்படின்னு அவனுக்குத் தெரியணும்” என்று மகனை வாழைத் தார் தூக்க அழைக்கும் காரணத்தைச் சொல்லும்போது “சின்னப் பையனாச்சேம்மா” என்று வருத்தப்படும் நம்மையும் சேர்த்தே சமாதானப்படுத்துகிறார்.

கிளைமாக்ஸில் தன்னைப் பார்த்தவுடன் பாதி சாப்பாட்டிலிருந்து எழுந்தோடும் மகனைப் பிடிக்க முடியாமல் “என் பிள்ளையும் ஓடுறானே…” என்று கதறியழும்போது நம்மையும் பெரிதும் கண் கலங்க வைத்துவிட்டார் ஜானகி.

அக்கா வேம்பு’வாக நடித்துள்ள திவ்யா துரைசாமி ஒரு பாசமான அக்காவாக, வீட்டிற்கு அடக்கமான மகளாக அருமையாக நடித்துள்ளார். மருதாணியை கலையரசனிடம் கொடுத்துவிட்டு வரும்படி கேட்கும் காட்சியிலும், “கனி அண்ணனை கல்யாணம் பண்ணிக்க..” என்று தம்பி சொல்லும்போது பொங்கி வரும் வெட்கத்தை மறைக்க முடியாமல் தவிர்த்துவிட்டு, “பேசாமல் வாடா” என்று செல்லாமக அதட்டும்போதும் மிகவும் பிடித்துப் போகிறது இந்த வேம்புவை..!

கனியாக நடித்திருக்கும் கலையரசன் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கம்யூனிஸ சிந்தனை கொண்ட இளைஞராக நடித்துள்ளார். பத்மனிடம் 1 ரூபாய் கூலியை உயர்த்திக் கேட்கும் தருணத்திலும், பத்மனுடனான கை கலப்புக் காட்சியிலும் தனது கோபத்தையும், வீரத்தையும் காட்டியிருக்கிறார்.

புரோக்கர் பத்மன், கடைசியில் வில்லனாகும் வாழைத்தோப்பின் முதலாளி ஜெ.சதீஷ்குமார் மற்றும் அந்த ஊர்க்கார இளைஞர்கள், முதியோர்கள் என்று அத்தனை பேருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

1998-ம் காலத்தில் நடக்கும் கதை என்பதால் எள்ளளவும் இன்றைய நவீனம் கேமிராவில் தென்படாத வண்ணம் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

அந்தக் கிராமத்து அழகையும், வீடுகளையும், வாழைத் தோட்டங்களையும், மண் சாலைகளையும், கிணற்றையும், மாடுகளையும், ஆடுகளையும், மனிதர்களையும் அந்த இயல்பான நிலைமையிலேயே தனது கேமராவில் படம் பிடித்து நம்மை 1998-ம் ஆண்டுக்கே அழைத்துச் சென்றுள்ளார் தேனி ஈஸ்வர்.

நெல் விளையும் பூமி என்பதை சொல்லாமல் வாழைத் தோப்புதான் மிகப் பெரிய விவசாயம் என்பதை மட்டும் காட்டி, வெறிச்சோடி கிடக்கும் கண்மாயும், அதன் ஓரமாக அனாதையாக வளர்ந்து நிற்கும் எருக்கஞ் செடிகளும், அதன் வழியே செல்லும் மண் பாதைகளுமாய் நம்மையும் அந்தக் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது தேனி ஈஸ்வரின் கேமிரா.

மாட்டை தேடி சிவனணைந்தன் அலையும்போது கேமிராவில் காட்டியிருக்கும் வியூகம் மறக்க முடியாதது. “எங்கேயப்பா இருக்கு இந்த லொகேஷன்?” என்று நம்மையும் கேட்கவும் வைத்திருக்கிறது.

சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் இவர் அமைத்திருக்கும் பின்னணி இசை, இன்னொரு கதாப்பாத்திரம்போலவே நம்மை படத்திற்குள் அமிழ்த்துவிட்டது.

படம் முடிந்தவுடன் ஒருவர்கூட எழுந்திருக்காமல் அவருடைய டைட்டில் பாடல் முழுவதையும் கேட்டுவிட்டுத்தான் எழுந்திருக்கிறார்கள். இதுவே அவருக்கும், இயக்குநருக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான்..!

