full screen background image

வா வாத்தியார் – சினிமா விமர்சனம்

வா வாத்தியார் – சினிமா விமர்சனம்

நடிகர், நடிகைகள் :

கார்த்தி – ராமேஸ்வரன் (அ) ராமு ஃ வாத்தியார்

கிருத்தி ஷெட்டி – வூ​

ராஜ்கிரண் – பூமிப்பிச்சை

சத்யராஜ் – பெரியசாமி

ஆனந்தராஜ் – பாபு

ஜி. எம். சுந்தர் – மணி

கருணாகரன் – கோவிந்த ராமன்

ஷில்பா மஞ்சுநாத் – மாலினி

ரமேஷ் திலக் – ரமேஷ்

நிழல்கள் ரவி – முதல்வர்

யார் கண்ணன் – மதி சோழன்

நிவாஸ் ஆதிதன் – நிவாஸ்

பி. எல். தென்னப்பன் (ராமுவின் தந்தை) – ஜெய் கணேஷ்

வித்யா (ராமுவின் தாய்) – சுசிலா

தொழில் நுட்ப குழு விவரம் :

கதை – இயக்கம் : நலன் குமாரசாமி

ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஐ எஸ் சி

இசை : சந்தோஷ் நாராயணன்

கலை இயக்கம் : டி.ஆர்.கே.கிரண்

படத்தொகுப்பு :  வெற்றி கிருஷ்ணன்

சண்டை இயக்கம் : அனல் அரசு

ஒலி அமைப்பு : விஷ்ணு கோவிந்த்

பாடல் வரிகள் : விவேக், முத்தமிழ், கெலிதீ, துரை

நடன அமைப்பு : சாண்டி ஃ எம். ஷெரிப்

உடை வடிவமைப்பாளர்கள் : பூர்ணிமா ராமசாமி, ஏகன் ஏகம்பரம், பல்லவி சிங்

உடைகள் : எல்.தனபால்

மேக்கப் : பாரிவள்ளல்

சிறப்பு மேக்கப் : ரஞ்சித் அம்பாடி

வி எஃப் எக்ஸ் : ஆர். ஹரிஹர சுதன்

இயக்க குழு : அருண் நேஹ்ரு, எஸ். ஆண்டனி பாஸ்கர், சிவபிரகாஷ், பி. கவின் கார்த்திக், எம்.டி. இம்ரான், சரண் செல்வராஜ்

தயாரிப்பு கட்டுப்பாடு : எஸ். சிவகுமார்

தயாரிப்பு நிர்வாகிகள் : ஜி.காமராஜ் – எஸ்.ராஜ்கமல்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ஈ.வி.தினேஷ் குமார்

நிர்வாக தயாரிப்பாளர் : ஏ.ஜி.ராஜா

இணை தயாரிப்பாளர் : நேஹா ஞானவேல்ராஜா

தயாரிப்பு : கே.ஈ.ஞானவேல்ராஜா

பேனர் : ஸ்டுடியோ கிரீன்

பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ்

பூமி பிச்சை என்ற ராஜ்கிரண் பிச்சை. புரட்சி தலைவர், மக்கள் திலகம் பொன்மனச் செம்மல், இதயக்கனி எம்ஜிஆரின் அதி தீவிரமான ரசிகர். எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து உடல் நலம் பெற்று தாயகம் திரும்பி இருந்தாலும் தினமும் அவரைப் பற்றி சில வதந்திகள் எதிர்க்கட்சிகள் மூலமாக பரப்பப்பட்டு வந்தன.

அந்த செய்திகளின்படி எம்ஜிஆர் க்கு உடல்நிலை சரியில்லை. சீரியஸாக இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவ பூமி பிச்சை போன்ற அவரது ரசிகர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.

தன்னுடைய மானசீகத் தலைவனை பெரிய திரையில் பார்க்க விரும்பி குடியிருந்த கோயில் படத்தின் ரீலை தூக்கிக்கொண்டு அந்த ஊரில் இருக்கும் தியேட்டருக்கு வருகிறார் பூமி பிச்சை. தன்னுடன் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலரையும் அழைத்து வந்திருக்கிறார்.

