தமிழ்ச் சினிமாவில் பிரபல மூத்த நடிகர்களில் ஒருவரான வாகை சந்திரசேகர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துப் பெயர் எடுத்தவர். இதன் பின்பே அவர் தமிழ்த் திரையுலகத்தில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கினார்.
அவர் எப்படி தமிழ்த் திரையுலகத்தில் அடியெடுத்து வைத்தார் என்பதை சமீபத்தில் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.
அவர் இது குறித்துப் பேசுகையில், “நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் ‘பதினாறு வயதினிலே’ திரைப்படம் வெளியானது.
சென்னையில் ‘மிட்லண்ட்’ தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்தேன். டைட்டில் காட்சிகளில் இருந்தே ஒரு பாமர ரசிகனை உள்ளே இழுத்தது அந்தப் படம். நடித்தால் இந்த மாதிரி ஒரு இயக்குநரின் படத்தில்தான் நடிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்தேன்.
அடுத்து பாரதிராஜாவின் முகவரியைத் தேடி கண்டுபிடித்து அவரது வீட்டிற்குப் போய் அவரைச் சந்தித்து வாய்ப்பு கேட்டேன். “இப்பத்தான் ஒரு படம் இயக்கியிருக்கேன். இந்தப் படம் ஓடி.. அதுக்கப்புறம் எனக்கு வாய்ப்பு கிடைக்கணுமே.. அதுக்கப்புறம் சொல்றேன்…” என்றார்.
நானும் அவரைத் தொடர்ந்து பாலோ செய்து கொண்டேயிருந்தேன். ஆனால் அவர் அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிவிட்டார். நானும் அவ்வப்போது அவரை சென்று பார்த்து வாய்ப்பு கேட்பேன். அப்போதெல்லாம் “இந்தப் படத்தில் உனக்கேற்ற கேரக்டர் இல்லப்பா…” என்று சொல்லிவிடுவார்.
‘கல்லுக்குள் ஈரம்’ படத்தினை அவர் துவங்கியபோது அப்போது எனக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்த மனோபாலா பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவர் அந்தப் படத்தின் நடிகர்கள் லிஸ்ட்டில் என்னுடைய பெயர் இல்லை என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார்.
எனக்குத் தாங்க முடியாத ஏமாற்றம். அந்த இரவு நேரத்திலேயே.. கொட்டும் மழையில் நனைந்தபடியே நான் பாரதிராஜாவை பார்க்கப் போனேன்.
“என்னய்யா இந்த நேரத்துல..?” என்று ஆச்சரியத்துடன் பாரதிராஜா கேட்டார். “ஸார்.. எனக்கு நடிக்க சான்ஸ் கிடைச்சிருக்கு. அதைச் சொல்றதுக்குத்தான் வந்தேன்..” என்றேன். அவரும் ஆச்சரியத்துடன் “ஓ.. நல்லது.. எந்தப் படம்யா.. யார் டைரக்டர்..?” என்றார். “பாரதிராஜா படம் ஸார்..” என்று சிரித்தபடியே சொன்னேன்.
அவர் அதைக் கேட்டு அதிர்ச்சியாகிவிட்டார். “யோவ்.. என்னய்யா இப்படி..” என்றார். “பின்ன என்ன ஸார்.. இத்தனை வருஷமா உங்க பின்னாடியே அலைஞ்சிட்டிருக்கேன். இந்தப் படத்துலேயும் எனக்கு சான்ஸ் இல்லைன்னா எப்படி ஸார்.. இது எனக்கு வாழ்க்கைப் பிரச்சினை ஸார்..” என்றேன்.
பாரதிராஜா கொஞ்சம் யோசித்தார்.. “சரி.. நாளைக்கு யூனிட்டோட நீயும் வந்திரு.. பார்த்துக்கலாம்…” என்றார். எனக்குப் பரம சந்தோஷம்.. அப்படித்தான் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்திற்காக படக் குழுவுடன் நானும் ஷூட்டிங்கிற்குக் கிளம்பினேன். அந்தப் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்து திரையுலகத்தில் அறிமுகமானேன்.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திலும் தியாகராஜனுக்குப் பதிலாக நான்தான் நடிக்க வேண்டியிருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டிற்குக்கூட போய்விட்டேன். ஆனால் நான் போவதற்குள் இளையராஜா, தியாகராஜனுக்கு சிபாரிசு செய்ததால் என்னைத் தூக்கிவிட்டு தியாகராஜனை அந்த வேடத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா.
ஆனாலும் இதற்கடுத்த படமான ‘நிழல்கள்’ படத்தில் ஒரு நாயகனாக என்னை நடிக்க வைத்தார். அதிலும் ஒரு பாடல் காட்சியையும் கொடுத்துப் பெருமைப்படுத்தினார் பாரதிராஜா. அந்த ஒரு படம்தான்.. என் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது. அதற்குப் பிறகுதான் என் நடிப்பு கேரியர் உயரத் துவங்கியது..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் வாகை சந்திரசேகர்.