full screen background image

வாகா – சினிமா விமர்சனம்

வாகா – சினிமா விமர்சனம்

தமிழ்ச் சினிமாக்காரர்களுக்கு கதையே கிடைக்கவில்லையெனில் ஒன்று பேய்ப் படம் எடுப்பார்கள். இல்லாவிட்டால் தேச பக்தியை ஊட்டுவது போல படமெடுப்பார்கள்.

‘ஹரிதாஸ்’ என்ற ஒரு படத்தின் மூலமாக பரவலாக அறியப்பட்ட இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன், தனது அடுத்தப் படத்தை ஹீரோவுக்காக தயாரிக்கப்பட்ட கதையில் இயக்கியிருப்பதால், படமும் அவருடையதாகவே இல்லாமல் போய்விட்டது..!

காரைக்குடி அருகே இருக்கும் ஒரு ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் ராஜ்கபூரின் மகன் விக்ரம் பிரபு. இவரது பெரியப்பா மகன் சத்யன். மளிகைக் கடையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை விக்ரம் பிரபுவிடம் ஒப்படைக்கிறார் ராஜ்கபூர். அதேபோல் சத்யனின் அப்பாவும் அவரிடத்தில் கடையை ஒப்படைக்க.. இரண்டு இளைஞர்களுக்கும் கோபம் கொப்பளிக்கிறது.

கடையைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் இளைஞர்களுக்கே உரித்தான பொழுது போக்கு அம்சங்களில் தலையை நுழைக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதில் ‘ஆணியே புடுங்க வேணாம்’ என்றும் பாட்டு பாடுகிறார்கள்.

இரண்டு அப்பாக்களின் நொச்சுகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி ராணுவத்தில் சேர்வதுதான் என்கிறார் சத்யன். விக்ரம் பிரபு இதற்கு சம்மதிக்க மறுக்க.. “அங்கே போனால் ஓசியில் எவ்வளவு வேண்டுமானாலும் சரக்கு அடிக்கலாம்…” என்று சத்யன் சொல்ல விக்ரம் பிரபு இப்போது ஓகே சொல்கிறார்.

இருவரும் தேர்வு போட்டிக்கு செல்ல சத்யன் தோல்வியடைந்து விக்ரம் பிரபு ஜெயிக்கிறார். எல்லைப் பாதுகாப்பு படைக்கு தேர்வாகிறார் விக்ரம் பிரபு. பெங்களூரில் 8 மாத கடுமையான பயிற்சிக்குப் பிறகு காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

அங்கே இந்திய – பாகிஸ்தான் எல்லைக் கோடு அருகேயிருக்கும் பகுதியில் காவல் காக்கும் வேலையைச் செய்கிறார் விக்ரம். கூடவே காதலும் வருகிறது. கிள்ளிவிட்டால் ரத்தம் வந்துவிடும் அளவுக்கு செக்கச் செவலென்று காஷ்மீரத்து பெண்களுக்கே உரித்தான அழகுடன் இருக்கும் ரன்யா ராயை பார்த்தவுடன் லவ்வாகிறார் விக்ரம் பிரபு.

அதே நேரம் அங்கே தீவிரவாத தாக்குதல்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டேயிருக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீர்ர் ஒருவரின் தலையை வெட்டி, இந்திய எல்லைக்குள் வீசுகிறார்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர்.

இதையடுத்து காஷ்மீரில் கலவரம் ஆரம்பிக்க.. ராணுவம் கடும் நடவடிக்கை எடுக்கிறது. இன்னொரு பக்கம் உள்ளூர் தீவிரவாதிகள் காஷ்மீரில் வசிக்கும் பாகிஸ்தானிய மக்களை வெளியேறும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஹீரோயின் ரன்யா ராயும் காஷ்மீரைவிட்டு வெளியேறுகிறார். இப்போதுதான் அவர் ஒரு  பாகிஸ்தானி என்பதே விக்ரம் பிரபுவிற்கு தெரிய வருகிறது. ரன்யா சென்ற பேருந்தை கலவரக்காரர்கள் தாக்கி தீக்கிரையாக்குகிறார்கள். அதில் பயணித்த சில பாகிஸ்தானியர்கள் கொல்லப்படுகிறார்கள்.

பின்னாலேயே ரன்யா ராயை தேடி வரும் விக்ரம் பிரபு அங்கே காட்டுக்குள் பதுங்கியிருந்த ரன்யாவை கண்டறிகிறார். அங்கேயிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பாகிஸ்தானுக்குள் தான் எப்படியாவது போய்விடுவேன் என்கிறார் ரன்யா.

ஆனால் விக்ரம் பிரபு தான் அவரை பாகிஸ்தானில் பத்திரமாக சேர்ப்பதாகக் கூறி சட்லெட்ஜ் நதியைக் கடக்க உதவி புரிந்து பாகிஸ்தானுக்குள் செல்கிறார். ரன்யாவை அவளது வீட்டில் சேர்ப்பிக்கிறார்.

அதற்குள் விஷயம் தெரிந்து அங்கே வரும் பாகிஸ்தான் ராணுவம் விக்ரம் பிரபுவை கைது செய்து அடிலாபாத்தில் இருக்கும் தங்களது ரகசிய சித்ரவதை கூடத்திற்கு கொண்டு செல்கிறது. அங்கே விக்ரம் பிரபு அடைக்கப்பட.. விக்ரம் பிரபு காணாமல்போய்விட்டதாக மட்டுமே இந்திய ராணுவம் அறிகிறது.