“தலைவர் உடம்பு சரியில்லாம இருக்காருன்னு சொல்றாங்க..  இந்தப் படத்தை போடு மனசு சரியில்ல. நாங்கள் அவரது படத்தை பார்த்தாவது சந்தோஷப்பட்டு கொள்கிறோம்” என்கிறார் பூமி பிச்சை.

அந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தபொழுதே எம்.ஜி.ஆர். காலமான செய்தி பூமி பிச்சைக்கும், அவரைப் போன்ற ரசிகர்களுக்கும் தெரிகிறது.

உலகமே இடிந்து விழுந்ததுபோல திக்பிரமை பிடித்து என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்த பூமி பிச்சையிடம் அவருக்கு பேரன் பிறந்திருப்பதாக ஓடி வந்து சொல்கிறார்கள்.

மருத்துவமனைக்கு ஓடோடி வரும் பூமி பிச்சை தன்னுடைய பேரனை பார்க்கிறார். பேரனின் உள்ளங்காலில் மச்சம் இருப்பதை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர்.தான் தனக்கு பேரனாக பிறந்து இருக்கிறார் என்று உறுதிப்பட சொல்கிறார் பூமி பிச்சை.

இதனாலேயே தன் பேரனுக்கு ராமேஸ்வரன் என்று பெயர் வைத்து அழைக்கிறார். தன்னுடைய பேரன் எம்ஜிஆரை போலவே நல்லவனாகவும், வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணி நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லி அவரை வளர்த்திருக்கிறார்.

ஆனால் அந்த ரமேஷ்வரன் என்ற பேரனோ எம்.ஜி.ஆர்.-ஐ பின்பற்ற விரும்பாமல் நம்பியாரை பின்பற்றி வளர்ந்திருக்கிறான். இப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ராமேஸ்வரன் என்ற கார்த்தி எந்தெந்த வகையில் எல்லாம் லஞ்சம் வாங்க முடியுமோ காசு சேர்க்க முடியுமோ அதை எல்லாம் செய்து காவல்துறைக்கு ஒரு களங்கம் விளைவிக்கும் அதிகாரியாக இருக்கிறார்.

இந்த விவரங்கள் எல்லாம் அப்பாவியான தாத்தா பூமி பிச்சைக்கு தெரியாமல் போக அவர் தன்னுடைய பேரனை எம்ஜிஆரின் மறு உருவமாகவே நினைத்து பாசத்தை பொழிகிறார்.

இந்த நேரத்தில் லஞ்சம் வாங்கிய ஒரு குற்றச்சாட்டில் ராமேஸ்வரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் ஆளுங்கட்சிக்கும் முதலமைச்சர் இருக்கும் மிக நெருக்கமான தொழிலதிபரான சத்யராஜின் மகளான ஷில்பா மஞ்சுநாத் நள்ளிரவில் ஒரு விபத்தில் சிக்குகிறார்.

அவர் ஓட்டி வந்த கார் இன்னொருவரை சாகடித்துள்ளது. இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் தன்னுடைய போலீஸ் புத்தியை வைத்து முடித்துக் கொடுக்கிறார் ராமேஸ்வரன்.

இதனால் அகமகிழ்ந்து போன சத்யராஜ் கார்த்திக்கு “என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்” என்கிறார் அப்பொழுதே “தன்னுடைய சஸ்பெண்டை மட்டும் ரத்து செய்து அதே இடத்தில் இன்ஸ்பெக்டராக உட்கார வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கிறார் கார்த்தி. அதை உடனடியாக செய்து குடுக்கிறார் சத்யராஜ்.

இந்த நேரத்தில் சத்யராஜ் நடத்தி வரும் ஒரு கெமிக்கல் ஆலையினால் அந்த பகுதி மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்பதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களை எல்லாம் இணையதளம் சமூக வலைத்தளங்கள் மூலமாக மஞ்சள் முகம் என்ற ஒரு அமைப்பு திரட்டி ஒருங்கிணைத்து வருகிறது.

