‘வாயை மூடிப் பேசவும்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்றைக்கு சத்யம் திரையரங்கில் கோலாகலமாக நடந்து முடிந்தது..!
பாடலை இயக்குநர் மணிரத்னம் வெளியிட, தெலுங்கு நடிகர் ராணா பெற்றுக் கொண்டார்..
டிரெயிலரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பெற்றுக் கொண்டார்.
படத்தின் டிரெயிலரும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. அதன்படி பார்த்தால்.. ஏதோவொரு மலை கிராமத்தில் திடீரென்று ஒரு வியாதி பரவுகிறது.. பலருக்கும் பேச்சு தடைபடுகிறது.. நல்லா பேசிக்கிட்டிருந்தவங்க எல்லாம் பேச முடியாமல் தவிக்கிறார்கள். அரசு சுதாரித்து மருத்துவக் குழுக்களை அந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறது. அப்படி அனுப்பி வைக்கப்படும் மருத்துவராக அந்த ஊருக்கு வருகிறார் நஸ்ரியா.
மதுபாலா ஒரு எழுத்தாளர். ஹீரோ துல்கரும் இது பற்றி விசாரித்து எழுத அங்கே வருகிறார். ஹீரோவும், ஹீரோயினும் பார்த்து ஒரு பக்கம் மோதலுடன் காதல் வெடிக்க.. இன்னொரு பக்கம் லேசாக தும்மினாலே காற்றில் பரவும் அந்த வைரஸை அடக்க அரசும் தளராமல் முயன்று வருகிறது.. இதற்காக மருத்துவத் துறை அமைச்சர் பாண்டியராஜன் முனைப்புடன் செயல்படுகிறாராம்..
இப்படித்தான் கதை செல்கிறது.. டிரெயிலரில் நஸ்ரியாவின் இளமை துள்ளும் ஆக்சன்கள் நிறையவே இருக்கிறது.. அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்..!
டிரெயிலரின் இறுதியில் “சூப்பர் ஸார்.. சூப்பர்.. இது போதும் எனக்கு.. 4 வாரம் படத்தை ஓட்டிருவேன்…” என்று இயக்குநரே சொல்லி சமாளிக்கிறார். ஆக.. எல்லாத்தையும் எதிர்பார்த்துதான் படத்தை எடுத்திருக்கிறார்கள் போல தோன்றுகிறது..!