இந்தத் தகவல் விக்ரம் பிரபுவின் குடும்பத்திற்கும் தெரிய வர.. அவர்கள் கலங்கிப் போயிருக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து விக்ரம் பிரபு தப்பித்தாரா..? ரன்யாவின் கரம் பிடித்தாரா? என்பதுதான் மீதமான திரைக்கதை.

‘வாகா’ என்பது பஞ்சாப்பில் இருக்கும் இந்திய-பாகிஸ்தானிய எல்லைப் பகுதி. ஆனால் இந்தப் படத்தின் டைட்டிலாக ‘வாகா’ என்று வைத்துவிட்டு படம் முழுவதையும் காஷ்மீரில் எடுத்திருக்கிறார்கள். ‘காஷ்மீர்’ என்று வைத்தால் சென்சார் அனுமதி கிடைக்காதோ என்று சந்தேகப்பட்டிருக்கலாம்..!

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஊரில் இருக்கும் அதிகப்படியான ஆண்கள் ராணுவத்தில் வேலை பார்க்கும் சூழல்கள் உள்ளன. ராணுவத்தில் வேலை பார்ப்பதையே மிக கவுரவமாகவும், நாட்டுக்காக செய்யும் சேவையாகவும் நினைக்கும் தமிழகத்து மக்களெல்லாம் இருக்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க.. சரக்கு பாட்டில் ஓசியில் கிடைக்கும். டெய்லி குடிக்கலாம் என்கிற ஒரே காரணத்துக்காக ஹீரோ ராணுவத்தில் சேர முனைவதெல்லாம் கொஞ்சமும் நியாயம்தானா இயக்குநரே..?

“நான் பாகிஸ்தானிய பெண்ணை காதலிக்கவில்லை. நான் லவ் பண்ற பொண்ணு பாகிஸ்தான்..” என்று வார்த்தையை மாற்றிப் போட்டு பேசுவதால் இங்கே யாருக்கு என்ன ஆகப் போகிறது..? காதலை முன்னிறுத்தியும், நாட்டை பின்னிறுத்தியும் பேசப்படும்போதேஸ படத்தின் அத்தனை உழைப்பும் வீணாகப் போய்விட்டதை உணர முடிந்தது.

படத்தில் ஹீரோ பேசும் வசனங்களிலும், ராணுவத்தின் சேவைகளிலும் நம் மனதைத் தொடும் காட்சிகளும், இந்தியாவின் ஒருமைப்பாட்டை விளக்கும் தன்மையும் இல்லாமல் போக.. விக்ரம் பிரபுவின் அத்தனை உழைப்பும் வீணாகிவிட்டிருக்கிறது.

மனிதர் கடுமையாகவே உழைத்திருக்கிறார். பிரேம் பை பிரேம் இயக்குநரின் சிரத்தையான வேலையும், ஒளிப்பதிவாளரின் கடுமையான உழைப்பும் தெரிகிறது. விக்ரம் பிரபுவுக்கு பெயர் சொல்லும் படமாக இது இருந்தாலும் வெற்றி படமாக அமையாதது அவருடைய துரதிருஷ்டம்தான்..!

ஹீரோயின் ரன்யா ராய் அழகாக இருக்கிறார். அது ஒன்றே போதாது.. கடைசியில் விக்ரம் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியதும் மருகுகிறார்.. உருகுகிறார்.. வேறு மாப்பிள்ளையை மணந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். அவ்வளவுதான்..!

பாகிஸ்தானிய ராணுவ மேஜர்கள் தங்களுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சுபடி தங்களால் முடிந்த அளவுக்கு நடித்து கொடுத்திருக்கிறார்கள். கருணாஸ் சித்தப்பா கேரக்டரிலும், துளசி அம்மா கேரக்டரிலும் கொஞ்ச நேரமே ஆனாலும் கவர்கிறார்கள்.

ஒளிப்பதிவாளரும், படத் தொகுப்பாளரும் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பார்கள்போல் தெரிகிறது. இருவருக்கும் நமது பாராட்டுக்கள். காஷ்மீரின் அத்தனை அழகையும் காட்சிகளில் பதிவாக்கியிருக்கிறார்கள். ரன்யாவுடன் ஆற்றைக் கடக்கும் காட்சியை படமாக்கியிருக்கும்விதம் திக் திக்குதான்..!

டி.இமானின் இசையில் முதல் பாடலான ‘ஆணியே புடுங்க வேணாம்’ பாடலும், அதைப் படமாக்கியவிதமும் ரசிக்கும்படியிருந்தது. அதற்கடுத்த பாடல்கள் காட்சிப்படுத்துதல் நன்றாக இருந்தும் கேட்கத்தான் முடியவில்லை.

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்து விக்ரம் பிரபு தப்பிப்பதும், அதன் பின்னான சண்டை காட்சிகளும் காது சுற்றல். இத்தனை குண்டுகளையும் எங்கயோ பார்த்தே சுடும் அளவுக்கு திறமைசாலிகளாக பாகிஸ்தான் ராணுவத்தினர்..? லாஜிக் எல்லை மீறல்கள் அனைத்தும் எல்லை மீறி போயிருப்பது கிளைமாக்ஸ் காட்சியில்தான்..!

மனதை நெகிழச் செய்து, தேச பக்தியை ஊட்டி.. ராணுவத்தினரை பார்த்தவுடன் புன்சிரிப்பை உதிர்க்க வைத்திருக்க வேண்டிய இந்தப் படம். அது எதையும் செய்யாமல் போனதுதான் கொடூரம்..!

வாகா – ஆஹாவும் இல்லை.. ஓஹோவும் இல்லை..!

Our Score