இந்த மஞ்சள் முகம் அமைப்பினர் அனைவரையும் கைது செய்ய வேண்டும் அல்லது சுட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளோடு சத்யராஜ் கார்த்திக்கு அந்த அசைன்மென்ட்டை கொடுக்க கார்த்திக்கும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களைப் பிடித்து வைக்கிறார்.

அவர்களைப் போலியான என்கவுண்டரில் சுட்டு தள்ளும்படி சத்யராஜ் சொல்ல அந்த சமயத்தில் திடீரென்று ராமேஸ்வரன் என்ற கார்த்தி குழம்பிப் போகிறார். அவருடைய மனம் பேதலித்து இருக்கிறது. அப்பாவிகளை ஏன் கொலை செய்ய வேண்டும் என்ற கேள்வி அவருக்குள் எழுகிறது. இப்பொழுது அவருக்குள் தூங்கிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரின். ஆவி கார்த்தியின் உடலை கைப்பற்றிக் கொள்ள இதற்குப் பின்பு கார்த்தியின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

அது என்ன? கார்த்தி எம்ஜிஆர் ஆக மாறினாரா? நல்லது செய்தாரா? மஞ்சள் முகம் குழுவினர் என்ன ஆனார்கள்?.. அந்த கெமிக்கல் ஆலை என்னவானது? என்பதுதான் இந்த ‘வா வாத்தியார்’ என்ற படத்தின் கதைச் சுருக்கம்.

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து இன்னமும் பல தலைமுறைகளிலும் பேசப்படும்.. சொல்லப்படும்.. எழுதப்படும்.. திரை உலகத்திலும் இப்போதைய வயதானவர்களில் பலரும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்தான். இப்படி ஒரு கதாபாத்திரம் மற்ற நடிகர்களுக்கு கிடைக்காமல் கார்த்திக்கிற்கு கிடைத்தது மிகப் பெரிய நல்ல விஷயம்தான்.

ரஜினியைப் போலவே கார்த்திக்கிற்கும் வில்லன் கதாபாத்திரம் மிக அழகாக பொருந்துகிறது. எம்ஜிஆராக இல்லாமல் நம்பியாராக இருக்கிறேன் என்பதை ஒரு ஷாட் மூலமாக நமக்கு தெரிவித்துவிட்டு அவர் நம்பியாராக மாறி செய்யும் பல வேலைகளும் ரசிக்க வைக்கின்றன.

எம்ஜிஆர்-ஆக இருந்து அடுத்த நொடியே நம்பியராக மாறியும் மாறி மாறி அவர் தன்னுடைய உடல் மொழி மூலமாக எம்ஜிஆரை காட்டுகின்ற அந்தக் காட்சிகளில் எல்லாம் அவருடைய நடிப்பு அழகோ அழகு. எந்த ஒரு குறையும் இல்லாமல் தன்னுடைய நடிப்பை காண்பித்து இருக்கிறார் கார்த்தி.

இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் கிருத்தி ஷெட்டி ஆவிகளுடன் பேசக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிகப் பெரிய அளவுக்கான நடிப்பு தேவை திரைக்கதையில் இல்லை என்பதால் இவரும் பாடல் காட்சிகளுக்கு கவர்ச்சியை காட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார்.

எம்ஜிஆரின் அதிதீவிர ரசிகன் பூமி பிச்சை என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரன் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய பேரன் தான் நினைப்பது போல எம்.ஜி.ஆராக இல்லை நம்பியார் ஆக இருக்கிறான் என்பது தெரிந்தவுடன் அவர் காட்டுகின்ற நடிப்பும் பரிதாபமான அவரது முகமும் நமக்குக்குள்ளும் ஒரு சோகத்தை தருகிறது.

கொடூரமான வில்லனாக நடித்திருக்கும் சத்யராஜும் மீண்டும் திரையில் வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார். இன்னமும் கூடுதலாகவே கொடுத்திருக்கலாம்.

வசனமே பேசாமல் படம் முழுவதும் எம்.ஜி.ஆர். பாணியிலேயே உடைகளை அணிந்து கொண்டு அவ்வப்பொழுது குதிரையில் வந்து ஃபிலிம் காட்டும் ஆனந்தராஜ் ரசிக்க வைத்திருக்கிறார்.