அவருடைய பாடல்கள் மட்டுமில்லாமல், 1980-களில் தமிழ்நாட்டு கிராமங்களில் மிகவும் பிரபலமான மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி’, ‘தூது வளை எலைய அரைச்சு’, ‘பஞ்சு மிட்டாய் சீலை கட்டி’ ஆகிய பாடல்களை கச்சிதமான இடங்களில் ஒலிக்கவிட்டு ராசாவின் ரசிகர்களையும் பழைய காலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

படத்தொகுப்பாளரின் கச்சிதமான நறுக்குதலில் முதல் ஷாட்டுக்கும், அடுத்த ஷாட்டுக்கும் இடையில் குடுகுடுப்பைக்காரன் அசைக்கும் குடுகுடுப்பையும் ஒலிக்க வைத்து ஏதோ ஒருவித இனம் புரியாத பயவுணர்வை ஊட்டி, சிவனணைந்தனின் தேடுதல் வேட்டையின்போது ஒலிக்கும் பின்னணி இசையையும், ஷாட்டுகளையும் கச்சிதமாக நறுக்கித் தந்திருக்கும்விதம்.. பாராட்டத்தக்கது..!

அவ்வளவு நீளமான கிளைமாக்ஸ் காட்சியை மனதை உருக வைக்கும் பின்னணி இசையுடன் பார்க்கக் கூடியவித்தில் தொகுத்திருக்கும் வித்தைக்காகவும் ஒரு கூடுதல் பாராட்டு..!

செல்லூலாய்ட் திரையில் 1998-ம் ஆண்டின் காலக்கட்டத்தை நம் கண் முன்னே நிறுத்தியதற்காகவே மாரி செல்வராஜை நாம் பாராட்ட வேண்டும். படத்தின் தொடக்க காட்சிகளியே அந்தக் கிராமத்தின் அழகியலையும், சுற்றுப் புற தோற்றத்தையும் அப்படியே காட்டியிருக்கிறார்கள்.

ராமராஜன் ரசிகர் மன்றம், ரஜினி ரசிகர் மன்றம், கமல்ஹாசன் ரசிகர் மன்றம்.. இவற்றுக்கான சுவர் விளம்பரங்களுடன் அப்போதைய கட்சிகளின் விளம்பரத்தையும் சேர்த்து அந்தக் காலத்தைக் கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

முதல் பாதியில் காட்சிகள் பள்ளி தொடர்பானதாகவே நகர்ந்து கொஞ்சம் சிரிப்புடன், ஒரு எதிர்பார்ப்புடன் நகர்கிறது. டீச்சர், மாணவன் சம்பந்தப்பட்டக் காட்சிகள் சற்று பிசிறினாலும் தவறான புரிதலை கொடுத்துவிடும் சூழலில் அதை மிகச் சரியாகச் கையாண்டியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதிதான் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. நடனமாட ஒத்திகை பார்க்க பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தன் அதன் பிறகு எதிர்கொள்ளும் சம்பவங்களும், அதன் தொடர்ச்சியாய் எழும் சிக்கல்களும் மிக, மிக இயல்பானவை

அதேபோல் ஒட்டு மொத்தக் கிராமத்தையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அந்த விபத்து சம்பவம் நம் மனதை ரணகளமாக்கிவிட்டது. கண்ணீர்விடாமல் எழுந்து வந்த ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது..!

எப்போதும்போல தனது அரசியல் அபிலாஷைகளுக்கேற்ப அம்பேத்கர் உள்ளிட்ட சில குறியீடுகளையும் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இது மாரியின் படங்களில் தவிர்க்க முடியாததுதான்..!

இதற்கு முன்பாக மாரி செல்வராஜ் எடுத்திருந்த பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களைவிடவும் இத்திரைப்படம்தான் மாரி செல்வராஜூக்கு அதிகமாகப் பெருமை சேர்க்கும் படமாகும்..!

இத்திரைப்படத்தின் மூலமாக, தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராகிவிட்டார் மாரி செல்வராஜ்..! பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

வாழை – தமிழ் சினிமாவின் தனித்த அடையாளம்..!

RATING : 4.5 / 5

Our Score