சத்யராஜ் மகளாக நடித்திருக்கும் செல்வம் மஞ்சுநாத் அதிகமான காட்சிகளும் இல்லை.. வசனங்களும் இல்லை… என்றாலும் கவனயீர்ப்பை செய்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் சத்யராஜின் அடியாளாக ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், முதலமைச்சரான நிழல்கள் ரவி, முதலமைச்சரின் தொண்டராக யார் கண்ணன், கார்த்தியின் அப்பாவாக பி.எல்.தேனப்பன், அம்மாவான வித்யா என்று படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் தன்னுடைய கேமராவின் மூலமாக கதை மாந்தர்களையும், அவர்கள் இருக்கின்ற இடங்களின் அமைப்பையும் படப்பதிவு செய்ததோடு இல்லாமல் கார்த்தி எம்ஜிஆராக பேசும்போதும் நம்பியாராக உடனடியாக மாறி பேசும் போதும் எந்த குழப்பமும் இல்லாமல் நமக்கு தெரிகின்ற வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் எம்ஜிஆரின் பாடல்களையே ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். ரொம்ப கொடுமையாக இருக்கிறது. அப்படி செய்யாமல் முழு பாடலையும் ஒலிக்க விட்டிருக்கலாம். அல்லது இவரே புதிதாக இசையமைத்திருக்கலாம். இரண்டும் இல்லாமல் எம்.ஜி.ஆரின் பாடலை சுருதி குறைந்து, தரம் குறைந்து கேட்கும்போது நமக்கே மனசு ஒரு மாதிரியாக இருக்கிறது. பின்னணி இசையில் பரவாயில்லாமல் செய்திருக்கிறார்.

கலை இயக்குனர் கிரண் அழகழகான செட்டுகளை போட்டு அசத்தியிருக்கிறார். படத் தொகுப்பாளரான வெற்றி கிருஷ்ணன் கொண்டு வந்து குவித்தவைகளையெல்லாம் ஓரளவுக்கு நாம் பார்க்கும் வகையில் மாற்றிக் கொடுத்திருக்கிறார். அதிலும் நம்பியாராகவும், எம்ஜிஆராகவும் மாறி மாறி கார்த்தி நடிக்கும்போது அந்தக் காட்சிகளை எல்லாம் மிகுந்த கவனத்துடன் எடிட் செய்து கொடுத்திருக்கிறார்.

எம்ஜிஆரை புகழ்ந்து பேசவும் அல்லது அவரது தனிப்பட்ட குணங்களை பாராட்டி பேசுவது அனைவருக்கும் பிடித்ததுதான். ஆனால் அதை ஒரு கோர்வையான அழகான திரைக்கதையில் கொடுத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

இப்போதும் எம்ஜிஆரை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கும் இந்த புதிய தலைமுறையினர் இந்த படத்தை பார்த்து.. யார் அந்த எம்ஜிஆர்? என்று ஒரு கேள்வியையாவது எழுப்புவார்கள். அந்த வகையில் இந்தப் படத்தின் கதைக்காக இயக்குநர் நலன் குமாரசாமியை வெகுவாக பாராட்டுகிறோம்.

எம்ஜிஆர் என்ற மனிதர் தனிப்பட்ட மனிதர் அல்ல. ஒரு வழிகாட்டி. திரைத்துறையில் இருப்பவர்களுக்கும், சாதாரண பொது ஜனங்களுக்கும் அவர் ஒரு தெய்வமாகவே இப்போதும் இருக்கிறார். இந்த விஷயங்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் சுவையான திரைக்கதையுடன் இணைத்து கொடுத்திருக்கலாம்.

எம்ஜிஆரை போல மாறுவது.. அடிக்கடி குதிரையில் வருவது.. இன்றைய அரசியலை படம் பிடித்து காட்டி இருப்பது.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தை இதில் பயன்படுத்தி இருப்பது… இப்படி சில விஷயங்களினால் இந்தப் படத்தை ஒரு முறை நிச்சயமாக பார்க்கலாம்தான்.

RATING : 3 / 5

Our Score